tourist places 
பயணம்

சுற்றுலா செல்லப் போகிறீர்களா? இதைப் படித்துவிட்டுப் புறப்படுங்கள்!

ஆர்.வி.பதி

நாம் மே மாத கோடைக்காலத்திலேயே சுற்றுலாவிற்குச் செல்லும் வழக்கத்தை வைத்திருக்கிறோம். உங்கள் சுற்றுலா கிட்டில் தொப்பி மற்றும் கூலிங் கிளாஸிற்கு முக்கிய இடத்தைக் கொடுங்கள். தில்லி போன்ற கடும் வெப்பம் நிலவும் பகுதிகளுக்குச் செல்லும் போது தொப்பி உங்கள் தலையைக் காக்கும். கூலிங் கிளாஸ் உங்கள் கண்களைக் காக்கும்.

மூன்று பேர்கள் சுற்றுலா சென்றால் மூன்று ஏர் பேகை எடுத்துச் செல்லுங்கள். அவரவர் உடைமைகளை தனித்தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அவரவர் உடைமைகளை அவரவர் தூக்கிச் சென்றால் சுமை குறையும். பாதுகாப்பாகவும் இருக்கும்.

சுற்றுலா செல்லும் பெரும்பாலோர் அளவிற்கதிகமாக ஏர்பேக் மற்றும் டிராலி பேகுகளைக் கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறோம். பலர் ஐந்து நாள் சுற்றுலாவிற்கு பத்துநாள் அணியும் உடைகளைக் கொண்டு செல்லுவார்கள். இதனால் ஏற்படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. மேலும் கொண்டு செல்லும் பைகள் பத்திரமாக இருக்கின்றனவா என்பதை நாம் அடிக்கடி செக் செய்ய வேண்டிவரும்.

வனப்பகுதிகளுக்குச் செல்லும்போது முன்னதாக உங்கள் டாக்டரிடம் ஆலோசித்து பூச்சிக்கடி மருந்து முதலான முதலுதவி மருந்தை வாங்கிக் கொண்டு செல்லுங்கள். இத்தகைய பகுதிகளில் பூச்சிகள் மற்றும் விஷ வண்டுகளின் நடமாட்டம் மிக அதிகமாக இருக்கும். எதிர்பாராதவிதமாக வண்டுகள் பூச்சிகள் உங்களைக் கடித்தால் இத்தகைய மருந்துகள் மிகவும் பயனுடையதாக இருக்கும்.

அலுவலகத்தில் LTC வசதியை பயன்படுத்தி சுற்றுலா செல்லுவோர் ஒரு சிறிய ஜிப் வைத்த பையைக் கொண்டு செல்லுங்கள். அதில் நீங்கள் பயணிக்கும் டிக்கெட்டுகள் மொத்தத்தையும் போட்டு பத்திரப்படுத்துங்கள். பின்னர் திரும்பி வந்ததும் டிக்கெட்டை தொலைக்காமல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வசதியாக இருக்கும்.

tourist places

விமானத்தில் செல்லும் போது மட்டும் டிராலிபேகை எடுத்துச் செல்லுங்கள். பேருந்து மற்றும் இரயில் பயணங்களில் செல்லும் போது கூடுமானவரை சிறிய ஏர் பேகை எடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு பேகிற்கு மேலேயும் உங்கள் முகவரி அச்சடிக்கப்பட்ட சீட்டை ஒட்டி வையுங்கள். எதிர்பாராத விதமாக தொலைந்து போனால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

சுற்றுலாவின் போது ஷாப்பிங் செய்வீர்கள். மறக்காமல் உடன் ஒரு காலி ஏர் பேகை எடுத்துச் செல்லுங்கள். அப்படிச் செய்யாமல் விட்டுவிட்டு சுற்றுலாவில் வாங்கிய பொருளைப் போடுவதற்கென்றே ஒரு ஏர்பேகை வாங்கி காசை வீணடிப்பவர்கள் ஏராளம். மேலும் சுற்றுலாத் தலங்களில் இத்தகை பைகளின் விலைகள் ஒன்றுக்கு இரண்டு மடங்காக இருக்கும். தரமற்றதாகவும் இருக்கும்.

கட்டுரையாசிரியர் ஆர்.வி.பதி

வெளியூர்களில் ஓட்டல்கள் மற்றும் பொது இடங்களில் கிடைக்கும் குடிதண்ணீரை பயன்படுத்தாதீர்கள். பொதுவாக வியாதிகள் அனைத்தும் குடிதண்ணீரின் மூலமே பரவுகின்றன. காசு போனால் போகிறது என்று மினரல் தண்ணீர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்துங்கள். அல்லது சுடுநீரைக் குடியுங்கள்.

முதல் வேலையாக உங்கள் சுற்றுலா டாக்சி டிரைவரின் மொபைல் எண்ணை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். டாக்சி டிரைவர் டூரிஸ்ட் ஸ்பாட் அல்லது கோயில்களில் உங்களை இறக்கி விட்டு காரை ஓரிடத்தில் பார்க் செய்து நீங்கள் திரும்பி வரும்வரை காத்திருப்பார். நீங்கள் பார்க்க வேண்டியவற்றை பார்த்து முடித்ததும் அவரை அழைக்க வேண்டும். அப்போதுதான் அவர் உடனே புறப்பட்டு வருவார். மொபைல் எண்ணை வாங்கிக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் அவருக்காக காத்திருக்க நேரிடும். நீங்கள் எப்போது திரும்பி வருவீர்கள் என்பதும் அவருக்குத் தெரியாது. இதனால் நேரம் வீணாகி ஓரிரு இடங்களை நீங்கள் பார்க்க இயலாமல் போகலாம்.

குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்றால் இங்கிருந்தே ஸ்வெட்டர், கிளவுஸ், ஜெர்கின் போன்றவற்றை வாங்கிக் கொண்டு செல்லுங்கள். அங்கே போய் கடையைத் தேடி அவதிப்பட வேண்டாம். மேலும் சுற்றுலா பிரதேசங்களில் விலை அதிகமாக இருக்கும். தரமற்றதாகவும் இருக்கலாம். குளிர்பிரதேசங்களுக்குச் செல்லும் போல லிப்கார்ட், வாசலைன் போன்றவற்றை கொண்டு செல்லுங்கள். இதனால் உதடு வெடிப்பதை தவிர்க்கலாம்.

உங்களுடைய முகவரி, அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய நெருங்கிய உறவினர்களின் மொபைல் எண்கள், இரத்த வகை போன்றவற்றை ஒரு விசிட்டிங் கார்டை போல தயார் செய்து அதில் உங்கள் ஸ்டாம்ப் சைஸ் போட்டோவை ஒட்டி எப்போதும் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். எதிர்பாராத ஆபத்தான சமயத்தில் இது உங்களுக்கு நிச்சயம் உதவும்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அவற்றைப் பற்றிய எந்த ஒரு அடிப்படை விஷயத்தையும் தெரிந்த கொள்ளாமல் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பல போலி கைடுகள் உங்களை அணுகுவார்கள். நிறைய பணத்தை செலவழித்து சுற்றுலா சென்று இதுபோன்ற ஆசாமிகளிடம் மாட்டிக் கொண்டு தவறான தகவல்களை நீங்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா கைடுகளை (Govt. Approved Tourist Guides) கிடைப்பார்கள். அவர்களை நீங்கள் நியமித்துக் கொள்ளுங்கள்.

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

SCROLL FOR NEXT