tourist places... 
பயணம்

சுற்றுலா – மனதைத் திறக்கும் மந்திர சாவி!

ஆர்.வி.பதி

சுற்றுலா என்பது நம் வாழ்க்கையில் தவிர்க்கக் கூடாத ஒரு விஷயமாக இருக்க வேண்டும். அது நம் வாழ்க்கையின் ஒரு அங்கம். பிறப்பு, வளர்ச்சி, கல்வி, பொருள் ஈட்டுதல், குழந்தைகள், அவர்களின் திருமணம், நம் எதிர்காலம், ஏமாற்றங்கள், வயோதிகம், இறப்பு. இதுவே நம்மில் பலருடைய வாழ்க்கைப் பயணமாக அமைந்து விடுகிறது. உலகில் உள்ள உயிரினங்களில் மனிதர்களாகிய நாம் மட்டும்தான் எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டு நிகழ்காலத்தை அனுபவிக்காமல் இருந்து விடுகிறோம். “நிகழ்காலத்தில் வாழுங்கள்” (Live in the Present Moment) என்பதே மகான்களின் பிரதான போதனையாகும்.

பிரம்மாண்டமான இந்த பூமியில் நாம் நிற்கும் இடம் எவ்வளவு ஒரு மிகச் சிறிய புள்ளி என்பதை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். விதவிதமான இடங்கள், விதவிதமான மனிதர்கள், விதவிதமான மொழிகள், விதவிதமான மனோபாவங்கள், விதவிதமான அனுபவங்கள். நல்லவர்கள், கெட்டவர்கள், ஏமாளிகள், ஏமாற்றுபவர்கள் என பலதரப்பட்ட மனிதர்களையும் நாம் சந்திக்கும் வாய்ப்பை சுற்றுலா ஏற்படுத்தித் தரும். உலகின் எந்த ஒரு கல்வி நிலையமும் கற்றுத் தராத கற்றுத் தர இயலாத விஷயங்களை சுற்றுலா மட்டுமே கற்றுத் தரும். இந்த பிரம்மாண்டமான உலகத்தில் நாம் யார் என்பதை நமக்குப் புரிய வைக்கும். சுற்றுலா நம் மனதைத் திறக்கும் ஒரு மந்திர சாவி.

சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார், வேன், பேருந்து, லாரி, ரயில், மாட்டுவண்டி, குதிரை வண்டி, படகு, கப்பல், விமானம், ஹெலிகாப்டர் என பலவிதமான வாகனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித் தன்மையானவை. தனியே பயணிக்க சைக்கிள், துணையோடு பயணிக்க மோட்டார் சைக்கிள், முன்பின் தெரியாதவர்களோடு பயணிக்கப் பேருந்து, கூட்டம் கூட்டமாய் பயணிக்க ரயில், சொகுசாய் பயணிக்க கார், விலங்குகளோடு பயணிக்க மாட்டுவண்டி, குதிரை வண்டி, தண்ணீரில் பயணிக்க படகு, கப்பல், நம்மிடம் நிறைவான செல்வ வளம் உள்ளது என்பதை நமக்கும் பிறருக்கும் உணர்த்தும் விமானப் பயணம் இப்படி ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒன்றை நமக்கு உணர்த்துகின்றன.

சுற்றுலா நமது மனதை மேம்படுத்தும். பலதரப்பட்ட இடங்களுக்கு நாம் பயணிக்கும்போதுதான் ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்படுவர்களையும், இருக்கும் சொற்ப பணத்தை பார்த்துப் பார்த்து செலவு செய்பவர்களையும், செல்வத்தில் புரளும் ஆடம்பர மனிதர்களையும் நாம் காண முடியும். பலதரப்பட்ட மக்களின் பண்பாடு, கலாச்சாரம், கலை, இலக்கியம், அவர்களின் வித்தியாசமான வாழ்க்கைச் சூழல்களை நாம் நேரில் காணும் போது நமது மனம் அவற்றோடு ஒப்பிட்டு நம்மை யோசிக்க வைக்கும். இதன்விளைவாக நமது செய்கையில் பலதரப்பட்ட மாற்றங்கள் நிகழும். உலகின் பல பகுதிகளில் வாழும் மனிதர்கள் யாவரும் நமது சகோதர சகோதரிகளே என்ற எண்ணமும் ஒற்றுமை மனோபாவமும் உருவாகும்

tourist places...

ஊர் சுற்றாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? இலக்கின்றி ஊர் சுற்றும் நாடோடி மனிதர்களுக்கு இருக்கும் அறிவு வேறு யாருக்காவது இருக்குமா? எத்தகைய இடங்களிலும் எத்தகைய சூழல்களிலும் தங்களைப் பொருத்திக் கொள்ளும் திறமை இத்தகையவர்களுக்கு எளிதில் கைகூடும். ஏனெனில் ஊர்சுற்றுவதன் மூலம் அவர்கள் பெற்றுள்ள பட்டறிவு அப்படி.

தன் வாழ்நாள் முழுவதும்தான் வசிக்கும் இடத்திலிருந்து நூறு கிலோமீட்டர் கூடத் தாண்டாத எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். சம்பாதிக்கும் பணத்தை தனது அடிப்படை தேவைகளுக்குக் கூட செலவு செய்யாமல் அப்படியே வங்கியில் போட்டு வைத்து மகிழ்ச்சி அடையும் எத்தனையோ மனிதர்களும் இருக்கிறார்கள். சம்பாதிக்கும் பணத்தை அன்றைக்கே எவ்வித இலக்கின்றி செலவு செய்து மகிழ்ச்சி அடையும் மனிதர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்.

மாதத்திற்கு ஒருநாள் நீங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து அருகில் உள்ள ஒரு புதிய பகுதிக்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் வருடத்திற்கொருமுறை அண்டை மாநிலத்திற்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வசதியும் வாய்ப்பும் கிடைத்தால் அருகில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்று வாருங்கள். இத்தகைய தரிசனங்கள் உங்கள் அகக்கண்களைத் திறக்கும் திறவுகோலாக அமையும் என்பது நிச்சயம்.

ஊர் சுற்றுவது எனக்குப் பிடித்தமான ஒன்று. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செலவைப் பற்றி கவலைப் படாமல் எனது குடும்பத்தோடு பல இடங்களுக்கும் சென்று வருகிறேன். சுற்றுலாவின் மூலம் மனசு லேசாவதை உணர முடிகிறது. உற்சாகம் பிறக்கிறது. நண்பர்களே. ஊர் சுற்றுங்கள். உலகைச் சுற்றுங்கள். உங்களுக்குள் புதியதொரு மாற்றத்தை உணர்வீர்கள்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT