கோகுலாஷ்டமி என்றழைக்கப்படும் கண்ணபிரானின் பிறந்த நாளை இந்த வையகமே கொண்டாடி மகிழ்கிறது. ‘கண்ணா, கிருஷ்ணா, கோவிந்தா, கோபாலா, தாமோதரா’ என்று அப்பெருமாளை அழைக்கும்போதெல்லாம் நம் உள்ளுக்குள் தானாகவே கிருஷ்ண ஸ்மரணையும், ஆனந்தமும் வந்து அமர்ந்து விடும். தன்னுடைய அவதாரத்தில் அந்த பரந்தாமன் செய்துகாட்டிய லீலைகள் கணக்கிலடங்கா. ‘எனது தெய்வீக அவதாரத்தையும், செயல்களையும் உள்ளபடி அறிகிறவன் உடலை விட்டபின் மீண்டும் பிறக்க மாட்டான். அவன் என்னையே அடைகிறான்’ ஸ்ரீமத் பகவத் கீதை 4:9. ‘ஸ்ரீ கிருஷ்ண பகவான் தம்முடைய எந்தச் செயல்களை நினைப்பதால் துன்பமும், துக்கமும் அறியாமையும் நீங்கி உயிரினங்கள் புனிதம் அடையுமோ, அவ்விதமான செயல்களைப்புரிவதற்காக அவதரித்தார்’ என்றே ஸ்ரீமத் பாகவதம் 9:24 - 61 கொண்டாடுகிறது.
கிருஷ்ண பரமாத்மாவின் திருமேனியை அலங்கரிக்கும் முக்கியமான அடையாளம் அவன் என்றுமே ஆசையாய் சூட்டிக்கொள்ளும் வைஜெயந்தி மாலைதான். தாமரை, துளசி, பாரிஜாதம், மந்தார பூ, முல்லை பூ என்று ஐந்து விதமான பூக்கள் அழகாய் சேர்ந்து மாலையாய் மாலவனின் திருக்கழுத்தை அலங்கரிக்கும் அழகே அழகுதான். அந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கு மிகவும் பிடித்தமானது பூ மாலைகளும் பாமாலைகளும்தான். பாமாலைகளை அவன் மீது தொடுத்து, அப்பரந்தாமனின் பிரியத்திற்கு ஆளானவர்கள்தான் ஆழ்வார்கள். அத்திருமாலையே தம் திருப்பாவையால் சேர்ந்தவள்தானே ஆண்டாள்?
மதுராவில் கண்ணனுக்காகவே அழகழகாய் மாலைகள் கட்டி அழகு பார்த்த மாலாகாரரின் மாலைகளைப் பற்றிய பக்தி, கண்ணனின் சரிதத்தில் கூடுதல் மணம் சேர்க்கும். மதுராவில் எங்குமே எப்போதுமே எல்லோராலுமே பேசப்பெற்றது கண்ணணின் லீலைகள்தான். அந்தக் கண்ணன் இப்படிச் செய்தான், அப்படிச் செய்தான் என்று கோபிகைகள் சதாசர்வ காலமும் கிருஷ்ணனை பற்றிப் பேசிய விஷயங்கள் எல்லாம் தானாகவே மாலாகாரரின் காதுகளில் விழ ஆரம்பித்தது. இப்படி எல்லாம் செய்வானா கண்ணன்? இப்படி எல்லாம் செய்தானா கண்ணன் என்று கண்ணனின் செயல்களை நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டு, அவனை நினைத்தே உருகி உருகி தான் கட்டும் ஒவ்வொரு மாலையையும் கண்ணனுக்காகவே அர்ப்பணம் செய்து, என்றாவது ஒரு நாள் அந்த கிருஷ்ண பரமாத்மாவை நேரில் பார்க்க வேண்டும், தன் கைகளால் அழகான மாலை ஒன்றைக் கட்டி அந்த மாலவனுக்கு சாற்ற வேண்டும் என்ற ஆசை மாலாகாரரின் மனதில் அழுத்தமாக பதிந்து விட்டது.
தான் கட்டும் ஒவ்வொரும் மாலையையும் ரசித்து ரசித்து கட்டி, தம் மனம் முழுக்க கிருஷ்ண ஸ்மரணத்தை மட்டுமே நிரப்பி கொண்டு கிருஷ்ணா கிருஷ்ணா என்று அவனின் திருநாமத்தை மட்டுமே சொல்லி கொண்டு மாலைகளைக் கட்டியதாலோ என்னவோ மாலாகாரர் கட்டும் அத்தனை மாலைகளிலுமே கிருஷ்ண மணம் என்பது கூடுதலாகவே வீசும். ஒரு நாள் கண்ணன் தன்னை தானாகவே அமர்க்களமாக அலங்கரித்துக் கொண்டு தான் ஒரு மாலையை சாற்றிக்கொண்டால் இன்னும் அழகாக இருக்குமே என்று நினைத்து கொண்டு மாலாகாரரின் வீட்டு வாசலுக்கு தனக்கு ஏற்ற ஒரு மாலையை வாங்க வந்தே விட்டார்.
வந்தவர் மாலாகாரரின் இயற்பெயரான சுதாமா என்ற பெயரை சொல்லி, “சுதாமா, சுதாமா” என்று அன்பொழுக அழைத்தார். அந்தக் குரலில் இருந்த அந்த குழல் போன்ற இனிமையை கேட்டதுமே வந்திருப்பது கிருஷ்ண பரமாத்மாவாக இருக்குமோ என்று எண்ணியபடியே மாலாகாரர் தம் வீட்டு வாசல் கதவைத் திறந்து பார்க்க, அங்கே கிருஷ்ணனும் பலராமனுமாக ஆவலோடு நின்றிருக்கும் காட்சியை மெய்சிலிர்க்க பார்த்தார் மாலாகாரர். ”கிருஷ்ணா, என் மனக்கண்களில் வந்து தினம் தரிசனம் கொடுத்த பரமாத்மா நீயா? என் மனதில் உட்கார்ந்து கொண்டு தினம் நான் தொடுத்த மாலைகளை சூட்டிக்கொண்டு அழகு பார்த்தவன் நீயா?” என்று தம் கண்களில் சுரந்த ஆனந்தக் கண்ணீரையை ஆரத்தியாக்கி கிருஷ்ணனை வரவேற்றார் மாலாகாரர்.
அவரது வீடு முழுக்க நிரம்பி இருந்த மாலைகளின் வாசம் மாதவனை மயக்கியது. கண்ணனின் கண்களின் அருளுக்கு பாத்திரமான அத்தனை மாலைகளையும் எடுத்து தனது ஆசை தீர கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் சூட்டி தமது பல நாள் ஆசையை, கனவை தீர்த்துக் கொண்டார் மாலாகாரர். தான் வியாபாரத்திற்காக வைத்திருந்த அத்தனை மாலைகளையும் தனக்கே அர்ப்பணம் செய்துவிட்ட அந்த மாலாகாரரின் தூய்மையான பக்தியில் மகிழ்ந்துபோன கிருஷ்ண பரமாத்மா, “உமக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்” என்று கேட்க, அதற்கு மாலாகாரரோ, “நான் கேட்பதற்கு முன்பே நீ அத்தனை வரங்களையும் எனக்குத் தந்து விட்டாயே கண்ணா. இதோ என் வீடு தேடி வந்து எனக்கு தரிசனம் கொடுத்திருக்கிறாய். நான் கட்டி வைத்த மாலைகளை ஆசை தீர சூட்டிக்கொண்டு நிற்கிறாய். இதை விட வேறு என்ன வரம் வேண்டும் எனக்கு?” என்று கூற, அதற்கு பெருமாளோ, “உமக்கு இக பர சுகம் அளித்து, உனக்கும் உன் வம்சத்தாருக்கும் மோட்சம் தந்தேன்” என்று கூறி அனுக்கிரஹித்தான்.
பக்தி எனும் மாலைக்குக் கட்டுப்படுபவன் அல்லவா அந்த பரந்தாமன்? நாமும் அவனை அந்த பக்தி மாலையாலேயே கட்டுண்டுக் கிடப்போம்.