சிவபெருமான் அருளும் சிவ தலங்களை தரிசிப்பதும் சந்திரனின் பெயரோடு விளங்கும் சிவாலயங்களுக்கு செல்வதும் கார்த்திகை மாதத்தில் மிகவும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் ‘சோமவார விரதம்’ எனப்படும் திங்கட்கிழமை விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சோமவாரம் சிவனுக்கு உகந்த நாள் என்பதாலும், அதிலும் கார்த்திகை சோமவாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் சிவாலயங்களில் சிவனுக்கு மிக சிறப்பான அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
சிவாலயங்களில் கார்த்திகை மாத சோம வாரங்களில் ‘சங்காபிஷேகம்’ நடைபெறும். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னி பிழம்பாக இருப்பதாகவும் எனவே, அவரை குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வதாகவும் கூறப்படுகிறது. கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி யாகசாலைகளில் வைத்து வேள்வி செய்து அந்த நீரால் சிவபெருமானை அபிஷேகிப்பது வழக்கம். சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அதுவும் சங்கால் செய்யப்படும் அபிஷேகம் மிகவும் சக்தி வாய்ந்தது. சங்காபிஷேகத்தை நேரில் காண சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் சிவனை வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபட, வறுமை நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும். சிவனின் அருளால் செழிப்பான வாழ்வைப் பெறலாம். கார்த்திகை சோமவாரங்களில் விரதம் இருந்து ஒருபொழுது மட்டும் உண்டு விரதத்தை கடைபிடிக்க நோய்கள் நீங்குவதுடன், வாழ்க்கைத் துணை சிறப்பான முறையில் அமையும். தம்பதியரின் ஒற்றுமை ஓங்கும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். ஆயுள் விருத்தி அடையும் என்று கார்த்திகை மாத ஈசனின் வழிபாட்டை சிறப்பித்து கூறப்படுகிறது. இந்த சோமவார விரதத்தை வாழ்நாள் முழுவதும் அல்லது 12 ஆண்டுகள் தொடர்ந்து கடைபிடித்தாலோ அனைத்து வளங்களையும் பெற்று வாழலாம். இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமையிலாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நல்லது.
சோமவார விரதம் இருப்பவர்கள் மாலை வேளையில் சிவாலயத்திற்குச் சென்று வழிபடுவதும், முழு நெல்லிக்கனியில் சிறிய துளையிட்டு அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு விளக்கேற்றி வழிபட மிகவும் நல்லது. சோமவார விரதத்தை கடைப்பிடித்துதான் சந்திரன் சிவபெருமானின் தலையில் விளங்கும் பேறு பெற்றார். அந்த அளவிற்கு கார்த்திகை சோமவார விரதம் மிகவும் புகழ் பெற்றது.
கார்த்திகை சோமவார பிரதோஷத்தன்று ஈசனை தரிசிப்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தைப் பெறுவார்கள். சோமவார பிரதோஷத்தன்று நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி ஈசனுக்கு வில்வம், மரிக்கொழுந்து போன்ற மலர்களை அர்ச்சனைக்குக் கொடுப்பதும் விசேஷம். முக்கியமாக நந்தி தேவருக்கு பச்சரிசியும் பயத்தம் பருப்பும் ஊற வைத்து அத்துடன் வெல்லம் சேர்த்து காப்பரிசியாக்கி நிவேதனம் செய்ய வாழ்வில் சிறப்பான நிலையைப் பெறலாம்.
சந்திரனை தலையில் சூடி சோமசுந்தரராகக் காட்சி தரும் ஈசனை கார்த்திகை சோமவார விரதம் இருந்து, சங்காபிஷேகம் தரிசனம் செய்ய உடலும் மனமும் ஆரோக்கியம் அடையும். அதேபோல், தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு தோஷம் போக்கவும், வளர்பிறை பிரதோஷம் வாழ்வில் வளம் சேர்க்கவும் ஏற்றது. சிவ ஆலயம் சென்று நந்தி கொம்புகளுக்கு இடையே நடனமாடும் சிவ தரிசனம் காண வாழ்வில் வளங்கள் பல பெறலாம்.