Pillaiyar Suli 
ஆன்மிகம்

எழுத துவங்கும் போது பிள்ளையார் சுழி போடுவது ஏன்?

ராஜமருதவேல்

கனநாதன் ஆகிய பிள்ளையார் தான் முழு முதல் கடவுள் ஆவார். இது இறைவன் சிவ பெருமான் பிள்ளையாருக்கு கொடுத்த சிறப்பு. எந்த செயலையும் செய்யும் முன் முதலில் பிள்ளையாருக்கு சூடம் காட்டி விட்டு தேங்காய் உடைத்து துவங்குவது தான் இந்தியர்களின் கலாச்சாரம். பிள்ளையாரை வணங்கி விட்டுத் தான் சிவபெருமானையும், அம்பிகையையும், பெருமாளையும், மஹாலக்ஷ்மி தேவியையும் வணங்குகிறோம். எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் பிள்ளையார் தான் வீற்றிருப்பார். அடுத்ததாக தான் மற்ற கடவுள்கள் வீற்றிருப்பார்கள். முக்கியமாக வைணவ கோயில்களிலும், அம்மன் கோவில்களிலும் கூட பிள்ளையாரின் விக்ரகத்தை நாம் பார்க்க முடியும். 

பிள்ளையார் மதங்களை கடந்த கடவுளாகவும் உள்ளார். புத்த மதம், சமண மதம், சீன மதங்களில் கூட விநாயகரின் வழிபாடு உள்ளது. புத்த மத நாடான தாய்லாந்தில் தான் மிகப் பிரம்மாண்டமான பல பிள்ளையார் சிலைகள் உள்ளன. தாய்லாந்து நாட்டினர் பிள்ளையாரை வழிபடுவதோடு யானைகளை தங்கள் வாழ்வின் அங்கமாக நினைக்கின்றனர். 

ஒரு காகிதத்தில் முதலில் எழுதும் போது பிள்ளையார் சுழியை தான் முதலில் எழுதிவிட்டு பின்னர் மற்ற எழுத்துக்களை எழுத ஆரம்பிக்கிறோம். பிள்ளையார் சுழி என்பது உ என்ற உகர எழுத்தாகும். பிள்ளையார் அவரது தாய் உமையவளில் இருந்து உருவானதால், தனது தாய்க்கு மரியாதை செலுத்தும் வகையிலும் அவர் துனையிருக்க வேண்டும் என்றும்  உ என்ற எழுத்தினை பயன்படுத்தியுள்ளதாக கூறுவர். 

இதற்கு மேலும் சில காரணங்களும் கூறப்படுகிறது.  பிரணவ மந்திரமான ஓம் என்ற எழுத்தை பிரித்தால் அ, உ, ம் என்று பிரியும். இதில் அ என்பது முதல் எழுத்து, இது தொடக்கமாக படைப்பதையும்,  உ என்ற எழுத்து காப்பதையும், ம் என்பது அழித்தலையும் குறிக்கிறது.

உயிர் எழுத்து வரிசையில் உ ஐந்தாவது எழுத்து ஆகிறது. இதில் ஐந்து என்பது உலகிற்கு ஆதாரமான  பஞ்ச பூதங்களையும் உடலுக்கு ஆதாரமான ஐம்புலன்களையும் குறிக்கும். மேலும்  உ என்ற எழுத்தின் வடிவம்  யானை தனது தும்பிக்கையை தூக்கி சுருட்டியதை போல இருக்கும் . இந்த எழுத்தே விநாயகரின் வடிவமாக இருக்கிறது.  

எந்த செயலை செய்யும் முன்னர் பிள்ளையாரை வணங்கி விட்டு செய்தால் அவர் துணையிருந்து எந்த தடையும் வராமல் அந்த செயலை செய்து முடிக்க உறுதுணையாக இருப்பார். அதே போல எழுத்து வேலையாக இருந்தால்  பிள்ளையார் சுழியை போட்டு துவங்கி அது கடிதமோ கட்டுரையோ கதையோ நன்றாக வர வேண்டும் என்று இறைவன் துணையோடு ஆரம்பித்து முடிக்கிறோம். வேத வியாசர் மகாபாரதம் எழுத துவங்கும் முன்னர் தடையில்லாமல் தனது எழுத்து நடைபெற பிள்ளையாரின் ஆசியை வேண்டினார். அவருக்கு காட்சி கொடுத்த பிள்ளையார் தனது ஒரு தந்தத்தினை உடைத்து, அதைக் கொண்டு வியாசர் சொல்ல மகாபாரதக் கதை எழுதியதாக செய்தி ஒன்று உண்டு.

குழந்தைகளுக்கு அதிகமாக பவுடர் பூசுகிறீர்களா? தாய்மார்களே உஷார்!

மூலவர்கள் இருவர்; உத்ஸவர்கள் ஐவர்: எந்தக் கோயிலில் தெரியுமா?

வெண்டைக்காயை சுவையாக சமைக்க சில டிப்ஸ்!

ஸ்வெட்டர்களின் சுவாரஸ்யமான வரலாறு பற்றி தெரியுமா?

மாயன்களின் வரலாறு என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT