“திரை கடலோடியும் திரவியம் தேடு” என்ற பொன் மொழிக்கிணங்க இந்தியர்கள் பலர் வாழ்க்கையில் முன்னேறும் வழி தேடி, அயல் நாடுகளுக்குச் செல்கிறார்கள். “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற பழமொழி இருந்தாலும், அவர்கள் மனத்தில் வளமான எதிர்காலம் முக்கியமான குறிக்கோளாக இருக்கிறது. ஆனால், அயல் நாட்டில் தன்னுடைய வாழ்க்கை நிலை உறுதியானவுடன், அவனுடைய ஆன்மீகத் தேடலினால், கோவில் கட்டுகிறார்கள். அதற்குப் பின்னால், நம்முடைய பாரம்பரிய முறையின் படி, பூஜைகள், விரதங்கள் எதையும் விடாமல் கடைப்பிடிக்கிறார்கள்.
கனடாவில் நிறைய இந்துக் கோவில்கள் உள்ளன. டொரோண்டா பகுதியில் ஒரு முக்கிய கோவில் சிருங்கேரி கோவில். இந்தக் கோவில் சிருங்கேரி வித்யா பாரதி அறக்கட்டளை என்றும் அறியப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில், சிக்கமகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தொன்மையான சிருங்கேரி கோவிலைப் போன்று வடிவமைக்கப்பட்ட இந்தக் கோவில், 2010ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. எல்லா இந்துக் கடவுள்களின் பிரதிமையும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது
இந்தக் கோவிலில் செப்டம்பர் 8ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மகாருத்ரம், மிகவும் சிறப்பான முறையில் நடந்தேறியது.
சிவபெருமானுக்கு சிவம், சிவன், ஈஸ்வரன், மகேஸ்வரன், ருத்ரன் என்று பல நாமங்கள். சிவபெருமானால், அழிக்கும் தொழில் செய்ய உருவாக்கப்பட்டவர் ருத்ரன் என்று சொல்வதுண்டு. ருத்ரன் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்குபவர் என்று பொருள். படைக்கும் கடவுளான பிரம்மாவின் மகன் ருத்ரன் என்கிறது வாயுபுராணம்.
ருத்ரம் யஜூர் வேதத்தில் ஒரு அங்கம். பஞ்சாட்சர மந்திரம் என்று சொல்லப்படுகிற “சிவாயநம” என்பது ருத்ரத்தின் இதயப் பகுதி என்பதால், ருத்ரம் தினசரி பூஜை, ஜெபம், ஹோமம் ஆகியவற்றில் பாராயணம் செய்யப்படுகிறது. திரயோதசி திதியன்று செய்யும் பிரதோஷ பூஜைகளில் ருத்ரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுவித்து முக்திக்கு வழி செய்யும் காரணத்தால், ருத்ரம், “ருத்ரோபநிடதம்” என்று சொல்லப்படுகிறது. நூற்றுக் கணக்கான நாமங்களால் ருத்ரனை பூஜிப்பதால், இதனை “சதருத்ரீயம்” என்றும் சொல்வார்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறவும், அனைத்துப் பாவங்களிற்கும் பிராயச்சித்தமாகவும் ருத்ரம் ஜெபிப்பது பலன் தரும்.
ருத்ரத்தின் அங்கமான “நமகம்” ருத்ரனின் பல்வேறு அடைமொழிகளையும், பெயர்களையும் பட்டியலிடுகிறது. “சமகம்” வாழ்வின் அனைத்துத் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற இறைவனை பிரார்த்தனை செய்யும் விதமாக அமைந்துள்ளது.
ருத்ரம் ஜெபித்துப் பின் சமகம் ஜெபிப்பது “லகு ருத்ரம்” எனப்படும். ருத்ரத்தின் பதினோரு அனுவாகம் (பகுதிகள்) ஜெபித்துப் பின் சமகத்தின் முதல் அனுவாகம், மறுபடியும் ருத்ரம் முடித்து, சமகத்தின் இரண்டாவது அனுவாகம் என்று பதினோராவது முறை ருத்ரம் முடித்து, சமகத்தின் பதினோராவது அனுவாகம் என்று பாராயணம் செய்வார்கள். இவ்வாறு செய்யும்போது ருத்ரம் 121 முறை பாராயணம் செய்யப்படுகிறது. இவ்வாறு பதினோறு முறை ஜெபிப்பது “மகா ருத்ரம்”. இவ்வாறு செய்வதில் ருத்ரம் 1331 முறைகள் பாராயணம் செய்யப்படுகின்றன. பதினோரு மகாருத்ரம், “அதிருத்ரம்” எனப்படும்.
சிருங்கேரி கோவிலின் யாகசாலையில், ஹோமம் வளர்த்து, காலை ஆறரை மணிக்கு ஆரம்பித்த மகாருத்ரம், வேத கோஷங்களுடன், மதியம் ஒரு மணிக்கு நிறைவடைந்தது. ஆர்வலர்கள் உதவியுடன் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. பல மொழி பேசும் இந்திய மக்களை ஒரேயிடத்தில் பார்க்க முடிந்தது சிறப்பு. ருத்ரம் பாராயணம் செய்தவர்கள் 140 நபருக்கும் மேல். இதில் 15 நபர்கள் கோவில்களில் குருக்கள் பணி செய்பவர்கள். மற்றவர்கள் அனைவரும் பெரிய நிறுவனங்களில் நல்ல பணியில் இருப்பவர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு, வேதம் மற்றும் ருத்ரம் கற்றுக் கொண்டவர்கள். மொத்தமாக 600க்கும் மேற்பட்டவர்கள் மகா ருத்ரத்தில் கலந்து கொண்டனர்.
அயல் நாடுகளில், கோவில் போன்ற பொது இடங்களில். எத்தனை மக்கள் கூடுவார்கள் என்பதற்கு வரையறை உண்டு. அதற்கு மேல் எதிர்பார்ப்பிருந்தால், அதனை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். கோவில் வளாகத்தில் குறிப்பிட்ட அளவே கார் நிறுத்தமுடியும். மற்றவர்கள் வீதியில் நிறுத்த வேண்டும். அதற்கான அனுமதியும் பெற்றிருந்தார்கள். வந்த பக்தர்கள் அனைவருக்கும், மதிய விருந்து அளிக்கப்பட்டது.
மாலையில் 108 பெண்கள் சாரதா தேவிக்கு குங்கும அர்ச்சனை செய்தனர். இதற்கும் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. குறைந்தது 400 பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இரவு விருந்து பரிமாறப்பட்டது.
நம்முடைய நாட்டில் பல கோவில்களில் இதைப் போன்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அன்னிய தேசத்தில் இது முதல் முறை. இந்த நிகழ்ச்சி, ஆன்மீக சிந்தனைக்கு என்றும் அழிவில்லை என்பதையும், விஞ்ஞான வளர்ச்சி, ஆன்மீகத்திற்கு எவ்வகையிலும் தடையில்லை என்பதையும் காட்டுவதாக நான் உணர்கிறேன்.