இறைவனுக்குச் செய்யப்படும் பால், தேன், மஞ்சள் போன்ற அபிஷேகப் பொருட்கள் மருத்துவக் குணம் கொண்டவையாக விளங்குகின்றன. மேலும், கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் திருநீறு, தீர்த்தம் போன்றவையும், பக்தர்கள் அணியும் ருத்ராட்சம், வில்வம், துளசி போன்றவையும் மருத்துவக் குணம் கொண்டவை என்று இக்கால அறிவியல் கூறுகிறது. இதை மெய்ப்பிப்பது போல், அக்காலங்களில் திருக்கோயில்களிலும்கூட நோயால் வருந்தும் மக்கள் உடல் நலமடைய மருத்துவமனைகள் இருந்ததாக அக்காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இதனை, ‘ஆதுலர்சாலை’ என அந்தக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
இதுபோன்ற ஆதுலர்சாலைகளைப் பராமரிக்கவும், மக்களுக்காக ஊழியம் செய்யும் மருத்துவர்களுக்கு நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டன. இவ்வாறு அளிக்கப்பட்ட நிலங்கள், ‘வைத்திய விருத்தி’ என அழைக்கப்பட்டது. அக்கால ஆதுலர்சாலைகளில் அறுவை சிகிச்சை செய்பவர்களும் இருந்தனர். இவர்களை, ‘சல்லியக்கிரியை’ செய்வோர் எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கும்பகோணம் அருகிலுள்ள திருவிசலூர் கோயிலில், ‘சல்லியக்கிரியை போகமாக’ நிலம் தானம் அளிக்கப்பட்டதாக ராஜேந்திர சோழனின் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
ராஜராஜ சோழனின் தமக்கையான குந்தவை பிராட்டியார் தஞ்சாவூரில் தனது தந்தையின் பெயரால், ‘சுந்தர சோழ விண்ணகர் ஆதுலர்சாலை’ என்று மருத்துவமனை நிறுவியதை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதனை பராமரிக்க ஆகும் செலவுகளுக்காக பண்டாரவாடை என்ற ஊரில் நிலம் அளித்த செய்தியும் கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது.
செங்கல்பட்டுஅருகே பாலாற்றின் கரையில் உள்ள திருமுக்கூடல் வெங்கடேசப்பெருமாள் கோயிலில் மிக முக்கியமான கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகளும் ஒன்று சேருவதால் இந்த இடம் ‘முக்கூடல்’என்ற அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டு, சோழ மன்னன் வீர ராஜேந்திர சோழன் காலத்தியது. இந்தக் கல்வெட்டில் இக்கோயிலில் இருந்த கல்லூரி, நடனசாலை மற்றும் மருத்துவனை குறித்த செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
இந்த மருத்துவமனை, ‘வீரசோழன்’ எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டு உள்ளது. இங்கு 15 பேர் இருந்து சிகிச்சை பெறலாம். இந்த மருத்துவமனையில் மருத்துவர், அறுவை சிகிச்சை செய்பவர், மருந்து சேகரிப்பவர் மற்றும் உதவுபவர், பெண் செவிலியர்கள், நாவிதர் ஆகியோர் பணியாற்றியதற்கான குறிப்புகள் உள்ளன. மேலும் அதில், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய விபரமும், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட அரிசி பற்றியும் குறிப்பு விரிவாகக் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஒருஆண்டுக்குத் தேவையான மருந்துகள் இந்த மருத்துவமனையில் இருந்தன. என்னென்ன மருந்துகள் இருந்தன, அவற்றின் பெயர் என்ன என்பதும் அந்தக் கல்வெட்டில் காணப்படுவது சிறப்பு.