Prathyangira Devi Temple where Pancha Pandava was worshipped
Prathyangira Devi Temple where Pancha Pandava was worshipped https://jothidaveenai.com
ஆன்மிகம்

பஞ்ச பாண்டவர் வழிபட்ட பிரத்யங்கிரா தேவி ஆலயம்!

சேலம் சுபா

ழந்த செல்வத்தை மீட்டுத் தரும் தெய்வம் ஒன்று உண்டென்றால் அது மகாபிரத்யங்கிரா தேவியே. கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் அருகில் அய்யாவாடியில் அமைந்துள்ளது மகாபிரத்யங்கிரா தேவி ஆலயம்.

அஞ்ஞாத வாச காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் தாங்கள் இழந்த ராஜ்யத்தை மீட்க பிரத்யங்கிரா தேவி வழிபாடு மேற்கொள்ள இங்கு வந்து சுயம்புருவாக தரிசனம் தந்த தேவியைக் கண்டு மனமுருகினர். அது சித்திரை மாதம் என்பதால் எங்கும் பூக்களின்றிப்போக, பூஜை செய்ய அருகிலிருந்த ஆலமரத்தின் ஐந்து விதமான இலைகளை மலர்களாக பாவித்து பூஜித்து வழிபட்டுள்ளனர். நெடுங்காலம் இந்த பூஜையை ஆத்மார்த்தமாக அவர்கள் மேற்கொண்டதன் பலனாக, பாண்டவர்கள், கௌரவர்களை வென்று இழந்த புகழையும் செல்வத்தையும் தேசத்தையும் மீட்டார்கள் என்பது வரலாறு.

இதனால் இத்தலத்திற்கு, ‘ஐவர் பாடி’ என்ற பெயர் ஏற்பட்டு, தற்பொழுது அது அய்யாவாடி என்று மருவியுள்ளது. சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய தேவி ஆயிரம் திருமுகங்களும், இரண்டாயிரம் கைகளும், சிவப்பேறிய கண்கள் மூன்றும், கனத்த சரீரமும், கரிய நிறமும், நீல நிற ஆடையும் அணிந்த விஸ்வரூபிணி ஆவாள்.

இத்தலத்தில் உறையும் தேவி சிம்ம முகத்தோடும் 18 திருக்கரங்களோடும் 4 சிம்மங்கள் பூட்டிய ரதத்தில் மகாலட்சுமி, சரஸ்வதியோடு அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். சிம்ம வாகினியாக சூலம், கபாலம், டமருகம், பாசம் ஆகியவற்றை ஏந்தியபடி வலது காலை தொங்கவிட்டும், இடது காலை சிம்மத்தின்மீது ஊன்றியபடியும் காட்சி தரும் இந்த அன்னையின் திருவுருவம் சுதை மூர்த்தம் என்கின்றனர். பசுவின் காலடி மண், புனுகு, ஜவ்வாது, சாம்பிராணி மற்றும் சிறப்பு மிக்க மூலிகைக் கலவைகளைக் கொண்டு செய்யப்பெற்ற திருமேனி என்பதால் இந்த அம்பிகைக்கு அபிஷேகம் கிடையாது. ஆகவே, தை மாதம் முதல் நாள் தொடங்கி ஒரு மண்டல காலம் புனுகுக் கலவை மட்டுமே சாத்தப்படுவது சிறப்பு. பிள்ளையார், சிவன் மற்றும் பிற சன்னிதிகளும் இங்கு உள்ளன.

ராவணனின் மகன் இந்திரஜித் ஸ்ரீராமரை எதிர்க்கும் வலிமை வேண்டியும் மரண பயம் மற்றும் அகால மரணம் அகலவும் நிகும்பலா யாகத்தை இத்தலத்தில் செய்து பிரத்யங்கிரா தேவியை வழிபட்டதாக புராண வரலாறு கூறுகிறது. அதன் வழியாக    இங்கு அமாவாசையன்று மூட்டை மூட்டையாக மிளகாய் கொண்டு செய்யப்படும் நிகும்பலா யாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த யாகத்தில் பட்டுப்புடைவை, பழ வகைகள் என 108 வகை ஹோம திரவியங்கள் இடப்பட்டு யாக நிறைவில் புனித கலச நீரால் சரபேஸ்வரருக்கும் பிரத்யங்கிரா தேவிக்கும் அபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த யாகத்தின்போது மிளகாய் நெடி சிறிதும் இல்லாதது அதிசயமான ஒன்று.

ஸ்ரீராமன் முதல் பஞ்சபாண்டவர் வரை நியாயம் வெல்ல தனது ஆதரவை தந்த பிரத்யங்கிரா தேவியை மனமுருகி வழிபட்டால் பில்லி, சூனியம், பிணி, கடன், எதிரி ஆகியவை நீங்கி, பூமியில் சுகமாக வாழ வேண்டிய 16 வகையான செல்வங்களையும் பிரத்யங்கிரா தேவி அளிப்பது நிச்சயம். வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை அய்யாவாடி சென்று பிரத்யங்கிரா தேவியை வழிபட்டு நன்மைகள் பெறலாமே.

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

குழந்தைகளின் தனித்திறமையை வளர்த்தெடுப்பது எப்படி?

துடுப்பற்ற படகு பயணம் போலாகும் இலக்கற்ற வாழ்க்கை!

எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!

இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!

SCROLL FOR NEXT