வேலூரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில், ராணிப்பேட்டைக்கு அருகில் உள்ளது வில்வநாதேஸ்வரர் திருக்கோயில். விநாயகர், ‘அம்மையப்பன்தான் உலகம்; உலகம்தான் அம்மையப்பன்’ என உலகிற்கு அறிவித்த திருத்தலமே, ‘திருவலம்’ ஆகும். வலம் வந்ததை உணர்த்துவதால் இது திருவலம் என்றாகி நாளடைவில் திருவல்லம் என்றாகி விட்டது. இத்தல ஈசனின் பெயர் வில்வநாதேஸ்வரர். அம்பிகை பெயர் வல்லாம்பிகை.
ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு நிலை ராஜகோபுரம், மூன்று பிராகாரங்கள் கொண்ட பிரம்மாண்டமான கோயில் இது. இக்கோயிலின் தல விருட்சம் வில்வம். இங்கு பிரசாதமாக வில்வமே தரப்படுகிறது. இதை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள், மந்த புத்தி நீங்கும் என்பதும் நம்பிக்கை. இக்கோயிலில் தட்சிணாமூர்த்தியின் சீடரான சனகரின் ஜீவசமாதி உள்ளது. இங்கு அமர்ந்து நிறைய பேர் தியானம் செய்கிறார்கள்.
இங்குள்ள விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். அவரின் துதிக்கையில் மாங்கனி ஒன்று உள்ளது. முருகனுக்கும் விநாயகருக்கும் சிவபெருமான் வைத்த போட்டியில் வென்ற விநாயகர் அந்த ஞானப் பழத்துடன் இத்தலத்தில் வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பக்தனை காப்பதற்காக ஈசனை நோக்கி அமராமல் கோயிலின் வாயிலை நோக்கியவாறு பிரம்மாண்டமாக மிகப்பெரிய நந்தி உள்ளது. அதற்கு ஒரு புராண வரலாறும் உண்டு.
கஞ்சன் மலையிலிருந்து திருவல்லத்திற்கு இறைவனுக்கு அபிஷேகம் செய்ய தீர்த்தம் கொண்டு வரும் அர்ச்சகரை கஞ்சன் என்பவன் தொல்லை செய்ததாகவும் சிவபெருமானின் வாகனமான நந்தி கஞ்சனை எட்டு பாகங்களாக கிழித்தார் எனவும், சிவபெருமானிடம் இறவா வரம் பெற்றிருந்த கஞ்சன் அவ்விடம் விட்டு ஓடிவிட்டார் என்றும் தலபுராணம் கூறுகிறது. அத்துடன் இறவாமல் இருக்கும் கஞ்சன் மீண்டும் வருகிறானா என்பதை கண்காணிக்க நந்தி தேவர் கோயிலின் வாசலை நோக்கியவாறு வீற்றிருக்கிறார் என தல வரலாறு கூறுகிறது.
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் இது 10வது தலம். இக்கோயிலில் மாசி மாதம் பிரம்மோத்ஸவம் மிகக் கோலாகலமாக நடைபெறுகிறது.