ஆயில் இல்லாமல் சமைப்பது ஆரோக்கியம் தருமா?

oil free cooking
oil free cooking
Published on

நம் பாரம்பரிய சமையலில் சுவைக்கும் ஆரோக்கியத்திற்குமென அதிகளவு எண்ணெய் மற்றும் வெண்ணெய் போன்றவற்றைச் சேர்த்து உணவுகளை ருசியாக சமைத்து உட்கொண்டு வந்தனர். ஆனால், சமீப காலமாக எண்ணெய் சேர்க்காமல் சமைப்பது நடை முறைக்கு வந்துள்ளது. இதற்குக் காரணமாக அதிகரித்து வரும் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோய்களைக் கூறுகின்றனர் நிபுணர்கள். புதிய நடைமுறையைப் பின்பற்றி எண்ணெய் சேர்க்காமல் சமைப்பதால் உட்கொள்ளும் கொழுப்பின் அளவு குறைகிறது. அதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (LDL) அளவும் குறைய வாய்ப்பு உண்டாகிறது. ஆயில் இல்லாமல் சமைப்பதால் கிடைக்கும் மற்ற ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் சுமார் 120 கலோரிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர்ப்பதால் நாம் உட்கொள்ளும் உணவின் கலோரி அளவு குறைகிறது. இதனால் உடல் பருமனைக் குறைக்கவும் எடையை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் முடியும்.

நாம் உபயோகிக்கும் பல வகை எண்ணெய்களில், குறிப்பாக விலங்குகளில் இருந்து பெறப்படும் வெண்ணெய், நெய் போன்றவற்றில் உள்ள சாச்சுரேட்டட் மற்றும் ட்ரான்ஸ் ஃபேட் கொழுப்புகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும் இதய நாளங்களில் அடைப்பு போன்ற நோய்களை உருவாக்கவும் செய்யும்.  எண்ணெய் இல்லா சமையல் இந்த அபாயத்திலிருந்து நம்மைக் காக்கும்.

பெரும்பாலான ஆயில்-ஃபிரீ சமையலில் அதிகளவு காய்கறிகள், தானிய வகைகள், பழங்கள் மற்றும் பருப்புகள் சேர்க்கப்படுவதால் நம் உடலுக்கு அதிகளவு நார்ச்சத்து கிடைக்கும். இதனால் செரிமான உறுப்புகளை ஆரோக்கியமாய் பராமரிக்கவும் ஜீரணம் சிறந்த முறையில் நடைபெறவும் உதவ முடியும். மேலும், இந்த மாதிரியான உணவுப் பொருள்களில் இயற்கையாகவே கொலஸ்ட்ரால் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புகளின் அளவு மிகக் குறைவாக இருப்பதால் உடலின் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.

எண்ணெய் இல்லா சமையல் என்று வரும்போது அவை தண்ணீர் சேர்த்து வேக வைப்பது, நீராவியில் வேக வைப்பது அல்லது பேக்கிங் (baking) முறையில் தயாரிப்பது போன்றவற்றில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றியதாகவே இருக்கும். எண்ணெயில் பொரிப்பதைத் தவிர்த்து இந்த முறையில் சமைக்கும்போது உணவில் உள்ள இயற்கையான ஊட்டச் சத்துக்கள் குறையாமல் பாதுகாக்கப்படும். இதன் மூலம் வைட்டமின்களும் மினரல்களும் உடலுக்குள் சிறந்த முறையில் உறிஞ்சப்படும்.

இதையும் படியுங்கள்:
அற்புதம் செய்யும் பூசணி இலைகள்! 
oil free cooking

ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள சில வகை எண்ணெய்களை உபயோகித்து சமைத்து உண்ணும்போது அவை உடலில் வீக்கங்களை உண்டுபண்ணுவதற்குக் காரணமாகக் கூடும். எண்ணெய் இல்லாமல் சமைத்து உண்ணும்போது இந்த மாதிரியான அபாயங்கள் தடுக்கப்படும்.

பதப்படுத்தப்படாத முழுமையற்ற உணவுப் பொருள்களே ஆயில்-ஃபிரீ சமையலில் சேர்க்கப்படுவதால் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உடலில் சேரும் வாய்ப்பு குறைகிறது. இதனால் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்துப் பராமரிக்க முடிகிறது. இரத்தக் குழாய்களில் அடைப்பு மற்றும் இதயநோய்கள் வரும் அபாயமும் தடுக்கப்படும்.

வெஜிட்டபிள் ஸ்டிர் ஃபிரை, லென்டில் சூப், ஸ்டஃப்ட் பெல் பெப்பர், பேக்ட் ஸ்வீட் பொட்டட்டோ, சிக் பீ சாலட், பேக்ட் ஃபலாஃபல் போன்ற ஆயில்-ஃபிரீ உணவுகளில் குறைவான கலோரி அளவும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. அவை இதயத்திற்கும் மொத்த உடம்புக்கும் நன்மை தரக் கூடியவை. நாமும் இந்த உணவு முறையைப் பின்பற்றி நலம் பல பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com