ஆன்மிகம்

திருஷ்டி பிரச்னைகளுக்கு தீர்வு தரும் எலுமிச்சை தீப வழிபாடு!

எம்.கோதண்டபாணி

லுமிச்சம் பழத்துக்கு தீய சக்திகளை விரட்டும் சக்தி உண்டு என்பது ஐதீகம். அதனால்தான் சில வீடுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சம் பழத்தை திருஷ்டி சுற்றிப் போடுவது வழக்கத்தில் உள்ளது. ராகுகால பூஜையில் எலுமிச்சை விளக்கேற்றுவது பற்றி புராணங்களில் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், காலம் காலமாக இந்த வழக்கம் இருந்து வருகிறது. தீய சக்திகளின் கெடுபலன்கள் நீங்க ராகுகால துர்கை பூஜையை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்வது அவசியம். அப்போது எலுமிச்சம் பழத்தை சரிபாதியாக நறுக்கி பிழிந்துவிட்டு அதன் மூடியைத் திருப்பி, அதில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி அம்மன் முன் வைத்து பக்தர்கள் வணங்குவர்.

ஸ்ரீ துர்கை வழிபாட்டில் மிகவும் முக்கியமானது எலுமிச்சை தீப வழிபாடு. ராகுகால நேரம் தொடங்கிய பிறகே எலுமிச்சம் பழத்தை நறுக்க வேண்டும். அதற்கு முன்பே நறுக்கி வைத்தல் கூடாது. எலுமிச்சை தேவ கனி என்பதால், அதனை நறுக்கும்போது தோஷங்கள் ஏற்படும். எனவே, பழத்தை நறுக்கும்போது, ‘ஐம்’ என்ற சரஸ்வதியின் பீஜ மந்திரத்தைச் சொல்ல வேண்டும். பழத்தின் சாறை பிழிந்து விட்டு, மூடியை வெளிப்பக்கமாகத் திருப்பும்போது மகாலட்சுமிக்கு உரிய, ‘க்ரீம்’ என்ற மந்திரத்தை உச்சரிப்பது அவசியம். தூய்மையான புதிய பஞ்சு திரியை எலுமிச்சை மூடியில் போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றும்போது, ‘க்லீம்’ என்ற தேவியின் மந்திரத்தைக் கூற வேண்டும். எலுமிச்சை விளக்கை ஏற்றும்போது, ‘சாமுண்டாயை விச்சே’ என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். இந்தச் சொல்லுக்கு, ‘முப்பெரும் தேவியரான அம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் அருளை ஒருசேரத் தரும் சண்டிகா தேவியே அருள்க’ என்று பொருள்.

இந்த தீபத்தை அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாகத்தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கியவாறு இருக்க வேண்டும். பூஜையின்போது, அம்மனுக்கு மல்லிகைப் பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே சாத்த வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் அம்பிகையின் பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னர் மூன்று சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் இருபது நிமிடங்கள் அங்கே அமர்ந்திருக்க வேண்டும். அப்பொழுது, துர்கை மந்திரங்கள் மற்றும் பாடல்கள் உச்சரித்தவாறு இருப்பது சிறப்பு. அடுத்ததாக, உடனே கோயிலை விட்டு வெளியேறி விட வேண்டும். இது ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை என்பதால் நவக்கிரகம் சுற்றுவது கூடாது.

வீடு திரும்பி பூஜை அறையில் ஒரு நெய் தீபம் ஏற்றி, ஊதுபத்திகள் ஏற்றி கற்பூர ஆராதனை செய்ய வேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும் வரை வெளியில் செல்லக்கூடாது. இவ்வாறு ஒன்பது வாரங்கள் செய்வதால் வேண்டிய பலன் கிட்டும். வீட்டில் எலுமிச்சை விளக்கேற்றி வழிபடக் கூடாது.

எலுமிச்சைக்கு மிகப்பெரிய சக்தி இருப்பதால்தான் அது அம்பிகையின் திரிசூலத்தில் ஒரு அங்கமாக விளங்குகிறது. தீய சக்திகள் வீட்டில் நுழையாமல் தடுக்க, எலுமிச்சையை இரண்டாக நறுக்கி, அதை குங்குமத்தில் ஒத்தி வாசற் கதவின் இருபுறமும் வைப்பது வழக்கம். அதேபோல் கண் திருஷ்டி விலக எலுமிச்சை பழத்தை சுற்றிப்போடுவதும் வழக்கம். எலுமிச்சையால் துர்கா தேவிக்கு ராகுகாலத்தில் தீபம் ஏற்றும்போது பல பிரச்னைகள் தீர்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 - 6.00 மணி வரை உள்ள ராகுகாலத்தில் அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் தீராத நோய்கள் தீரும். செவ்வாய்க்கிழமை மாலை 3.00 - 4.30 மணி வரை உள்ள ராகுகாலத்தில் அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் தீரும். வெள்ளிக்கிழமை காலை 10.30 - 12.00 மணி வரை உள்ள ராகுகாலத்தில் இரண்டு எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை மனமுருகி வேண்டினால் சந்தோஷமாக வாழ வழி பிறக்கும்.

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

SCROLL FOR NEXT