ஷீரடி திருத்தலத்தில் ஸ்ரீ சாயிநாதர் அமர்ந்த திருக்கோலத்தில் 5 அடி, 5 அங்குலம் உயரத்தில் திருக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். ‘துவாரகாமயி’ எனப்படும் மசூதியில் பாபாவின் திருவுருவப்படம் அமைந்துள்ள இடத்திற்குக் கீழே உள்ள கண்ணாடி பெட்டியில், ‘ஷீலா’ எனப்படும் கல் உள்ளது.
பாபா வாழ்ந்த காலத்தில் தன்னைத் தேடி வரும் மக்களின் பிரச்னைகளுக்கு இந்தக் கல் மீது அமர்ந்துதான் அருளாசி வழங்குவார். இங்கு வரும் பக்தர்கள் பாபாவை தரிசித்த பிறகு தங்கள் குறைகள் நீங்க வேண்டி இந்த ஷீலா கல்லையும் வழிபடுகிறார்கள். ‘சாயி’ என்ற சொல்லுக்கு சாட்சாத் கடவுள் என்று அர்த்தம். மக்கள் இவரை தத்தாத்ரேயரின் அவதாரமாகக் கருதுகிறார்கள்.
பாபா தான் தங்கி இருந்த துவாரகாமயி மசூதியில் தினமும் விளக்குகள் ஏற்றி வைப்பார். இரண்டு எண்ணெய் வியாபாரிகள் வழக்கமாக இதற்கு எண்ணெய் தருவார்கள். ஒரு நாள் பாபாவின் ஆற்றலை சோதிக்க எண்ணி எண்ணெய் வியாபாரிகள் எண்ணெய் தர மறுக்க, பாபா தண்ணீரை ஊற்றி விளக்குகளை ஏற்றினார். இதற்குப் பிறகு அவரின் புகழ் நாடு முழுவதும் பரவியது.
பாபா மதங்களைக் கடந்தவர். பகவத் கீதை, குர்ஆன் போன்றவற்றின் ஸ்லோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து பண்டிதர்களையே வியப்படையச் செய்வார். தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கு உதியையே (விபூதி) பிரசாதமாகக் கொடுத்து நோய்களை நீக்கியவர். பாபா மக்களுக்குக் கூறிய பொதுவான உபதேசம், நிஷ்டா (நம்பிக்கை), ஸபூரி (பொறுமை)யும் ஆகும்.
பாபா ஏற்றிவைத்த தீபம் இன்றும் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது. இந்த தீபத்துக்கு தினமும் கோயில் பூசாரிகள் எண்ணெய் விட்டு வருகிறார்கள். திரியை மட்டும் மாற்றுவதில்லை. கோயிலின் மற்றொரு பகுதியில் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கு பாபா பயன்படுத்திய ஆடை, பல்லக்கு, கோதுமை அரைக்கப் பயன்படுத்திய கல், அவரது அரிய புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கோயில் வளாகத்தில் சாயிபாபா பயன்படுத்திய நாழிக்கிணறு உள்ளது. அவர் தண்ணீர் இரைக்கப் பயன்படுத்திய ஓலையால் செய்யப்பட்ட பட்டை இன்றும் இங்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பாபா, 1918 அக்டோபர் 15ம் தேதி இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். அவரின் ஸ்தூல உடல் மறைந்த பின்னும் இன்றும் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இந்த ஷீரடி மண்ணை மிதித்தவர்களின் மனக்கவலைகள் மறைந்து, மனதில் மகிழ்ச்சி பெருகுவதால் தினம் தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து பாபாவை தரிசனம் செய்கிறார்கள்.