திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது அத்திரி தபோவனம். கிரக தோஷ நிவர்த்தித் தலமாக இது அப்பகுதி மக்களால் பெரிதும் வணங்கப்படுகிறது. இந்தியாவின் வடக்கே அமைந்த கேதார்நாத் திருத்தலம் போன்று, தெற்கே மகிமைமிக்கத் தலமாக விளங்கும் இது, ‘அத்திரிநாத்’ என அழைக்கப்படுகிறது.
அகத்திய மாமுனிவர் பொதிகை மலைக்கு வருகை தருவதற்கு முன்பே, இந்த மலையில் அத்திரி மகரிஷி வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சிவபெருமானின் பூரண அருளைப் பெற்றுத் தரும் இந்த மலை திருத்தலத்தை தரிசித்தால் அத்திரி, அகத்தியர், கோரக்கர் போன்ற தவசீலர்களின் திருவருளையும் சேர்த்துப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்தத் திருக்கோயிலை வலம் வருகையில் இடதுபுறம் இரட்டை விநாயகர்கள், வலப்புறம் மகிஷாசுர வர்த்தன், அத்திரி, அகத்தியர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கோயிலின் தென்புறச் சுவற்றில் தட்சிணாமூர்த்தியும், பின்புறத்தில் பிரம்மாவும், வடக்கே விஷ்ணுவும் எதிர்ப்புறம் சாஸ்தாவும் அருள்பாலிக்கின்றனர். கோயிலின் முன்பு வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானையும் தரிசிக்கலாம்.
கருவறைக்கு எதிரில் நந்தியம்பெருமான் வீற்றிருக்க, இருபுறமும் முருகப்பெருமானும் விநாயகர் காட்சி தருகின்றனர். அவர்களை வணங்கி உள்ளே சென்றால் கருவறையில் சிவசக்தி அம்சமாக இரண்டு லிங்க மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். அவற்றில் ஒன்று ஈஸ்வரன் எனவும், மற்றொன்று எண்பட்டை பாணத்துடன் திகழும் அம்பாளின் அம்சம் எனவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு பௌர்ணமி தினங்களிலும் இந்தத் தலத்துக்கு வந்து, இங்குள்ள ஆகாய கங்கையில் நீராடி, பால் சமர்ப்பித்து அம்பாளையும் சுவாமியையும் வழிபட்டால், நீண்ட நாட்கள் குழந்தைப் பேறு வாய்க்காதவர்களுக்கு பிள்ளை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும். அதேபோல, ஒவ்வொரு அமாவாசை தினங்களிலும் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமி-அம்பாளை வழிபட, வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெற்று சுகமாக வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.