Toronto... 
பயணம்

பயணக் கட்டுரை: வாருங்கள் செல்வோம் டொராண்டோ என்கிற டொராணோ!

கே.என்.சுவாமிநாதன்

டொராணோ கனடா நாட்டின் பெரிய நகரம், ஒன்டாரியோ மாநிலத்தின் தலைநகரம், விண்ணை முட்டும் உயர்ந்த கட்டிடங்கள் நிறைந்த நகரம், பல பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் குடிகொண்டிருக்கும் நகரம், பல கலாச்சார மக்கள் வாழுகின்ற நகரம் என பலப் பெருமைகளைப் பெற்றிருக்கிறது டொராணோ.

சுமார் ஆறு மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரத்தில் பாதிக்கு மேல் அயல்நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள். சைனா, இந்தியா, இலங்கை, இத்தாலி, கரீபியன், பிலிப்பைன்ஸ் என்று உலகத்தின் பல பாகங்களிருந்து மக்கள் இங்கு குடியேறி உள்ளார்கள். சினிமா படம் எடுக்கும் தொழில் இங்கு அதிகம் என்பதால் டொரோணாவை “வடக்கு ஹாலிவுட்” என்பார்கள். உலக நாடுகளில், பல நாட்டு உணவு வகைகள் கிடைக்கும் நகரம் என்று டொரோணா முதலிடம் வகுக்கிறது.

டொரோணாவில் நூற்றைம்பது மொழிகள் பேசும் மக்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் அதிகமாகப் பேசப்படும் பத்து மொழிகளில் தமிழ் நான்காவது இடத்தில் இருக்கிறது. ஆங்கிலம் முதலிடம், சைனீஸ்கான்டனீஸ் இரண்டாவது, சைனீஸ் மண்டாரின் மூன்றாவது இடம். இந்தியாவிலிருந்து வெறெந்த மொழியும் முதல் பத்து இடத்தில் இல்லை. கடந்த முப்பது வருடங்களில் தமிழ்ச் சமுதாயம் முக்கியமான சிறுபான்மை குழுவாக வளர்ந்து வருகிறது.

இந்த நகரத்தின் பெயரை உச்சரிப்பதிலிருந்து ஒருவர் கனடாவில் வசிப்பவரா அல்லது சுற்றுலாப் பயணியா என்று சொல்லலாம் என்று கூறுவர். அழுத்தம் திருத்தமாக “டொராண்டோ” என்றால் அவர் சுற்றுலாப் பயணி. “டொரோணா” என்று உச்சரித்தால் அவர் கனடாவில் வசிப்பவர். இந்த நகரத்தின் பெயரில் உள்ள ஆங்கில் இரண்டாவது எழுத்து “டி” பேசாமடந்தை. எனவே “டொரோணா”.

இந்த நகரத்திற்கு மற்ற இடங்களிலிருந்து ரயில் மற்றும் பேருந்து வசதியுண்டு. மிசிசாகா நகரத்திலிருந்து, டொரோணா முப்பது கிலோமீட்டர். மோட்டார் வாகனத்தில் செல்ல ஓரு மணி நேரம் என்றால்,  ரயிலில் முப்பத்து ஆறு நிமிடத்தில் டொரோணாவின் யூனியன் ஸ்டேஷன் சென்றடையலாம். ரயில் பயணத்திற்கு போகவரக் கட்டணம் 10 டாலர் மட்டுமே. எத்தனை முறை வேண்டும் என்றாலும் போய் வரலாம்.

ரயிலில் இருக்கைகள் மூன்று அடுக்குகளாக உள்ளன. வசதியான இருக்கைகள். பூங்காக்களையும், ஏரிகளையும் பார்த்துக் கொண்டே ரயில் பயணம் செய்வது ரம்மியமான விஷயம்.

tourist places...

ரயிலில் அலுவலகம் செல்வதற்கு வருபவர்கள் டொராணோ ஸ்டேஷனிலிருந்து தத்தம் அலுவலகம் அடையத் தெருவில் நடந்து செல்லத் தேவையில்லை. பல அலுவலகக் கட்டிடங்களை இணைத்து “பாதை” ஒன்று அமைத்துள்ளார்கள். குளிர் காலங்களில் வெப்ப நிலை மைனஸ் செல்லும். இந்தக் குளிரில் இறங்கி நடக்காமல் “பாதை” வழியே நடந்து அவர்கள் அலுவலகத்தை அடையலாம். “நிழலின் அருமை வெயிலில் தெரியும்” என்பது போலப் “பாதையின் அருமை குளிரில் நடக்கையில் தெரியும்” என்று சொல்லலாம். பாதையெங்கும் கடைகள், உணவகங்கள் உள்ளன.

பல அருங்காட்சியகங்கள், பூங்காக்கள், கேளிக்கை இடங்கள், என்று பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. வானுயரக் கட்டிடங்களைப் பார்த்தபடி வீதிகளில் நடக்கலாம். வித்தியாசமாக வடிவமைத்துள்ள கட்டிடங்கள் நிறைய உள்ளன. டோரோணா முழுவதும் பார்க்க மூன்று, நான்கு நாட்கள் தேவைப்படும்.

டொராணோ தீவுப் பூங்கா (டொரோணா ஐலண்ட் பார்க்)

கோடைக்கால சுற்றுலாவில் முக்கியமாக இடம் பெற வேண்டியது இந்தப் பூங்கா. டொராணோ துறைமுகத்திலிருந்து இந்தத் தீவுப் பூங்காவிற்குச் செல்வதற்கு பெரிய படகுகள் உள்ளன. படகின் கீழ்த்தளத்திலும், மேல்தளத்திலும் அமருவதற்கு இருக்கைகளும், நிற்பதற்கு இடங்களும் உள்ளன. பூங்காவில் சுற்றித் திரிவதற்கு படகில் சைக்கிள் கொண்டு வருபவர் உண்டு.

காலையில் குடும்பத்துடன் பூங்காவிற்கு படகில் வந்து, பூங்காவை சுற்றிப் பார்த்து, மாலை அல்லது இரவில் படகில் டொரோணா திரும்புபவர்கள் அதிகம். பெரும்பாலானோர் மதிய உணவு, சிற்றுண்டி, அமருவதற்கு இருக்கை, ஆகியவற்றை கொண்டு வருவர். வளர்ப்பு நாய்களுடன் வருபவர்களும் உண்டு.

படகு சவாரி சுமார் பதினைந்து நிமிடங்கள். படகில் செல்லும் போதே டொரோணா நகரின் உயர்ந்த கட்டிடங்களின் வானலைப் பார்வையை ரசித்துச் செல்லலாம். இந்த வானலைப் பார்வையை பூங்காவின் நீர்நிலைகளிலிருந்தும் காணலாம்.

இந்தப் பூங்காவில் நான்கு கடற்கரைகள் உள்ளன. நீந்துவதற்குப் பாதுகாப்பான கடற்கரைகள். விசைப் படகுகளில் செல்ல வசதிகள் உண்டு. பூங்காக்கள் நிறைய இருப்பதால், சுற்றிப் பார்த்து வருவதற்கு சைக்கிள் வாடகைக்குக் கிடைக்கும். அமர்ந்து உணவு அருந்த இருக்கைகள் அமைத்திருக்கிறார்கள். புல்தரைகளிலும் அமர்ந்து உணவு உண்ணலாம். நடமாடும் கூடாரம் கொண்டு வந்து அதிலமர்ந்து இளைப்பாறுபவர்களைப் பார்க்கலாம். குழந்தைகள் பாதுகாப்பாக விளையாட உபகரணங்களுடன் பூங்கா இருக்கிறது. இருநூறு வருடத்துப் பழைய கலங்கரை விளக்கம் உள்ளது.

நகரத்தின் நெருக்கடி மிகுந்த வாழ்க்கையிலிருந்து ஓய்வெடுத்து இயற்கையோடு ஒன்றியிருக்க, இந்தப் பூங்கா ஒரு நல்ல இடம். ஆயிரத்து இருநூறு கறுப்பு தேவதாரு மரங்களுடன் ஒரு தோப்பு உள்ளது. இதில் நுழைந்தவர்கள் வெளியேறும் வழியைக் கண்டுபிடித்து வருவது சற்றே சிரமம். ஒன்றைப் போலவே இருக்கும் தேவதாரு மரங்களின் நடுவில் நடந்து வந்தப் பாதையைக் கண்டறிந்து வெளியேறுவது எளிதல்ல.

டொராணாவில் பல கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள் வசிப்பதால் அந்த நாட்டைச் சேர்ந்த மக்களின் கடைகள், உணவு விடுதிகள் இருக்கின்ற இடங்கள் உள்ளன. சைனா டவுன், லிட்டில் இந்தியா, க்ரீக் டவுன், கொரியா டவுன், லிட்டில் இத்தாலி, லிட்டில் போர்ச்சுகல், லிட்டில் போலந்த் ஆகியவை அந்தந்த நாட்டின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளன.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT