தீபம்

விநாயகர் பூஜையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும்!

கே.என்.சுவாமிநாதன்

விநாயகச் சதுர்த்தி விழா, விநாயகர் பூஜை முடித்துப் பின் விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கரைப்பதுடன் முடிவடைகிறது. இதனை விசர்ஜன் என்பார்கள். இதை பூஜை முடிந்த அடுத்த நாளோ, மூன்றாவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது அல்லது பத்தாவது நாளோ செய்வார்கள். விநாயகச் சதுர்த்தி முடிந்த பத்தாவது நாளை அனந்த சதுர்தசி நாள் என்பார்கள்.

விநாயகர் சிலையை நீர் நிலையில் கரைப்பது நம்முடைய வாழ்க்கைச் சக்கரத்தைப் பிரதிபலிக்கிறது. உயிர் நீத்தவனின் உடல் மண்ணுடன் கலக்கிறது அல்லது அவனது சாம்பல் நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. மறுபிறப்பின்போது அவனுக்கு வேறு உடல் வந்து சேருகிறது.

இதைப் போலவே பூஜை முடிந்தவுடன், நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்ற, பிள்ளையார் பொம்மையின், மூலப் பொருளான களிமண் கரைந்து நீர் நிலையின் அடியில் தங்குகிறது. அடுத்த முறை, இந்த களிமண் கொத்தி எடுக்கப்பட்டு பிள்ளையார் சிலை செய்ய உபயோகிக்கப் படுகிறது. ஆகவே இந்த வகைப் பிள்ளையார் சிலையினால் (அதாவது களிமண் பிள்ளையார்) சுற்றுச் சூழல் பாதிப்பு இல்லை.

பெரிய அளவில் வண்ணத்தில் செய்யப்படுகின்ற பிள்ளையார் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதால் நீர் நிலைகள் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இந்த வகைப் பிள்ளையார்கள் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்டு இராசயன வண்ணக் கலவை பூசப்படுகிறது. ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் ஜிப்சம், சல்பர், பாஸ்பரஸ், மக்னீஷியம் உள்ளது. இவை தண்ணீரில் முழுவதுமாகக் கரைய பல மாதங்கள் ஆகும். இரசாயன வண்ணக் கலவையில் மெர்குரி, லீட், காட்மியம், கார்பன் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரின் அமிலத் தன்மையை அதிகரிப்பதுடன், நீரில் உலோகங்களின் அளவையும் அதிகரிக்கிறது. இவற்றுடன் தெர்மோகோல், ப்ளாஸ்டிக் பூக்கள், பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட ஊதுவத்தி, கற்பூரம் ஆகியவையும் சேர்ந்து நீரின் தன்மையை வெகுவாகப் பாதிக்கின்றன.

நீர் நிலைகளில் மாசு படிந்தால் அது நீர் வாழ் உயிரினங்களின் அழிவிற்குக் காரணமாகிறது. நினைவிருக்கட்டும், சில இடங்களில் இந்த நீர் நிலைகள் மக்களுக்கு குடி நீராகவும், உணவு சமைப்பதற்கும் உபயோகப் படுத்தப்படுகிறது.

நீங்கள் பூஜையில் வைத்த பிள்ளையார் மண் பிள்ளையார் என்றால், விசர்ஜன் செய்யும் அன்று பிள்ளையாரை வாளித் தண்ணீரில் இறக்கி வையுங்கள். நன்கு கரைந்த பின் இந்தத் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம். உலோகத்தில் செய்யப்பட்ட வர்ணப் பிள்ளையார் என்றால் கொலுவிற்கும், அடுத்த வருட பூஜைக்கும் வைத்துக் கொள்ளலாம். பூஜைக்குப் பயன்படுத்திய பூக்களை பூத்தொட்டியில் போடுங்கள். அவை நல்ல எருவாகப் பயன்படும்.

நீங்கள் படத்தில் காணும் பிள்ளையார் கனடா நாட்டில் பிள்ளையார் பூஜைக்கு உருவாக்கப்பட்ட பிள்ளையார். இது உணவு மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்பட்டது. பூஜை முடிந்தவுடன் சமையல் சோடா கலந்த தண்ணீரில் பிள்ளையார் பொம்மையை வைத்தால், சிறிது சிறிதாக, முழுவதுமாக நீரில் கரைந்து விடும்.

பூஜைகள் நமது பாரம்பரியம். கண்டிப்பாக இவ்வகை பூஜைகள் தேவை. அதைப் போலவே, மாசில்லாத சுற்றுப்புறச் சூழல் நம்முடைய வாழ்விற்கும், வருங்கால சந்ததியினரின் வாழ்விற்கும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

"பயிற்சி செய் அல்லது செத்து மடி": ப்ரூஸ் லீயின் அறிவுரை!

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

SCROLL FOR NEXT