பெரிய திருவடி என அழைக்கப்படும் கருடாழ்வார் காசியப முனிவருக்கும் வினதைக்கும் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். இவருடன் பிறந்த அருணன் சூரிய பகவானின் தேரோட்டியாகத் திகழ்ந்தவர். காசியப முனிவருக்கு கத்ரு தேவி என்றொரு மனைவியும் உண்டு.
சகோதரிகளான வினதையும் கத்ரு தேவியும் ஒரு சமயம் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது வெளிப்பட்ட உச்சைசிரவஸ் என்ற வெள்ளைக்குதிரையில் இந்திரன் பவனி வந்ததைக் கண்டனர். அப்போது வெள்ளைக்குதிரையின் அழகை வினதா புகழ, அதனால் வெறுப்படைந்த கத்ரு, ‘அது முழுமையான வெள்ளைக்குதிரை இல்லை. அதன் வால் கறுப்பு’ என்று மொழிந்தாள். இறுதியில் கத்ரு, வினதாவிடம் ‘யார் விடையானது தவறோ அவர் மற்றவருக்குக் காலம் முழுவதும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்’ என்ற நிபந்தனை விதித்தாள். மறுநாள் அந்தக் குதிரையின் வால் நிறத்தை உறுதி செய்து யார் வெற்றி பெற்றவர் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தனர்.
கத்ருவிற்கு ஆயிரம் பாம்புகள் குழந்தைகளாக இருந்தனர். அன்றிரவு கத்ரு தனது பாம்புக் குழந்தைகளிடம், ‘தாங்கள் உச்சைசிரவஸ் குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டு கறுப்பு நிறம் போல் தோற்றமளித்து என்னை வெற்றி பெற வைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ள, பாம்புக்குழந்தைகள் இதற்கு மறுத்தனர். ஆனால், அவர்களில் ஒருவனான கார்கோடகன் மட்டும் அதற்கு சம்மதித்தான். தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்ற வெள்ளைக்குதிரையின் வாலில் சுற்றிக்கொண்டு வாலைக் கறுப்பு நிறமாகத் தோன்றும்படி செய்தான். இதைக் கண்டு வினதையும் ஏமாந்து, தனது தோல்வியை ஒப்புக்கொண்டு கத்ருவிற்கு அடிமையாகிறாள்.
தனது தாயின் நிலை கண்டு வருந்திய கருடன், கத்ருவிடம் தனது தாயை விடுவிக்குமாறு வேண்ட, அவளோ ‘தேவலோகத்தில் இருக்கும் அமிர்த கலசத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் வினதையை விடுவிப்பதாகக் கூறுகிறாள். கருடன் உடனே தேவலோகம் சென்று அமிர்த கலசத்தை எடுத்து வர முனைகிறார். அப்போது இந்திரனுடன் சண்டை நடக்கிறது. இந்திரன் தனது வஜ்ராயுதத்தை ஏவ அது கருடனை ஒன்றும் செய்யவில்லை. இறுதியில் கருடன் அமிர்த கலசத்துடன் புறப்பட்டார்.
கொடிய பாம்புகள் அமிர்தத்தை அருந்தினால் அது எல்லோருக்கும் விபரீதத்தை ஏற்படுத்திவிடும் என்பதை உணர்ந்து இந்திரன் உள்ளிட்டோர் மகாவிஷ்ணுவைச் சந்தித்து நிலைமையை விளக்கி காத்தருளுமாரு வேண்டிக் கொண்டனர். மகாவிஷ்ணுவோ கருடன் மீது போர் தொடுக்க அந்தப் போர் 21 நாட்கள் நடைபெற்றது. கருடனின் மன உறுதியையும் அவர் தனது தாயின் மீது வைத்துள்ள பாசத்தைக் கருத்தில் கொண்டு மகாவிஷ்ணு அமிர்த கலசத்தைக் கொண்டு செல்ல அனுமதிக்கிறார்.
‘என்னுடன் போர் செய்து அமிர்த கலசத்தைப் பெற்ற உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேட்டுப் பெற்றுக்கொள்’ என்று மகாவிஷ்ணு கூற, கருடன் அகந்தையின் காரணமாக ‘தங்களுக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து தாங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்கிறார். மகாவிஷ்ணுவும், ‘நீ எனக்கு வாகனமாக அமைவாயாக’ என்று கேட்க, கருடனும் ‘சரி’ என்கிறார்.
பின்னர் தனது தவறை உணர்ந்த கருடன், மகாவிஷ்ணுவிடம் நடந்து கொண்ட முறைக்காக மனம் வருந்தினார். மகாவிஷ்ணுவிடம், ‘எனது தாயை மீட்டுவிட்டு தங்களுக்கு வாகனமாகிறேன்’ என்று கூறி, புறப்பட்டு தேவலோகத்திலிருந்து கொண்டு வந்த அமிர்த கலசத்தை ஒரு புல் தரையில் வைத்தார். கத்ருவிடம், ‘ஸ்நானம் செய்த பிறகே அமிர்தத்தை பருக வேண்டுமென்றும் அதற்கு முன்னர் தனது தாயை விடுவிக்க வேண்டும்’ என்று கருடன் கேட்டுக்கொள்ள அதன்படி வினதையும் விடுதலை ஆனாள். கத்ருவோடு பாம்புகளும் ஸ்நானம் செய்யச் சென்றன. அந்நேரம் இந்திரன் வந்து அமிர்த கலசத்தை எடுத்துச் சென்றுவிட்டார். அமிர்த கலசத்தை காணாத பாம்புகள் ஏமாற்றத்தில் திகைத்தன.
கருடன் மகாவிஷ்ணுவிற்கு வாகனமானார். அப்போது கருடனிடம், ‘வெற்றிக்கு அறிகுறியாக இனி நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்றொரு வரத்தை அளித்தார். கருடன் பெருமாளின் கொடியாக விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடிமரமானது, ‘கருட ஸ்தம்பம்’ என்றும் அழைக்கப்படுகிறது.