தால் ஏரி,,, 
பயணம்

பூலோக சொர்க்கம் காஷ்மீரைச் சுற்றிப் பார்க்கலாம் வாங்க!

ஆர்.வி.பதி

சில வருடங்களுக்கு முன்னால் காஷ்மீர் செல்லக்கூடிய அரிய வாய்ப்பு கிடைத்தது. காஷ்மீரை பூலோக சொர்க்கம் என்றால் அது மிகையாகாது. காஷ்மீரில் பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலாத் தலங்களை இப்போது பார்க்கலாம்.

தால் ஏரி காஷ்மீரின் மிக பிரம்மாண்டமான ஏரி. இங்கு ஆயிரக்கணக்கான படகுவீடுகள் காணப்படுகின்றன. படகுவீட்டில் தங்குவதென்பது அலாதியான அனுபவம். தால் ஏரியின் கரையிலிருந்து மூன்று நிமிட படகுப் பயணத்தில் படகு வீடுகளை அடைந்து விட முடியும். இந்த சிறிய படகுப்பயணம் ஷிக்காரா ரைட் என்று அழைக்கப்படுகிறது. ரோட்டின் கரையிலிருந்து படகு வீடுகளுக்குச் செல்ல இந்த சிறிய பதினைந்து அடி நீளமுள்ள படகில் பயணிக்க வேண்டும்.

படகு வீடுகள் வெளியிலிருந்து பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் தோன்றுகிறது. ஆனால் உள்ளே சென்றதும் அதன் பிரம்மாண்டம் நமக்குப் புரிகிறது. படகு வீடுகள் பொதுவாக இருபது அடி அகலமும் நூற்றி இருபத்தி ஐந்து அடி நீளமும் உடையது. இவை காஷ்மீர் பகுதிகளில் கிடைக்கும் சீடர் என்றொரு மரத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது. இவ்வீட்டை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைத்திருக்கிறார்கள். படகு வீட்டிற்குள் ஒரு வரவேற்பரை, ஒரு டைனிங் அறை, ஒரு சிறிய சமையல் அறை, மூன்று படுக்கைகள் கொண்ட மூன்று அறைகள் காணப்படுகின்றன. ஓவ்வொரு படகு வீடும் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ளது என்கிறார்கள்.

துலிப் கார்டன்

துலிப் காஷ்மீரின் பிரத்யோகமான மலர். துலிப் கார்டன் பொதுமக்கள் பார்வைக்காக ஏப்ரல் மாதம் மட்டுமே திறக்கப்படுகிறது. சுமார் முன்னூறு ஏக்கர் பரப்பளவில் துலிப் கார்டன் பார்க்க ரம்மியமாக இருக்கிறது. என்னவெல்லாம் வண்ணங்கள் இருக்கின்றனவோ அத்தனை வண்ணங்களிலும் துலிப் மலர்கள் காணப்படுகின்றன. துலிப் செடியானது சுமார் ஒன்றரை அடி உயரமே காணப்படுகிறது.

மொகல் கார்டன் பார்ப்பதற்கு ஊட்டி கார்டனைப் போலத்தான் இருக்கிறது. அங்கு வீசும் குளிர் உடலைத் தொட்டு நம் மனதையும் சிலிர்க்கச் செய்கிறது. அணுஅணுவாக இரசிக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் அரைநாளாவது ஆகும்.

சோன்மார்க் ஸ்ரீநகரிலிருந்து சுமார் 81 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத்தலம். ஏப்ரல் மே மாதங்களில் இங்கே பனிமலைகளைப் பார்த்து மகிழலாம். சோன்மார்க் லடாக்கின் நுழைவாயில். சிந்து நதி பாயும் இந்த பகுதியில் பைன் மரங்கள் நீண்டு வளர்ந்துள்ளன. அமர்நாத் யாத்திரை செல்ல வேண்டுமென்றால் சோன்மார்க் வழியாகத்தான் செல்ல வேண்டும். இங்கிருந்து சுமார் 145 கிலோமீட்டர் தொலைவில் அமர்நாத் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கிருஷ்ணாசார் மற்றும் விஷான்சார் நதிகள் காணப்படுகின்றன. சோன்மார்க் பனிப்பிரதேசத்திற்குச் செல்ல சுமார் இரண்டு கிலோமீட்டர் குதிரையில் பயணிக்க வேண்டும். மலையை ஒட்டிய பாதையில் ஒரு குதிரைக்கு ஒருவர் வீதம் ஏற்றிக் கொண்டு குதிரை ஓட்டுபவர்கள் குதிரையைப்பிடித்துக் கொண்டு நம்முடனே வருகிறார்கள். சுமார் முக்கால் மணி நேர பயணம். ஸ்லெடஜ்; வண்டிகளும் இங்கே வாடகைக்குக் கிடைக்கின்றன. மரத்திலான இந்த வண்டியில் நம்மை அமரவைத்து ஒரு நீளமான கயிற்றைப் பிடித்து இழுத்துச் செல்லுகிறார்கள். நாங்கள் சென்ற சமயம் நல்ல பனிமழை பொழிந்து கொண்டிருந்தது.

குதிரை சவாரி...0

பஹல்காம் ஸ்ரீநகரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலாத்தலம். சுமார் இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின்னால் பஹல்காமிற்குள் நுழைந்தோம். இங்கும் குதிரைச்சவாரி இருக்கிறது. குதிரையில் மீது ஏறி அமர்ந்து இங்குள்ள முக்கியமான இடங்களைப் பார்த்து மகிழலாம். இந்த பகுதியில் மினி சுவிட்சர்லாந்து அமைந்துள்ளது. பார்ப்பதற்கு வெளிநாடு போலவே காணப்படுகிறது. பூங்கா முழுவதும் சுமார் மூன்று அடிக்கு பனி நிரம்பி இருந்தது. கால்களை வைத்தால் உள்ளே செல்லும் அளவிற்கு பனி நிரம்பி வழிந்தது.

குல்மார்க் ஸ்ரீநகரிலிருந்து சுமார் 67 கிலோமீட்டர் தொலையில் அமைந்துள்ள ஒரு உலகப் பிரசித்த பெற்ற குளிர்பிரதேசம். பனி மழை பொழியும் சமயங்களில் ஸ்லெட்ஜ் காடி எனப்படும் ஒரு சிறிய மரவண்டியில் அமர வைத்து சுற்றுலாப் பயணிகளை இழுத்துச் செல்லுகிறார்கள். இங்கு கோல்ப் மைதானம், செர்ரித் தோட்டம், ஐஸ் ஹாக்கி கிரவுண்ட் முதலான பகுதிகளைக் கண்டு மகிழலாம். இங்கு ரோப் கார் ஸ்டேஷன் அமைந்துள்ளது.

பயணத்தின்போது கட்டுரையாசிரியர்...

குல்மார்க் உச்சிக்குச் செல்ல ரோப் கார் இயக்கப் படுகிறது. சுமார் இருபது நிமிட நேர த்ரில்லிங்கான பயணம். பத்தொன்பது டவர்களைத் தாண்டிச் செல்லுகிறது. ஒரு ரோப் காரில் நான்கு பேர்கள் பயணிக்கலாம். மெல்ல மெல்ல மிக உயரத்திற்கு அழைத்துச் செல்லுகிறார்கள். இருபது நிமிடங்கள் செல்லுவதே தெரியவில்லை. வழியில் ஸ்கீயிங் மூலம் மனிதர்கள் சறுக்கிக் கொண்டு கீழே இறங்குவதைப் பார்த்து இரசிக்க முடிகிறது. ரோப்காரிலிருந்து இறங்கி பனிப்பிரதேசத்திற்குச் சென்று பனியில் விளையாடி மகிழ்ந்தோம். நான்கு நாள் காஷ்மீர் பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாது பயணமாக அமைந்தது.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT