Adi Varaha Temple
Adi Varaha Temple 
ஆன்மிகம்

குபேரர் பிரதிஷ்டை செய்த வராகர் எங்கிருக்கிறார் தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கல்லிடைக்குறிச்சி என்னும் சிற்றூர். ஆதிவராக பெருமாள் கோவில் இங்குதான் அமைந்துள்ளது. குபேரன் ஆதி வராகமூர்த்தியை இந்த தலத்தில் பிரதிஷ்டை செய்து பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. குபேரன் வராக மூர்த்தியை பிரதிஷ்டை செய்தபோது யாக பாத்திரங்கள் கல்லாய் மாறின. அதனால் இவ்வூர் சிலாசாலிகுரிசி எனப்பட்டது. அதுவே பின்னர் மருவி கல்லிடைக்குறிச்சி என்றானது. கருவறையில் மூலவர் ஆதிவராகர் பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில், இடது மடியில் பூமாதேவியை தாங்கிய நிலையில் தரிசனமளிப்பது இந்த தலத்தின் தனி சிறப்பாகும்.

இவரது மடியில் அமர்ந்திருக்கும் பூமாதேவி பெருமாளின் திருமுகத்தை பார்த்தபடி இருக்கிறார். இந்த தல பெருமாளுக்கு தாமிரபரணி தீர்த்ததால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுவது சிறப்பு. இதற்காக தினமும் காலையில் சுவாமிக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் மேளதாளம் முழங்க தாமிரபரணி நதிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருகிறார்.

உற்சவர் லட்சுமிபதி என்னும் திருநாமத்துடன் தாயார் பூமாதேவியுடன் காட்சி தருகிறார். பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் பெருமாள் சன்னதிக்கு இருபுறமும் தாயார் ஆண்டாள் சன்னதிகள் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி தனித்தனி சன்னதியில் இரண்டு பக்கமும் எழுந்தருளி இருப்பது இந்த தலத்தின் தனி சிறப்பாகும் .

பெருமாள் எப்போதும் தாயாருடன் சேர்ந்து காட்சி தருவதால் அவருக்கு நித்திய கல்யாண பெருமாள் என்ற பெயரும் உண்டு. திருமண வரம் வேண்டுவோருக்கு தட்டாமல் அவ்வரத்தை அருள்வதால் இத்தலம் கல்யாணபுரி என்று அழைக்கப்படுகிறது.

நிலம் சம்பந்தமான பிரச்சினைகள் தீரவும் கடன்கள் தீர்ந்து செல்வ வளம் பெருகவும் பக்தர்கள் இத்தலத்து ஆதிவராக பெருமாளை வழிபடுகின்றனர். பக்தர்கள் தம் பிரார்த்தனை நிறைவேறினால் பெருமாளை கருட வாகனத்தில் எழுந்தருளசெய்வதாக வேண்டிக் கொள்கிறார்கள். அதனால் இந்த தலத்தில் பெருமாளின் கருட சேவையை அடிக்கடி தரிசிக்க முடியும்.

சுவாமி சன்னதி விமானத்தில் சயனப் பெருமாள் சன்னதி இருக்கிறது. இவருக்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி நாபியில் பிரம்மா அருகில் மார்க்கண்டேய மகரிஷிகளும் இருக்கின்றனர். தினமும் காலையில் ஆதிவராகருக்கு திருமஞ்சனம் செய்த பின்பு ஒருவேளை மட்டுமே இவருக்கு பூஜை செய்கின்றனர். அவ்வேளையில் மட்டும் இவரை தரிசிக்க முடியும். கோவில் மேல்புற சுவரில் மூலகருடாழ்வார் இருக்கிறார். ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷத் திருமஞ்சனம் செய்து பூக்களால் ஆன ஆடை அணிவித்து விசேஷ பூஜை செய்கிறார்கள்.

பிரகாரத்தில் மடியில் லட்சுமியுடன் லட்சுமி நாராயணர் விஷ்வனேஷ்வர் ஆழ்வார்கள் சன்னதியில் இருக்கிறது. பெருமாளின் தசாவதாரம் வடிவங்கள் சுவாமி சன்னதிக்கு பின்புறம் சிலாரூபமாக இருக்கிறது. பீட வடிவில் யானை குதிரை வாகனங்களுடன் சாஸ்தா இருக்கிறார். சுவாமிக்கு சர்க்கரை பொங்கல் படைத்து விசேஷத் திருமஞ்சனம் செய்தும் சுவாமியை கருட வாகனத்தில் எழுந்தருளச்செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

SCROLL FOR NEXT