‘நமக்கு மட்டும் ஏன் இந்தப் பிரச்னை வந்தது? நமக்கு ஏன் இந்த நோய் வந்தது? எப்போதும் தெய்வச் சிந்தனையோடும் நல்ல காரியங்களை மட்டுமே செய்துகொண்டு யாருக்கும் தீங்கு செய்யாமல், யாரையும் நாவினால்கூட புண்படுத்தாமல்தானே இருக்கிறோம்? அப்படிப்பட்ட நமக்கு ஏன் இந்த இறைவன் இப்படிச் செய்தான்? இந்த இறைவனுக்கு கண்ணே இல்லையா?’ என்றெல்லாம் புலம்புபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் கண்டிப்பாகச் சென்று தரிசிக்கக்கூடிய திருத்தலம் கடலூர் வானாமாதேவி, கோலவிழியம்மன் திருக்கோயில்.
ஆறு அடி உயரத்தில், ஆஜானுபாகுவாக, எட்டு திருக்கரங்களுடனும் சங்கு சக்கர அம்சங்களுடனும் விஷ்ணு துர்க்கையாக கோலவிழியம்மன் காட்சி தருகிறாள். இவளுக்கு முன்பாக ஷட் கோண யந்திரம் பொறித்த பெருங்கல்லை, அருகிலேயே அம்மனின் அம்சமாக ஓங்கி வளர்ந்திருக்கும் வேப்பமரத்தின் வேர்கள் முழுவதுமாகத் தழுவி மறைத்திருக்கும் காட்சியை நாம் தரிசிக்கலாம். இதனை சித்தர் பீடமாகவும் கருதுகிறார்கள்.
இவளுடைய சக்தியைப் புரிந்துகொள்ள ஒரு வரலாற்று நிகழ்வைப் பார்ப்போம். இப்பகுதியை ஆண்ட சமண மன்னன் சந்திரசேகர நாயனார், இப்பகுதி மக்களுக்கு திடும் என்று ஓர் உத்தரவிட்டான். ஓர் இரவுக்குள் இப்பகுதியிலுள்ள வெட்ட வெளி நிலங்களெல்லாம் விதை விதைக்கப்பட்டு மறுநாள் பொழுது விடிவதற்குள் பயிர் அறுவடை செய்யாவிட்டால், அனைவரும் சமண மதத்திற்கு மாறியே ஆக வேண்டும் என்று ஆணையிட்டான். செய்வதறியாது தவித்த மக்கள் கோல விழியம்மனை நாடி, மனமுருக வேண்டிக்கொண்டு. தங்களை இந்த துன்பத்திலிருந்து காக்க வேண்டினார்கள்.
வானமாதேவி கோலவிழியம்மனின் கண்களிலிருந்து அருள் மழை பொழிந்தது. பூமி குளிர்ந்தது- செல்லியம்மன், பூஞ்சோலையம்மன் ஆகிய தன் துணை தேவதைகளை அழைத்து இப்பணியைச் செய்து முடிக்கும்படி கட்டளையிட்டாள்.
வானமாதேவி நிலங்கள் அனைத்தும் பயிர் நிறைந்த நிலங்களாயின. மக்கள் மனம் நிம்மதியடைந்தது; அபார சக்தி அம்மனின் அபார சக்தியைப் புரிந்துகொண்டு அவளையே தன் குல தெய்வமாக்கிக்கொண்டான்.
அருகிலுள்ள கிராமமான திருமாணிக்குழியில் செல்லியம் மனுக்கென தனி ஆலயம் உள்ளது. திருவிழாக் காலங்களில் செல்லியம்மன் கூத்தாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வானமாதேவி கோலவிழியம்மனை நாடிச் சென்று ஊழ்வினைப் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். இதற்குக் காரணமாக இங்கே அமைக்கப்பட்டுள்ள விசேஷமான வைரவர் சன்னிதியையும் பக்தர்கள் பக்தியுடன் தொழுகிறார்கள்.