Picasa
ஆன்மிகம்

சமர்ப்பணத்தில் ஏது வித்தியாசம்?

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

காஞ்சி மகாபெரியவரின் அத்யந்த தொண்டர்களில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும் ஒருவர். வேதங்களை நன்கு கற்றுணர்ந்த அவர், எப்போதும் மகாபெரியவருக்கு சற்று தொலைவில் அமர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டு இருப்பார்.

ஒரு சமயம் இவர் மகாபெரியவரின் அருகில் சாம வேதத்தை பாராயணம் செய்துகொண்டு இருக்க, மகாபெரியவர் வழக்கம்போல் பக்தர்களுக்கு ஆசியும் பிரசாதமும் வழங்கிக்கொண்டிருந்தார். அன்பர்களின் வரிசை மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. அப்போது ஒரு அன்பர் கையில் சிறிய பையுடன் மகாபெரியவரை தரிசிக்க வரிசையில் நின்று கொண்டு இருந்தார். அவரது முறை வந்தபோது மகாபெரியவரிடம் ஆசி பெற்று பிரசாதத்தை அவர் வாங்கிக் கொண்டு நகர முயற்சித்தபோது, மகாபெரியவரின் குரல் அவரைத் தடுத்து நிறுத்தியது.

"எனக்குக் கொடுப்பதற்காகக் கொண்டு வந்ததை கொடுக்காமலேயே போறியே" என்றார் மகாபெரியவர்.

அதைக் கேட்டு அந்த அன்பர் திடுக்கிட்டு நின்றார். கையில் இருந்த பையில் அவரது தோட்டத்தில் விளைந்த முதல் நெல்லிக்கனிகளை மகாபெரியவருக்குக் கொடுப்பதற்காக ஆசையோடு அவர் கொண்டு வந்திருந்தார்.

மகாபெரியவர் இப்படிக் கேட்டதும், அந்த அன்பருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனாலும் சமாளித்துக்கொண்டு, "இங்கே ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, திராட்சைன்னு பல பழங்களை நிறைய பேர் கொண்டு வந்து தரா. நான் சாதாரண நெல்லிக்கனியை பகவானுக்கு தர்றதா? அதனாலேதான் கொண்டு வந்ததை திரும்பவும் எடுத்துண்டு போறேன்" என்றார் அவர்.

அதைக்கேட்ட மகாபெரியவர், ஒரு மூங்கில் தட்டை காண்பித்து, "நீ கொண்டு வந்ததை இதில் எடுத்து வை" என்று கூற, அந்த அன்பர் தனது பையில் இருந்த நெல்லிக்கனிகளை எடுத்து தட்டில் பக்தியோடு வைத்தார்.

அதைக் கண்ட கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளுக்கு ஒரே வியப்பு. ‘அந்த அன்பர் நெல்லிக்கனிதான் கொண்டுவந்திருக்கிறார் என்பது மகானுக்கு எப்படித் தெரியும்?’ அதோடு, அன்று துவாதசி. மகான் அக்கனியை விரும்பி ஏற்றுக்கொண்டதன் காரணம் இப்போது கனபாடிகளுக்குப் புரிந்தது.

பிட்சை என்று வந்த சங்கரருக்கு அன்று தானமாக ஒரு நெல்லிக்கனியை மூதாட்டி கொடுத்தபோது, சங்கரரின் வாயிலிருந்து அப்போதே கனகதாரா ஸ்தோத்திரம் கிளம்பியது. இப்போது இவ்வளவு நெல்லிக் கனிகளை மகானுக்கு சமர்பித்த அந்த பக்தர் எந்த அளவுக்கு மகாபெரியவரின் கருணையை உணர்ந்திருப்பார் என்று கனபாடிகள் வியந்தார்.

இளம் வயதினருக்கு உடற்பயிற்சியின்போது ஹார்ட் அட்டாக் வர காரணம் என்ன?

முந்திரிப் பருப்பு உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்குமா?

ராஜமவுலியை தொடர்ந்து ஆஸ்கார் விருதை குறிவைத்து காய் நகர்த்தும் அமீர்கான்!

சீதையைத்தேடி ராமன் கால் பதித்த பூமியின் சொர்க்கம்!

விமர்சனம்: பராரி - ஜா'தீ'க்கு ஒரு சவுக்கடி!

SCROLL FOR NEXT