ஆவணி அவிட்டம் 
ஆன்மிகம்

வேதங்களுக்கு மரியாதை செய்யும் நன்னாள் ஆவணி அவிட்டம்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

வேதத்துக்கு உண்டான பண்டிகை என்றால் அது ஆவணி அவிட்டம் என்பர் பெரியோர். இன்று ஆவணி அவிட்டம். தமிழ் மாதங்களின் அடிப்படையில் சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பெற்று அமரும் ஐந்தாவது மாதமான ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திர நாளன்று பூணூல் மாற்றிக் கொள்ளப்படும். இந்நாள் பெரும்பாலும் பௌர்ணமி அன்றுதான் வரும். இந்நாளை, ‘ஹயக்ரீவர் ஜயந்தி’ என்றும் கொண்டாடுகிறார்கள். பூணூல் அணிந்தவர்கள்தான் கர்ம காரியங்களில் திதி கொடுப்பது, திவசம் செய்வது போன்றவை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆவணி அவிட்டம் என்பது பழைமையான நம்பிக்கைகள் மற்றும் வழக்கங்களுடன் இணைந்த ஒரு முக்கியமான நாளாகும். இந்நாளில் பூணூல் மாற்றிக் கொள்வது தனிநபரின் ஆன்மிக வளர்ச்சிக்கு உதவும் என்று நம்பப்படுகிறது. ஆவணி அவிட்டம் என்பது பூணூல் மாற்றும் சடங்கு மட்டுமல்ல, இந்நாளுக்கு பல்வேறு முக்கியத்துவமும் உள்ளன. உபகர்மா என்று கூறப்படும் வேதங்களை படிக்க  துவங்கும் நாளாகவும் இது கருதப்படுகிறது.

ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வணம் என்ற நான்கு வேதங்கள் உள்ளன. அசுரர்களால் வேதங்கள் திருடப்பட்டு யாராலும் மீட்க முடியாமல் போனபொழுது மகாவிஷ்ணு ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து அசுரர்கள் திருடிய வேதங்களை மீட்டுக் கொடுத்த நாள்தான் ‘ஆவணி அவிட்டம்’ என்று கூறப்படுகிறது.

பூணூல் என்பது ஒரு புனிதமான நூல். இது தூய்மை, கடவுள் நம்பிக்கை மற்றும் வேத கல்வியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பழைய பூணூலை மாற்றி புதிய பூணூல் அணிவதன் மூலம் பழைய எண்ணங்களை விட்டு புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆவணி அவிட்டம் பூணூல் போடுபவர்களுக்கு மட்டுமான பண்டிகை மட்டுமல்ல இது. அனைவரும் சூரியனை நமஸ்கரிக்கவும், ஆலய வழிபாடுகள் செய்யவும், புதிய கல்வி, கலைகளை கற்றுக் கொள்ளவும் ஏற்ற நாளாகும். அடுத்த நாள் இதுவரை ஓதிய வேத மந்திரங்களில் ஏதேனும் குறை இருப்பின் அதை நிவர்த்தி செய்யவும், இனி கற்க இருக்கும் வேத மந்திரங்களை முழுமையான பலத்துடன் கற்கவும் இந்நாளில் ‘காயத்திரி ஜபம்’ செய்ய வேண்டும். இந்த பிரபஞ்சமும் அதில் வாழும் சகல ஜீவராசிகளும் சிறப்புற்று வாழவும், சகல தேவதைகளும் திருப்தியோடு செயல்புரியவும் காயத்ரி ஜபம் செய்யப்படுகிறது.

பூணூலின் வகைகள்: பூணூலில் 4 வகைகள் உள்ளன. அவை கள்ளப்பூணூல், கிரகஸ்தர் பூணூல், பிரம்மச்சாரி பூணூல், சஷ்டியப்த பூர்த்தி பூணூல் என்பன.

1. பிரம்மச்சாரி பூணூல்: பூணூல் அணியப் போகும் ஆண் சிறுவனாக இருக்கும் போது பிரம்மச்சாரி என்ற அந்தஸ்தை பெறுகிறார். இந்த சமயத்தில் பிரம்மச்சரிய விரதம் பின்பற்றுவதுடன் வேதங்களை பயில வேண்டும். உபநயன விழாவில் பூணூல் அணிந்து கொண்ட பிரம்மச்சாரி அதன் பிறகு பூணூலை கழற்றக்கூடாது. கல்யாணம் ஆகாதவருக்கே பிரம்மச்சாரி பூணூல் அணிவிக்கப்படும்.

2. கள்ளப் பூணூல்: உபநயன விழாவில் பூணூல் அணியாமல் ஆவணி அவிட்டம் நாளன்று சாஸ்திரமாக போட்டு விடப்படும் பூணூலைக் கழற்றலாம். இப்படி அவிழ்த்து கொள்ளும் பூணூலைத்தான் கள்ளப் பூணூல் என்று சொல்வார்கள். பிரம்மச்சாரி பூணூல், கள்ளப்பூணூலில் மூன்று நூல்கள் சேர்த்து கட்டுவார்கள். இதன் மத்தியில் பிரம்ம முடிச்சிடப்பட்டிருக்கும்.

3. கிரகஸ்தர் பூணூல்: கல்யாணம் ஆனவர்களுக்கே கிரகஸ்தர் பூணூல் அணிவிக்கப்படும். இதில் ஆறு நூல்கள் சேர்த்து கட்டி  முடிச்சிடுவார்கள்.

4. சஷ்டியப்த பூணூல்: அறுபது வயதுக்கு பின்னர் சஷ்டியப்த பூர்த்தி என்று சொல்லப்படும் அறுபதாம் கல்யாணம் செய்தவர்களுக்கு சஷ்டியப்த பூணூல் போடப்படும். இதில் ஒன்பது நூல்கள் சேர்த்துக் கட்டி பிரம்ம முடிச்சு போடப்பட்டிருக்கும்.

ஆவணி அவிட்ட விரத பலன்: விரத நியமங்களை முறையாக பின்பற்றி பூணூல் போட்டுக் கொண்டவர்கள் எல்லா துன்பங்களும் விலகி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இவர்களின் குடும்பத்தை துன்பங்கள் அணுகாது. இந்நாளில் பூணூல் அணிபவர்கள் பகைவர்களின் தொல்லை இன்றி காக்கப்படுவார்கள். இவர்களின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. ஆவணி அவிட்ட நாளில் பூணூலை மாற்றிக் கொண்ட பிறகு கொஞ்ச நேரமாவது வேதாரம்பத்தை செய்து கொள்ள வேண்டும் என்பது காஞ்சி மகா முனிவரின் விருப்பமாகும்.

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT