Kooduvittu Koodu Paaintha Thirumoolar 
ஆன்மிகம்

கூடுவிட்டு கூடு பாய்ந்த திருமூலர்!

செசு. மணிசெல்வி

திருமூலர் அல்லது திருமூல நாயனார், சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் கி.மு. 5000 வருடங்களுக்கு முந்தையது. இவர் எழுதிய திருமந்திரம் உலகில் ஒப்பற்ற இலக்கியமாகத் திகழ்கிறது. இது 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.

திருக்கயிலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு மிகப் பெரும் காவலாகிய நந்தி தேவரின் திருவருள்பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண் வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) சிறப்பாகப் பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அகத்திய முனிவரிடத்தில் கொண்ட நட்பினால் அவரோடு சில காலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடையும் பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாத் கோயில், காசி, விந்திய மலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைச் சென்று வணங்கினார். காஞ்சி நகர் சென்று திருவேகம்பப் பெருமானை வணங்கிப் போற்றி, அந்நகரிலுள்ள தவமுனிவர்களுடன் கலந்து இறைநெறியில் திகழ்ந்தார். பின்னர் திருவதிகை சென்று சேர்ந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டார். இறைவன் அற்புதத் திருக்கூத்தாடிய திருவம்பலத்தினைக் கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூரை அடைந்தார். அங்கு தங்கியிருந்து இறைவனை வழிபட்டார்.

அங்கிருந்து அருள்புரியும் திருவாவடுதுறையை அடைந்தார். திருக்கோயிலை வலம் வந்து பசுபதியாகிய இறைவனை வழிபட்டு, அத்திருப்பதியினை விட்டு நீங்க மனமின்றி அங்கேயே தங்கியிருந்தார்.

அங்கே ஒரு காட்டில் பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே தொன்றுதொட்டு பசுக்களை மேய்க்கும் குடியில் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் பாம்பு தீண்டி இறந்தமையால் அதனைத் தாங்காத பசுக்கள் உயிர் நீங்கிய அவனது உடம்பினைச் சுற்றிச் வந்து மோப்பதுவும் கதறுவதுமாக இருந்தன.

இதனைக் கண்ட தவ முனிவர், 'இந்த இடையன் உயிர் பெற்று எழுந்தால் மட்டுமே இப்பசுக்கள் துயர் நீங்கும்' என எண்ணினார். தம்முடைய உடலைப் பாதுகாவலான இடத்தில் மறைத்து வைத்து விட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் வழியினாலே தமது உயிரை அந்த இடையனின் உடம்பில் புகுமாறு செய்தார். மாலைப்பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைத்துத் தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைந்தன. பசுக்கள் செல்லும் வழியில் தொடர்ந்து பின் சென்றார் சிவயோகியார். மூலனின் மனைவி தனது கணவனை அணுக முயன்றபோது தவ முனிவர் அதனைத் தடுத்தார்.

'உமது அன்புடைய மனைவியாகிய என்னை வெறுத்து நீங்குவது ஏன்? இதனால் எனக்கு பெருந்துன்பத்தைச் செய்து விட்டீர்' என்று கூறிப் புலம்பி வாட்டமுற்றாள். இதனை மறுத்து தனது நிலையினை கூறினார் தவ முனிவர். சாத்தனூரில் பொதுமடத்தில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலர், யோகம் கலைந்து எழுந்து முதல் நாளிலே பசுக்கள் வந்த வழியே சென்று தம் உடம்பினை பத்திரமாக வைத்த இடத்திற்குச் சென்று பார்த்தார். அங்கு அதனைக் காணவில்லை. இதனால் அதிர்ந்த தவமுனிவர் மூலனின் உடலிலேயே தாங்கினார். இதனால் திருமூலர் என்னும் பெயரினைப் பெற்றார். திருமந்திரம் என்னும் அரும்பெரும் நூலினையும் படைத்தார்.

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

SCROLL FOR NEXT