புலிக்குகை 
பயணம்

புலிக்குகை எங்கே இருக்கு தெரியுமா?

ஆர்.வி.பதி

ழாம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய நகரம் மாமல்லபுரம். இது மஹாபலிபுரம், மல்லை, மகாலிபுரம் என்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னர்கள் மாமல்லபுரம் என்ற இந்த பகுதியில் துறைமுகம் ஒன்றை நிறுவினார்கள். முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி.630 முதல் கி.பி.668 வரை) காலத்தில் இத்துறைமுகம் சிறந்து விளங்கியது. நரசிம்ம வர்ம பல்லவன் மிகச் சிறந்த மல்லன். மல்லர்களில் மகா மல்லன். நரசிம்ம வர்மன் மாமல்லன் என்று அழைக்கப்பட்டார்.

முதலாம் மகேந்திர வர்ம பல்லவன் (கி.பி.600 முதல் கி.பி.630 வரை) இத்துறைமுக நகரத்தில் குகைக் கோயில்களை அமைத்து சிற்பக்கலையில் புதுமைகள் பல செய்தார். இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் (கி.பி.630 முதல் கி.பி.668 வரை) தன் தந்தையைத் தொடர்ந்து குன்றுகளைக் குடைந்து குகைக் கோவில்களையும் மலையைச் செதுக்கிக் கோயில்களையும், திறந்த வெளியில் அமைந்த பாறைகளில் புடைப்புச் சிற்பத் தொகுதிகளை அமைத்தும் சாதனை படைத்தார். இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இரண்டாம் மகேந்திரவர்மன், முதலாம் பரமேஸ்வரவர்மன், இரண்டாம் நரசிம்மன் எனும் இராஜசிம்மன் ஆகியோரும் இந்த அற்புதப் பணியினைத் தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தார்கள்.

பல்லவர்களின் கைவண்ணத்தில் உருவானதுதான் புலிக்குகை எனும் பல்லவர் கால கலைச்சிற்பத் தொகுதிகள். சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் பாதையில் மாமல்லபுரத்திற்கு முன்னதாக சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் சாளுவன்குப்பம் என்ற இடத்தில் கடற்கரையினை ஒட்டி இந்த புலிக்குகை அமைந்துள்ளது. இதற்கு புலிக்குகை என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது என்பது தெரியவில்லை.

புலிக்குகை

ஒரு குன்று போன்ற அமைப்பினைக் குடைந்து இந்த குடைவரை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மையத்தில் ஒரு சிறிய மேடை போன்ற அமைப்பு காணப்படுகிறது. தரையிலிருந்து சுமார் இரண்டு மீட்டர் உயரத்தில் இந்த மேடை அமைப்பு காணப்படுகிறது. மேடையை அடைய படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடைவரை முற்றுபெறாத ஒரு குடைவரையாகவே காட்சி தருகிறது. இந்த குடைவரையின் முகப்பில் பதினோரு யாளித் தலைகள் அரை வட்ட அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த குடைவரையின் முகப்பில் அமைந்துள்ள திறந்தவெளிப் பகுதியில் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது குடைவரை மேடையினுள் அமர்ந்து மன்னர் நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இப்பகுதியில் அமைந்துள்ள அதிரணசண்ட பல்லவேஸ்வர கோயிலுக்கு எதிரே காணப்படும் ஒரு பாறையில் கொற்றவை மகிஷாசுரனுடன் போரிடும் காட்சியானது புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் கொற்றவை தனது வலது காலை தாமரை மலர்பீடத்தின் மீது வைத்து தனது இடது காலை சிம்மத்தின் மேல் வைத்த நிலையில் ஆறு திருக்கரங்களுடன் மகிஷனுடன் போர் புரிய மகிஷன் புறமுதுகிட்டு ஓடும் காட்சி அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் முற்காலத்தில் முருகன் கோயில் ஒன்று இருந்துள்ளது. நாளடைவில் மண்ணுக்குள் புதைந்து போனது 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின் போது இக்கோயில் வெளிப்பட்டது. தற்போது சங்ககால செங்கல் அடித்தளம் மட்டுமே காட்சியளிக்கிறது.

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT