Mahalaya Amavasai Pitru Darpanam 
ஆன்மிகம்

தலைமுறையை வாழவைக்கும் மகாளய அமாவாசை பித்ரு வழிபாடு!

மகாளய அமாவாசை (2.10.2024)

கே.என்.சுவாமிநாதன்

‘பித்ருக்களை (முன்னோர்களை) உத்தேசித்துச் செய்யப்படும் தர்ப்பணமானது, தனம், கீர்த்தி, ஆயுள், சுவர்க்கம் முதலிய நன்மைகளை அளிக்கும். சத்ருக்களை நீக்கும். குலம் தழைத்தோங்கச் செய்யும்’ என்கிறது மகாபாரதம். எல்லா மாதமும் அமாவாசையன்று மூன்று தலைமுறை முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வது நல்லது. அவ்வாறு செய்ய முடியாதவர்கள் ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய இந்த மூன்று தினங்களாவது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது தலைமுறைக்கு நல்லது.

நமக்கு முந்தைய மூன்று தலைமுறையினர் பித்ரு லோகத்தில் இருப்பதாக நம்பிக்கை. ஆடி அமாவாசையன்று பித்ரு லோகத்திலிருந்து புறப்பட்ட முன்னோர்கள் மகாளய பட்சம் வரை பூமியில் தங்கியிருந்து, தை அமாவாசையில் பித்ருலோகம் திரும்புவதாக ஐதீகம். அவர்களை நினைவுகூர்ந்து நன்றிக்கடனாக தர்ப்பணம் செய்கிறோம்.

மகாளய அமாவாசையன்று தாய்வழி, தந்தைவழி முன்னோர்களுடன் மறைந்த உறவினர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, நண்பர்களுக்கு என்று அனைவருக்கும் சேர்த்து தர்ப்பணம் கொடுக்கலாம். கயாவில் செய்யப்படும் சிராத்தம் மிகவும் சிறந்தது என்பார்கள். மகாளய அமாவாசை தர்ப்பணத்திற்கும் அந்தப் பலன் உண்டு. முன்னோர்களை நினைவுகூர்ந்து செய்யும் சிராத்தத்தின் மகிமையைப் போற்றும் புராணக் கதைகளும் உண்டு.

தமிழ்நாட்டில் உள்ள வைணவ திருத்தலங்களில் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலின் விசேஷம் பித்ரு சாபம் உள்ளவர்கள் இக்கோவிலுக்குப் பரிகாரத்திற்காக வருகிறார்கள். காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவிற்கு பெற்றோர் இல்லை. பரம பக்தர் ஒருவருக்கு குழந்தைகள் இல்லை. அந்த பக்தரின் இறுதிச் சடங்குகளை பரந்தாமன் செய்தார். அதோடு, ஒவ்வொரு வருடமும் ஒரு மகன், தந்தைக்கு சிராத்தம் செய்வது போல பக்தனுக்கு சிராத்தம் செய்கிறார் பகவான்.

ஹொய்சால வம்சத்தைச் சேர்ந்த வல்லாள மகாராஜா திருவண்ணாமலையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். சிறந்த சிவ பக்தரான வல்லாள மகாராஜா, மதுரை சுல்தானுடன் நடந்த போரில் கொல்லப்பட்டார். மகாராஜாவின் இறுதிக்கடனை இறைவனே திருவண்ணாமலையின் அருகில் ஓடும் கௌதம நதிக்கரையில் செய்து முடித்தார். இன்றும் பள்ளிகொண்டாப்பட்டு ஊரில், கௌதம நதிக்கரையில் மாசி பௌர்ணமியன்று சிவபெருமான், மகனாக தனது தந்தை வல்லாள மகாராஜாவிற்கு திதி கொடுக்கும் விழா அனுசரிக்கப்படுகிறது. இவை முன்னோர்களுக்கு திதி கொடுப்பதின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.

மகாளய பட்ச காலத்தில் தானம் செய்வது நம்முடைய முன்னோர்களை திருப்தி செய்யும். எள் இந்துக்களின் வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கருப்பு எள்ளை தானம் செய்வது, நமக்கு இருக்கின்ற தடைகளை விலக்கும். உப்பைத் தானம் செய்தால், நமக்கெதிரான சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

வேட்டி, துண்டு போன்ற ஆடைகள் தானம் செய்தால் ஜாதகத்தில் இருக்கின்ற தோஷங்களுக்குப் பரிகாரமாவதுடன், ஆயுள், ஆரோக்கியத்திற்கு வழி செய்யும். பசு நெய் தானம் செய்தால் குடும்பத்தில் நிலவி வரும் குழப்பங்களைப் போக்கும். தானத்தில் சிறந்தது ‘கோ தானம்’ என்பார்கள். பசுவை தானமாகக் கொடுப்பது இப்பிறவிக்கு மட்டுமல்லாது, பல பிறவிகளுக்கும் பலன் தரும். குரு பகவான் தோஷம் நீங்க, தங்கம் தானம் செய்யலாம். அனைத்து நோய்களிலிருந்து விடுபட்டு, நோயற்ற வாழ்வு பெற வெள்ளிப் பொருட்கள் தானம் வகை செய்யும். அன்ன தானம் பாவத்தைத் தீர்ப்பதுடன், கடவுளின் ஆசீர்வாதத்திற்கு வழி செய்யும்.

முன்னோர்கள் வருடத்திற்கு ஒரு முறை நம்மைப் பார்க்க பூலோகம் வருகிறார்கள் என்பது இந்து சமயத்தின் நம்பிக்கை மட்டுமல்ல, உலகில் பல நாடுகளிலும், பல சமயங்களிலும், கலாசாரங்களிலும் உள்ள நம்பிக்கையாகும். நாளை (2.10.2024) மகாளய அமாவாசையன்று முன்னோர் தர்ப்பணம் செய்து வழிபட்டு நமது தலைமுறையை சிறப்புடன் வாழ வைப்போம்.

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

மழைக்கால சிறுநீர் தொற்று பாதிப்பும் காரணங்களும்!

பணி ஓய்விற்குப் பின் வரும் காலம் பயனற்றதா?

சிறுகதை: 'லக்கி லதா'!

SCROLL FOR NEXT