கண் பார்வை தொடர்பான நோய்களைத் தீர்த்து வைப்பதில் கண்கண்ட கடவுளாக விளங்குகிறார் திருக்காரவாசலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கண்ணாயிரநாதர். பார்வைக்கோளாறு சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் இக்கோயிலில் தரப்படும் முக்கூட்டு மூலிகைத் தைலத்தைத் தேய்த்துக்கொண்டு இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, கோயிலில் பிரசாதமாகத் தரப்படும் தேனில் ஊறிய அத்திப் பழத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும். அதைப்போலவே, தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் இங்கு தரப்படும் சேஷ தீர்த்தத்தை அருந்தி வந்தால் விரைவில் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.
திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற இந்தத் தலம், முதலாம் ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழனால் திருப்பணி கண்டுள்ளது. இத்தலத்தில் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஒன்று ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட சேஷ தீர்த்தம் என்னும் கிணற்று நீர். இது மருத்துவ குணம் மிக்கது. இந்தத் தீர்த்த நீரையே ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் அம்பிகைக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்துகிறார்கள். மற்றொன்று பிரம்ம தீர்த்தம் எனப்படும் திருக்குளம்.
இந்தக் குளத்தின் கரையில் உள்ளது கடுக்காய் விநாயகர் சன்னிதி. அது என்ன கடுக்காய் விநாயகர் எனத் தோன்றுகிறதா? வணிகர் ஒருவர் ஜாதிக்காய் மூட்டைகளுடன் வண்டியில் இங்கு வந்தார். இரவு இந்தத் தீர்த்தக் குளக்கரையில் தங்கினார். அப்போது சிறுவன் ஒருவன், ‘வண்டியில் என்ன உள்ளது?’ என்று கேட்க, வணிகர் ‘கடுக்காய் உள்ளது’ என்று பொய் சொன்னார்.
மறுநாள் காலையில் மூட்டைகளிலிருந்த ஜாதிக்காய்களெல்லாம் கடுக்காய்களாக மாறியிருந்தன. சிறுவனாக வந்தது விநாயகரே என்பதை உணர்ந்த வணிகர், தனது தவறுக்கு வருந்தி, இறைவனிடம் மன்னிப்புக் கேட்க, கடுக்காய்கள் மீண்டும் ஜாதிக்காய்களாக மாறின. இதனால் இந்த விநாயகர், ‘கடுக்காய் பிள்ளையார்’ ஆனார்.
பிரம்மாவுக்கு ஒருமுறை தானென்ற கர்வம் ஏற்பட, அவரது படைப்புத் தொழில் பறிபோய் விட்டது. பகவான் மகாவிஷ்ணுவின் உபதேசத்தால் காரை மரங்கள் நிறைந்திருந்த இந்தத் திருக்காரை (திருக்காரவாசல்) தலத்துக்கு வந்து சிவபெருமானை நோக்கி ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆயிரம் கண்களோடு பிரம்மாவுக்குக் காட்சியளித்து, ‘கண்ணாயிரநாதர்’ எனப் பெயர் பெற்றார். இந்தக் கோயில் திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் உள்ளது.