மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஸ்ரீ ராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம் சுக்லபட்ச நவமி திதியில் ஸ்ரீராமரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராம நவமி என்பது விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீராமரின் பிறப்பை கொண்டாடும் பண்டிகை. இது வசந்த காலத்தில் சைத்ர நவராத்திரி திருவிழாவின் ஒன்பதாவது நாளில் வருகிறது. சில இடங்களில் நவராத்திரி ஒன்பது நாட்களும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை, ‘ராம நவராத்திரி’ என அழைக்கிறார்கள்.
இன்று ஸ்ரீராமரின் கதையை விவரிக்கும் ராமாயணத்தை பாராயணம் செய்வதும், விரதம், பஜனைகள் மற்றும் கீர்த்தனைகள் செய்வதும் பல்வேறு பலன்களைப் பெற்றுத் தரும். இந்நாளில் அயோத்தியில் சரயு நதியில் நீராடி ஸ்ரீராமரை தரிசிக்க செல்வதும் ஸ்ரீராமர் கோயில்களில் ரத யாத்திரைகளும் நடைபெறும். ராமாயண காவியத்தில் ஸ்ரீராமரின் வாழ்க்கை பற்றி குறிப்பிடப்பட்டுள்ள பல நகரங்களில் அயோத்தி, ராமேஸ்வரம், பத்ராச்சலம், பூரி ஜெகன்நாத் போன்ற இடங்களில் ஸ்ரீ ராம நவமி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும்.
வட மாநிலங்களில் ஸ்ரீ ராம நவமிக்கு ஒரு வாரம் முன்பாகவே ராமர் கோயில்களில் கொண்டாட்டங்கள் தொடங்கி விடும். துளசிதாசரின் ராம் சரித்மனாஸ், ராம காவியமான ராமாயணம் வாசிக்கப்படுவதும், இசைக்கப்படுவதும் தொடங்கிவிடும். ராம் லீலா எனப்படும் நாடக நிகழ்ச்சியும் ஆண்டுதோறும் ஸ்ரீ ராம நவமியில் வெகு விமர்சையாக நடத்தப்படும்.
ஸ்ரீராமரின் கதையை இசை, நாடகம், நடனம் மற்றும் பல வழிகளில் பல நாட்டவர்கள் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ், கரீபியன் நாடுகள் என்று பல இடங்களிலும் பாரம்பரிய பண்டிகையான ஸ்ரீ ராம நாமி கொண்டாடப்படுகிறது.
‘நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்’
என்ற கம்பரின் வாக்குப்படி ராம நாமத்தை இடைவிடாது உச்சரிப்பதால் இல்லத்தில் செல்வ வளமும், நற்காரியங்களும் வளர்ந்தோங்கும். நாம் செய்த பாவங்கள் கரைந்து புண்ணியங்கள் கூடும்.
ராம நவமி நன்னாளில் அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையை சுத்தம் செய்து ஸ்ரீராமர் பட்டாபிஷேக கோலத்துடன் இருக்கும் படத்தை வைத்து பூக்களால் அலங்கரித்து நைவேத்தியங்கள் படைத்து ஸ்ரீ ராம நாமம் சொல்லி பூஜிக்க அனைத்து வளங்களும் பெருகும்.
இன்று நீர்மோர், பானகம், வடை பருப்பு, பாயசம் நிவேதனம் செய்வது வழக்கம். ராஜரிஷி விசுவாமித்திரருடன் இருந்தபோதும் அதன் பிறகு 14 ஆண்டுகள் வனவாசத்தின்போதும் ஸ்ரீராமபிரான் நீர் மோரையும், பானகத்தையும் தாகத்திற்காக அருந்தினார். அதன் நினைவாகவே நீர் மோரும் பானகமும் நிவேதனப் பொருளாக படைக்கப்படுகிறது.
ஸ்ரீராமர் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டதால் அவருடைய பிறந்த நாளில் எளிய பானங்களான நீர்மோர், பானகம் வழங்குவதையும், விசிறி, செருப்பு, குடை போன்றவற்றை தானமாக கொடுப்பதன் மூலமும் பல தலைமுறைக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீராம நாமம் உச்சரிக்கப்படும் இடங்களிலும், ராமாயணம் படிக்கப்படும் இடங்களிலும் ஆஞ்சனேயர் எழுந்தருளுவார். எனவே, ராமரை வணங்குவதன் மூலம் அனுமனின் அருளையும் பெறலாம்.