Gnayuru Temple 
ஆன்மிகம்

ஞாயிறு திருத்தலமும் திருவோடு மரமும்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

சிவனை வழிபடும் சூரிய பகவான் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த திருத்தலமான புஷ்பரதேஸ்வரர் கோயிலில் தான் திருவோடு மரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தலத்தின் சிறப்புகளையும், திருவோடு மரத்தின் சிறப்புகளையும் விவரிக்கிறது இந்தப் பதிவு.

இந்தியா முழுவதும் சிவனுக்கு பல கோயில்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு சிறப்பையும், வரலாறையும் உள்ளடக்கியுள்ளது. அவ்வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம் அடுத்துள்ள ஞாயிறு எனும் ஊரில் அமைந்துள்ள அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சூரியன் சிவபெருமானை வழிபட்ட தலம் என்பதால் இவ்வூர் ஞாயிறு எனும் பெயரைப் பெற்றது. சோழ மன்னனால் கட்டப்பட்ட இத்திருக்கோயிலில் தாமரை மலரில் சிவன் எழுந்தருளியதால் இங்கு வீற்றிருக்கும் சிவன் புஷ்பரதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

சிவனை எப்போதும் வழிபடும் எண்ணத்தில், நேர் எதிரே சூரிய பகவான் அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயிலில் சித்திரை மாதத்தின் முதல் 7 நாட்களில் சூரிய ஒளி நேரடியாக சிவன் மற்றும் சொர்ணாம்பிகை அம்மன் மீது விழுவதால், சூரியனே பூஜை செய்கிறார் என்பது ஐதீகம். ஆகையால் இக்காலத்தில் உச்சி கால பூஜைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது. எந்த ஆலயத்தில் நாம் விநாயகரைப் பார்த்தாலும் கிரீடத்துடன் தான் இருப்பார். ஆனால் இங்கு கிரீடம் இன்றி விநாயகர் இருப்பதால் இவர் பல்லவ விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். 

நவகிரகங்களுக்கு தலைமை கிரகமாக இருக்கும் சூரிய பகவான் இங்கு வீற்றிருப்பதால், தனியாக நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை. ஞாயிறு என்ற பெயருக்கு ஏற்றார் போல் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். சோழ மன்னருக்கு கண்பார்வை அளித்த தலமாதலால், கண் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்க்கும் தலமாக ஞாயிறு கோயில் விளங்குகிறது.

சுந்தரரின் மனைவியான சங்கிலி நாச்சியார் பிறந்த ஊர் ஞாயிறு தான் என்பதால், இவருக்கும் இங்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதிக்கு அருகில் தான் திருவோடு மரம் உள்ளது. எங்கும் காணக் கிடைக்காத அரிதான திருவோடு மரம் இத்தலத்தில் பாதுகாக்கப்படுவது இக்கோயிலின் சிறப்பாக கருதப்படுகிறது. துறவிகளும், சாமியார்களும், திருவோடுகளை கையில் வைத்துப் பார்த்திருக்கிறோம். இது மிகவும் பலமாக இருக்கும் என்பதால், அவ்வளவு எளிதில் உடையாது. இதனை கபாலம் மற்றும் அட்சயப் பாத்திரம் எனவும் அழைக்கிறோம். இம்மரத்தைக் காண்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் மற்ற மரங்களைப் போல இதன் விதைகள் பரவுவதில்லை. இம்மரதில் உருவாகும் பழம் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் சிறப்புடையது. அளவில் மிகப்பெரிய திருவோடு காய்களை நாம் இத்தலத்திற்குச் சென்றால் கண்டு ரசிக்க முடியும்.

மனிதர்களால் இதன் ஓட்டை உடைக்க இயலாது. இதன் கடினத்தன்மையால் தான் பழத்தின் உள்ளிருக்கும் விதைகள் மற்ற இடங்களுக்கு பரவாமல் போனதற்கு காரணம். இயற்கையின் அதிசயங்களில் திருவோடு மரமும் ஒன்று. இம்மரம் இன்றளவும் ஞாயிறு திருத்தலம் மட்டுமின்றி ஒருசில இடங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT