பயணம்

சம்மர் தொடங்கிடுச்சா? அப்போ கொல்லி மலைக்கு ஒரு ட்ரிப் போகலாமா?

கார்த்திகா வாசுதேவன்

தமிழகத்தில் திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களைத் தொட்டுக் கொண்டு நீண்டு கிடக்கும் மிகச்சிறிய மலைத்தொடரே கொல்லி மலை. இதன் அருமை பெருமைகளை தமிழர்களான நாம் எப்போதும் உணர்ந்தே இருக்கிறோம். பண்டைக்காலம் முதலே இதன் எழிலை நம்மவர்கள் பெருங்காப்பியங்கள் முதலாக சிறுகாப்பியங்கள் வரையிலும் பதிவு செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல முன்பெல்லாம் திகில் படங்களோ, மாயஜால மந்திரவாதப் படங்கள் எடுக்க வேண்டும் என்றால் அதில் ஓரிடத்திலாவது கொல்லி மலையைப் பற்றி உச்சரித்தே ஆக வேண்டும். அந்த அளவுக்கு கொல்லி மலையின் ரகசியங்கள் அதைப் பற்றி கேள்விப்படுவோரின் இதயத்தில் அபூர்வமான கிலியை ஏற்படுத்தக் கூடியவையாகவும் இருந்தன. எங்கள் பாட்டி சொல்வார், ‘என்னைக்கு வெள்ளைக்காரன் கரண்டு கண்டுபிடிச்சானோ... அன்னைக்கே ஊருக்குள்ள உள்ள பேயெல்லாம் காணாமப் போயிடுச்சு. பேய்க்கதைகளும் செத்துப் போச்சு’ என்பார் அடிக்கடி. அப்படித்தான் 80 களில் கூட கொஞ்சமாக எஞ்சியிருந்த கொல்லி மலை மாய மந்திரவாத பயம் எல்லாம் இப்போது 21 நூற்றாண்டுப் பிள்ளைகளிடம் சுத்தமாக இல்லாமல் போயே போய் விட்டது. இப்போது அது ஒரு சூப்பர் டூர் ஸ்பாட்.

ஒரு சேஞ்சுக்கு நீங்களும் கூட ஒரு முறை கொல்லி மலைக்கு டூர் பிளான் பண்ணுங்களேன்.

அப்படி அங்கே என்ன இருக்கிறது பார்க்க என்பவர்களுக்காகத் தான் இந்தக் கட்டுரை.

கடல் மட்டத்திலிருந்து 1300 மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கொல்லி மலை வனப்பகுதி சுமார் 280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. வாழ்நாளில் ஒருமுறையாவது குடும்பத்தினர் அனைவருமாக அவரவர் உறவினர் மற்றும் நண்பர்களுடன் இங்கு சுற்றுலா சென்று திரும்பா விட்டால் இதுவரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையே வேஸ்ட் என்கிறார்கள் ஏற்கனவே அங்கு போய் வந்தவர்கள்.

தாவரவியல் பூங்காக்கள், மூச்சடைக்கச் செய்யும் அளவுக்கான பிரமிப்பைத் தரும் வியூ பாயிண்டுகள், இயற்கையுடன் இயைந்த ஈக்கோ ஃப்ரெண்ட்லி காட்டேஜுகள், ரோஸ் கார்டன், சிறுவர் பூங்காக்கள் என அங்கு காணக் கிடைக்கும் அத்தனையுமே மிக ரம்மியமானவை.

இவை தவிர;

டாம்ப்கல்(Tampcol Medicinal Farm) மருத்துவப் பண்ணை...

இங்கு தான் இருக்கிறது. தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான இந்த மருத்துவப் பண்ணை வசலூர்பட்டி செல்லும் வழியில் இருக்கிறது.வார நாட்களில் காலை 8

மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். இங்கு ஏராளமான தரமான மூலிகை எண்ணெய் மற்றும் மருந்துகளை அரசே தயாரித்து விற்பனை செய்கிறது.

அறப்பளீஸ்வரர் கோயில்...

திராவிட கட்டிடக் கலைக்குச் சான்றாக விளங்கும் இந்தக் கோயில் காலை 6 மணி முதல் நண்பகல் வரையிலும் மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆகாய கங்கை அருவி...

அறப்பளீஸ்வரர் கோயிலில் இருந்து 1 கிமீ தொலைவில் இருக்கிறது இந்த ஆகாய கங்கை அருவி. 300 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவியின் மூலிகை வாசம் நிறைந்த தண்ணீரில் குளிப்பது ஒரு சுகானுபவம்.

வசலூர்ப்பட்டி போட் ஹவுஸ்...

வசலூர்பட்டி ஏரி என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரி. சுற்றிலும் பசும் புல்வெளி விரிந்து கிடக்க நடுவில் இந்த ஏரியில் போட்டிங் செய்வது ஆனந்தமான அனுபவம்.

இவை தவிர கொல்லி மலையைப் பற்றிச் சொல்வதென்றால் சங்ககாலத்தில் இப்பகுதி கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி என்பவரின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தது என்கின்றன சங்கப்பாடல்கள்.

ராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாகக் கருதப்படும் மதுவனம் இந்த மலைப்பகுதி தான் என்று ஒரு ஐதீகக் கதையும் உண்டு.

அத்துடன் பெருஞ்சேரலிரும்பொறை எனும் மன்னன் தன்னைத் தாக்கிய அதிசயமானையும் மற்றொரு அரசனையும் இந்தக் கொல்லி மலையில் வைத்து வென்றதாக சங்கப்பாடல் ஒன்று கூறுகிறது. அதனால் தான் அம்மன்னனுக்கு கொல்லிப் பொருநன் என்றொரு பெயரும் வந்ததாம்.

சுவாரஸ்யமூட்டும் கொல்லிப் பாவை கதைகள்…

இவை எல்லாவற்றையும் காட்டிலும் இங்கு நம்மை ஈர்க்கக் கூடிய மற்றொரு அம்சமும் உண்டு அது தான் கொல்லிப் பாவை.

இந்தக் கொல்லிப்பாவை குறித்துப் பல்வேறு கதைகள் உலவினாலும் உண்மையில் கொல்லிமலையில் வீற்றிருக்கும் தமிழர்களின் தெய்வம் தான் இந்த பாவை என்கிறார்கள். இது குடைவரை கோயிலாக, கிட்டத்தட்ட 15ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு இருந்ததாக சித்தர்களால் சொல்லப்படுகிறது. மிகவும் உக்கிரமான தெய்வங்களில் ஒன்றாக இந்தக் கொல்லிப் பாவை கருதப்படுகிறது. இதற்கு சான்றாக சங்ககால ஓலைசுவடிகள் இருக்கின்றன. குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு 9 கோவில்கள் இருந்ததாகவும் அவைகளில் 8 கோவில் ஆழிபேரலையினாலும், கடல்கோளினாலும் அழிந்ததாகவும். மீதமுள்ள 1 மட்டும்

இன்னமும் இருப்பதாகவும் இந்த பாவையை வழிபட எந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும், மந்திரங்களும் தேவையில்லை எனவும் சொல்லப்பட்டு வருகிறது.

குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு விழா எடுத்து கொண்டாடி வந்திருக்கிறார்கள். மரப்பாவை விழா, மூங்கில்பாவை விழா, இஞ்சிப்பாவை விழா போன்ற வழிபடுமுறைகள் கொல்லிப் பாவை சார்ந்தவையே என்கிறார்கள்.

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT