கறுப்புக் கற்களால் கட்டப்பட்ட மிகப் பழைமையான கோயில். இங்குதான் கிருஷ்ணா, கோய்னா, சாவித்திரி, வென்னா மற்றும் காயத்ரி நதிகள் சங்கமிக்கின்றன. ஐந்து நதிகளும் ஒரு பசு முகம் போன்ற அமைப்பின் வாயிலாக வெளி வந்து பெரிய தொட்டியில் நிரம்பி பின் வெளியே செல்கின்றன.
தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வரும் அற்புதமான கட்டுமானமும் சிற்பங்களும் உள்ள கோயில். இங்கிருந்துதான் கிருஷ்ணா நதி உற்பத்தியாகிறது. காவிரியைப் போலவே சிறியதாக உருவெடுத்து பின் பிரம்மாண்டமாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த ஊர் பெயர் வரக் காரணமாயிருக்கும் கோயில் இதுதான். மகாபல், அதிபல் என்ற இரு அரக்கர்களின் வேண்டுகோளுக்கிணங்கி மும்மூர்த்திகளும் இங்கேயே லிங்க ரூபத்தில் அருள் புரிவதாகக் கூறுகிறது புராணம். கருவறை லிங்கம் 1000 வருடங்களுக்கு மேல் புராதனமானது.
மராட்டிய மண்ணின் வீர மைந்தன் சத்ரபதி சிவாஜியின் பெருமையைப் பறை சாற்றும் இடங்களில் இதுவும் ஒன்று. சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது. ஆங்காங்கே சிதலமடைந்திருந்தாலும் பெரும்பகுதி அப்படியே உள்ளது கடல்மட்டத்திலிருந்து 1081 மீ உயரத்தில், 4000 சதுர மீட்டர் பரவி உள்ள இந்தக் கோட்டை சிவாஜியால் 1656 ஆண்டில் கட்டப்பட்டது.
பொழுது போக்க களிப்பான இடம். அங்கும் இங்கும் அலைந்து திரிந்து மாலையில் இங்கே வரலாம். மழலைகள் குதூகலிப்பர் சூரியன் மறையும் நேரத்தில் ஏரியே ஆரஞ்சு பழச்சாறு போலத் தோற்றமளிக்கிறது. பஞ்ச கங்கா கோயிலில் பிரசன்னமாகும் வென்னா நதி இங்கு ஏரியாக நீர்நிலையாக மாறுகிறது. கேளிக்கைகளுக்குப் பஞ்சமில்லை. பசுமையான பிரதாப் சிங் தோட்டம், படகு சவாரி, ராட்சத சக்கரம், பொம்மை ரயில், விளையாடும் இடங்கள் என்று எல்லாமே உள்ளன. உள்ளே தாவிரவியல் தோட்டம், கண் காட்சியகம், கொஞ்சம் தூரத்தில் ஒரு குகையும் உள்ளது.
பிரதானமான வியூ பாயின்ட் இதுதான். இங்கேயே ஐந்தாறு முனைகளும் உள்ளன. சுற்றுப்புற இயற்கை வனப்பு மனத்தைக் கொள்ளை கொள்கிறது. முன்னால் சஹாயாத்ரி மலைத் தொடர் டிராகன் போல் காட்சி அளிக்கிறது.
இயற்கையின் அதிசய அமைப்புகளில் இதுவும் ஒன்று. இந்த முனையின் மேல் பகுதியை மட்டும் முத்தமிடுவது போல் மற்றொரு பாறை அமைந்திருக்கிறது. இங்கே பாறைகளும், மலைகளும் வெவ்வேறு வடிவங்கள் கொண்டு அமைந்துள்ளன. ஏதோ ஒரு சிற்பி செதுக்கியதைபோல் இருக்கின்றன.
உதயசூரியனைக் காண சரியான இடம். வாட்ச் டவர் உள்ளது. 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' என்று இங்கு பாடலாம்.
மகாபலேஸ்வரிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள அழகான தலம் பஞ்சகனி ஐந்து மலைகள் சூழ்ந்துள்ளதால் இந்தப் பெயர். ஆசியாவிலேயே எரி மலைப் பாறைகளில் இரண்டாவதாக மிகப் பெரியது இதுதானாம். இங்கும் இரண்டு குகைகள் உள்ளன. இங்கு பாண்டவர்கள் சமைத்து உண்டார்களாம்.