பூலோக கைலாயம் என்று சைவர்களால் அழைக்கப்படும் சிதம்பரம் காசிக்கு இணையான தலமாகும். பஞ்சபூதத் தலங்களில் முதன்மையான ஆகாயத்தலம். புராணங்களின் படி தேவதச்சன் மயன் நடராஜரின் திருமேனியை பஞ்சலோகத்தில் வடித்துக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது. இக்கோவில் திரேதாயுகத்தில் 17,000 மாவது ஆண்டு தில்லை வனத்தில் கட்டப்பட்டதாக செய்தி மயநூலில் உள்ளது. இது பற்றிய செய்திகள் வைசம்பாயனம், விஸ்வகர்ம வம்ச பிரகாசிகை போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் சிறிய கற்றளியாக தில்லைவனத்தில் நடுவில் கோவில் அமைக்கப்பட்டிருந்தது.
நம்பியாண்டார் நம்பி எழுதியுள்ள திருத்தொண்டர் திருவந்தாதி நூலின்படி சோழமன்னன் முதலாம் ஆதித்தரும் அவரது மகன் பராந்தக தேவரும் கி.பி.871 முதல் 907 வரை ஆண்ட காலத்தில் நடராஜர் கோயிலை விஸ்தரித்து விமானத்தில் பொன்கூரை வேய்ந்தனர். இந்த பொற்கூரை மனிதனின் தினசரி சுவாச எண்ணிக்கையை குறிக்கும் வகையில் 21600 தங்கத்தகடுகளில் வேயப்பட்டது. அதில் 72000 தங்க ஆணிகள் மனித உடலின் நாடியை குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வித்வான் கே.வெள்ளைவாரணன் எழுதிய தில்லைப் பெருங்கோயில் வரலாறு எனும் நூலின்படி கிழக்குக் கோபுரத்தை விக்கிரமச்சோழனும் மேற்குக் கோபுரத்தை சுந்தரப்பாண்டியரும் தெற்குக் கோபுரத்தை கோப்பெருஞ்சிங்கனும், வடக்குக் கோபுரத்தை கிருஷ்ணதேவராயரும் கட்டியுள்ளனர்.
நரலோகவீரன் தொண்டைமான் திருப்பணிகள்
முதலாம் குலோத்துங்கன் மற்றும் விக்கிரம சோழன் ஆட்சியில் சேனாதிபதியாக இருந்த நரலோகவீரன் தொண்டைமான் சிதம்பரம் கோயிலில் சிவனுறையும் கற்றளியை சுற்றிப் பிரகாரமும் ஒரு மண்டபமும் அமைத்தான். கோயிலில் விளக்கெரிக்க 12 கழஞ்சு பொன் அளித்தான். நிலங்களையும் தானம் அளித்தான். கோயிலில் மண்டபங்கள் மற்றும் நந்தவனங்களை அமைத்தான். திருஞான சம்பந்தர் தேவாரத்தை ஓதுவதற்கென்று அழகிய நூறுகால் மண்டபம் ஒன்றையும் அமைத்தான். இந்த நூறுகால் மண்டபம் சிவகாமி அம்மன் சன்னதிக்கு தெற்கில் இருக்கிறது.
சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கனை தோற்கடித்த வீரபாண்டியன் இந்த நூற்றுக்கால் மண்படபத்தில் பட்டாபிஷேகம் செய்து கொண்டார். இதனால் வீரபாண்டியன் திருமண்டபம் எனப் பெயர் பெற்றது. அதன் பின்னர் அவரது மகன் விக்கிரம பாண்டியரும் அதே மண்டபத்தில் பட்டாபிஷேகம் செய்து கொண்டார். பாண்டியர்களும் கோயில் திருப்பணிகள் செய்தனர்.
கோயிலின் முதல் பிரகாரம் விக்கிரம சோழ திருமாளிகை என்றும், இரண்டாம் சுற்றுப்பாதை குலோத்துங்க சோழன் திருமாளிகை என்றும் மேலகோபுரம் குலோத்துங்க சோழன் திருமாளிகைப் புறவாயில் எனவும் திருப்பணி செய்த அரசர்கள் பெயரால் அழைக்கப்படுகிறது.
பிஜப்பூர் சுல்தான்களின் படையெடுப்பில் கோவில் பெரிதும் சேதமடைந்தது. நடராஜர் சிலையை பாதுகாக்க 1648லிருந்து 1686வரை மதுரையிலும் பின்னர் 40 மாதங்கள் குடுமியான் மலையிலும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் செஞ்சியை ஆண்ட மாரட்டிய மன்னர் சாம்பாஜியின் ஆணையின் பேரில் கோபாலததாசி என்பவர் கோவிலை சீரமைத்து குடமுழுக்கு நடத்தினார்.
1747ல் சரவணன் தம்பிரான் என்பவர் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி பரங்கிப்பேட்டை டச்சு வணிகர்களின் நிதியுதவியை பெற்று ஆயிரம் கால் மண்டபத்தையும் நான்கு கோபுரத்தையும் சீரமைத்து குடமுழுக்கு நடத்தினார். கோவிலின் மூன்றாம் சுற்றுப்பாதை தம்பிரான் திருவீதி என்றழைக்கப்படுகிறது.
மைசூர் போர் மற்றும் பிரெஞ்சு பிரிட்டிஷ் போரால் மீண்டும் சிதைவுற்ற நடராஜர் கோயிலை பச்சையப்ப முதலியாரும் அவரது மனைவியாரும் 40000 வராகன் செலவில் சீரமைத்து திருக்குடமுழுக்கு நடத்தினர். கிழக்கு கோபுரத்தில் பச்சையப்ப முதலியாருக்கும் அவரது மனைவிக்கும் சிலை வைத்துள்ளனர்.
1891ஆம் ஆண்டு அண்ணாமலை செட்டியாரின் தந்தையாரால் கோவில் கனகசபையில் தங்கமூலாம் பூசப்பட்டு, திருச்சுற்றுகள் அமைக்கப்பட்டு, கோயில் குடமுழுக்கும் நடத்தப்பட்டது. கோவில் நிர்வாகம் அண்ணாமலை செட்டியார் வசம் இருந்தது.1934ல் அண்ணாமலை செட்டியாராலும், பிறகு 1955ல் இரத்தின சபாபதிபிள்ளை மற்றும் இரத்தினசாமி செட்டியாரால் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டன. இவ்வாறு பல நூற்றாண்டு திருப்பணிகளால் பிரம்மாண்டமான நடராஜர் கோவில் 51 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டது.
ஓம் நமசிவாய!