Sabarimalai Swami Iyappan 
ஆன்மிகம்

எங்கும் ஒலிக்கத் தொடங்கி விட்டது சுவாமி ஐயப்பனின் சரண கோஷம்!

பொ.பாலாஜிகணேஷ்

கார்த்திகை மாதம் இன்று பிறந்துவிட்டது. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதமிருக்கும் பக்தர்களின் சரண கோஷம் எங்கும் காதில் ஒலிக்கத் தொடங்கி விட்டது. மண்டல விரதமிருந்து வழிபடும் பக்தர்கள் கேட்கும் வரங்களை அள்ளிக்கொடுக்கும் சுவாமி ஐயப்பன் உறையும் சபரிமலை குறித்த 10 அரிய தகவல்களை இந்தப் பதிவில் காண்போம்.

1. அடர்ந்த காட்டிற்குள் வன விலங்குகள் தாக்கும் அபாயத்திற்கு மத்தியில் நடைபயணமாக 60 கிலோ மீட்டர் செல்வது சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலுக்கு மட்டுமே.

2. கேரள கட்டுமான முறையையும் தமிழ்நாட்டின் சாஸ்தா வழிபாட்டையும் இணைத்து இரு மாநிலத்தின் ஒற்றுமை சின்னமாக விளங்குவது சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில்.

3. மணிகண்டன் கல்வியை குருவிடம்தான் பயில வேண்டும் என்று ஆசைப்பட்ட ராஜசேகர பாண்டியனின் ஆசையே இன்று குரு தத்துவமாக குருசாமியாக ஐயப்ப யாத்திரையில் இருக்கின்ற வழக்கம் ஆகும். தன்னைக் காண வேணுமெனில் குரு மூலமாகத்தான் வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் ஐயப்பன்.

4. மற்ற கோயில்களைப் போல் தினமும் அல்லாமல் ஆண்டில் வெறும் 120 நாட்களுக்கும் குறைவாகவே நடை திறந்து இருக்கும் கோயில் சபரிமலை ஐயப்பன் சுவாமி கோயில்.

5. இன்று போல் இல்லாமல், அடர்ந்த காட்டில் சாலை, ஹோட்டல்கள் இல்லாத அக்காலத்தில் தமிழக பக்தர்களுக்காக  உணவும் பேருந்து வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்து குருவாக இருந்தவர் நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட புனலூர் தாத்தா சுப்ரமணிய அய்யர்.

6. ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் இருக்கும் வாவர் மசூதிக்கு சென்று வாவரை வணங்குவது வழக்கம். அதன் பிறகே பெருவழியில் நுழைகின்றனர். எந்த இந்து கோயிலிலும் இல்லாத இந்த முறை சபரிமலையை தனித்துவமாகக் காட்டுகிறது.

7. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலுக்கு, மற்ற கோயில்களைப் போல் குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் செய்கிற வழக்கம் இல்லை. ஆண்டுதோறும் வரும் பக்தர்களின் பக்தியாலும் அதன் சக்தி குறையாமல் ஒவ்வொரு வருடமும் அதன் சக்தி கூடிக்கொண்டே செல்வதாக நம்பப்படுகிறது.

8. பரசுராமர் உருவாக்கிய இந்த சிறிய ஆலயத்தை மாற்றி அமைத்து பதினெட்டு படிகளோடு உருவாக்கியவர் பந்தள மன்னர் ராஜசேகர பாண்டியன்.

9. சபரிமலையை தவிர, மற்ற கோயில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் மட்டுமே காணலாம். அதன்படி, சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மறு கால் மடித்தபடியும் இருக்கும். மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.

10. சபரிமலையில் மாளிகைபுரத்து அம்மன் சன்னிதி என்பது ஐயப்பன் வதம் செய்த பெண் மகிஷியின் தூய்மை வடிவமே. வதம் செய்த பிறகு ஐயப்பன் தன்னை மணந்துகொள்ள விருப்பம் சொன்னபோது, “என் அருகிலேயே நீ இருக்கலாம். என்று என்னைக் காண ஒரு கன்னிசாமியாவது வராமல் இருக்கிறாரோ, அன்று உன்னை நான் மணந்து கொள்கிறேன்” என்று கூறியவர் பிர்மச்சர்யம் கொண்ட ஐயப்பன். அந்த மாளிகைபுரத்து அம்மன் இன்றும் காத்துக் கொண்டு இருக்கிறாள். ஆனால், ஆண்டு தோறும் கன்னிசாமி பக்தர்கள் கூட்டம் இங்கு அலை மோதுகிறது.

சாமியே சரணம் ஐயப்பா.... ஹரிஹரசுதனே சரணம் ஐயப்பா…

லடாக் பயண தொடர் 6 - உப்புநீர் ஏரியும், செங்கல் நிற இமயமும்!

உங்களுக்கு வாழ்க்கையில் புற்றுநோயே வரக்கூடாதுன்னா இந்த 10 விஷயங்களைக் கடைப்பிடிங்க!

உங்கள் வெற்றி, தோல்வி களுக்கு காரணம் நீங்களே..!

நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யாவின் வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா?

செய்யும் தொழில் சிறப்பானால் எல்லாம் சிறப்பே!

SCROLL FOR NEXT