ஒருசமயம், சிறந்த விஷ்ணு பக்தரான அம்பரீஷ மகாராஜன், பிருந்தாவனத்தில் துவாதசி விரதத்தை அனுசரித்து, பரம புருஷரை வழிபட்டு வந்தார். ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசியன்று, ஏகாதசி விரதத்தை முடித்துக்கொள்ளப்போகும் வேளையில் மகாயோகியான துர்வாச முனிவர், அதிதியாக அங்குத் தோன்றினார். அம்பரீஷ மகாராஜனும் அவரை மரியாதையுடன் வரவேற்று உபசரித்தார்.
முனிவரை உணவருந்தக் கோரிய அரசரின் அழைப்பை ஏற்று, அங்கு உணவருந்துவதாக ஒப்புக்கொண்டார் துர்வாச முனிவர். நடுப்பகலில் குளிப்பதற்காக யமுனை நதிக்குச் சென்றார். நீண்ட நேரம் ஆழ்ந்த யோக நிலை என்று கூறப்படும் சமாதி நிலையில் ஆழ்ந்துவிட்டார். அவரால் கூறியபடி, குறித்த நேரத்தில் விரைவில் திரும்ப முடியவில்லை. ஆனால், விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டதைக் கண்ட அம்பரீஷ மகாராஜன், விரதத்தை முடித்துக்கொள்ளும் வழக்கத்தைப் பின்பற்றுவதற்காக, கற்றறிந்த அந்தணர்களின் யோசனைப்படி சிறிது நீரைப் பருகினார்.
சிறிது நேரத்தில் அந்நிலையிலிருந்து மீண்ட முனிவர், தனது தபோ சக்தியினால் நடந்ததை அறிந்தார். கடுங்கோபமடைந்தார். அவர் திரும்பி வந்து அம்பரீஷ மகாராஜனைத் தண்டிக்க முற்பட்டார். அவர் தனது தலை முடியிலிருந்து மராணாக்னி போல் தோன்றிய ஓர் அரக்கனை உண்டாக்கினார். அம்பரீஷனை கொல்லும் பொருட்டு அந்த அரக்கனை ஏவினார்.
ஆனால், எப்பொழுதும் தமது பக்தர்களைக் காப்பவரான பரம புருஷர் தமது சுதர்சன சக்கரத்தை அனுப்பினார். அது உடனடியாக அந்த நெருப்பரக்கனைக் கொன்றது. பிறகு, அம்பரீஷ மகாராஜனிடம் பெரும் விரோதம் கொண்டிருந்த துர்வாசரை விரட்டத் துவங்கியது. துர்வாசர் பிரம்மலோகத்திற்கும், சிவலோகத்திற்கும் மற்றெல்லா உயர் கிரகங்களுக்கும் தப்பி ஓடினார். ஆனால், சுதர்சன சக்கரத்தின் கடுங்கோபத்திலிருந்து அவரால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.
இறுதியாக, அவர் பகவான் நாராயணரிடம் சரணடைந்தார். ஆனால், ஒரு பக்தருக்கு குற்றமிழைத்தவரை பகவான் நாராயணரால் மன்னிக்க இயலவில்லை. இத்தகைய ஒரு குற்றத்திலிருந்து மன்னிக்கப்படுவதற்கு ஒருவர், தான் குற்றமிழைத்தவரிடமே சரணடைந்து அவரிடம் மன்னிப்பைக் கோர வேண்டும். இவ்வாறாக அம்பரீஷ மகாராஜனிடமே திரும்பிச் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்கும்படி பகவான் நாராயணர் துர்வாசருக்கு அறிவுரை கூறினார்.
தனக்காக, தன்னுடைய சுதர்சன சக்கரத்தை ஏவி, உயிர் காத்த, ஸ்ரீமந் நாராயணனின் கருணையை எண்ணிப் பெருமிதம் கொண்ட அம்பரீஷன், துர்வாசரை மன்னித்தார்.
தனது பக்தனுக்காக பகவானே இறங்கி வந்து அருள்புரிந்த பின்பு, அம்பரீஷனின் பக்தியையும், ஏகாதசி விரதத்தின் மேன்மையையும் துர்வாச முனிவர் நன்கு உணர்ந்து கொண்டார்.
உண்மையான பக்தனை எவராலும் துஷ்பிரயோக செயல்களால் வெல்ல முடியாது என்பது இதிலிருந்து புரிகிறதல்லவா?