தீபம்

கோபுர தரிசனம் கோடி பலன் தரும்!

மாலதி சந்திரசேகரன்

னது பிறந்த நாளை முன்னிட்டு அந்த நாட்டு ராஜா ஒரு கோயிலில் அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அந்த அன்னதான வரிசையில் பரம ஏழை ஒருவனும் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, ‘இவர்களுக்கு நம்மைப் பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்ற பிறகு நாம் வாங்கிக்கொள்வோம்’ என்று தள்ளி நின்றான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் ஒதுங்கி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றுச் சென்றார்கள்.

‘எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்குக் கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோம்’ என்று தனது விதியை நொந்துகொண்டான். 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியாய் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தைப் பார்த்து வணங்கி, மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி புலம்பினான். குளத்து நீரை கையில் எடுத்து முகத்தைக் கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.

ராஜா அன்னதானம் முடித்து, படித்துறையில் காலாற நடந்து வந்தார். "என்னப்பா... சாப்பிட்டாயா?" என்று ஒரு பத்தடி தொலைவிலிருந்து குளத்தில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார். கேட்பது ராஜா என்று தெரியாமல், "ஊரே சாப்பிட்டது. என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தைத் திருப்பாமல் குளத்து நீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.

அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. ‘என் பிறந்த நாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் செய்தோம். ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே’ என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து, “மன்னித்து விடப்பா... ரொம்பப் பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்டார் ராஜா.

குளத்து நீரில் தலையில் கிரீடம், காதில் குண்டலம், நெற்றியில் திருநீறு, முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். “ராஜா... நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்... மன்னிக்க வேண்டுகிறேன்” என்று பதறினான். இவனின் பதைப்பைக் கண்ட ராஜா அவனை அமைதிப்படுத்தி, “வா... இன்று நீ என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்” என்று அவனைத் தனது தேரில் ஏற்றிக்கொண்டு அரண்மனைக்கு விரைந்தார்.

அரண்மனையில் குளித்து, புத்தாடை அணிந்துவந்த அந்த ஏழைக்கு அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்ததும் அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளைக் கொடுத்த்தார். “இன்றிலிருந்து நீ ஏழை இல்லை... இந்தப் பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.

அதுவரை அமைதியாக இருந்த அந்த ஏழையின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. “ஏனப்பா அழுகிறாய்?” என்று ராஜா கேட்க, "நான் இதுநாள் வரை பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா... இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான். “ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று ராஜா கேட்க, "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தைப் பார்த்து, ‘என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய்’ என்று ஆண்டவனிடம் கேட்டேன். கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான். கடவுளிடம் கேட்டால் நாம் கேட்பதை விட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதான்.

நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் அதைவிட மிகச் சிறந்த ஒன்றை கடவுள் நமக்குத் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT