தீபம்

தென்னிந்தியாவின் மிகப் பிரசித்தி வாய்ந்த விநாயகர் ஆலயங்கள்!

ரேவதி பாலு
Kalki vinayagar

ர்வலோக மாதா பிதாவாகிய பார்வதி தேவிக்கும் பரமேஸ்வரனுக்கும் ஜேஷ்ட புத்திரர் பிள்ளையார். அவர் முழு முதற் கடவுள். 

பிள்ளையென்றால் அவரைத் தான் முதலில் சொல்லணும். அதனால் தான் பிள்ளை என்ற வார்த்தையோடு 'ஆர்' விகுதி சேர்த்து மரியாதையாக அவரை பிள்ளையார் என்று அழைத்து வணங்குகிறோம்.

எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில்கள்… தெருக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள், அரசமரத்தடியில், நதிக்கரைகளில் பிள்ளையார் கோவில்கள் இருந்தாலும் பாரதத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோவில்களே என்றே எண்ணற்றவை உண்டு. அவற்றுள் தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற நான்கு கோவில்கள் பற்றி இந்த பதிவுல் பார்ப்போம்.  

தமிழ்நாடு

1. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர்:  இந்தத் தலம் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது.  இந்த பழமையான குடைவரைக் கோவில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி கிராமம் திருப்பத்தூர் - குன்றக்குடி சாலையில் திருப்பத்தூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. கல்வெட்டுகள் மூலமாக இந்த தலத்தின் முற்காலப் பெயர்கள் எருக்காட்டூர், மருந்தங்குடி, இராச நாராயணபுரம், தென்மருதூர், கணேசபுரம், பிள்ளைநகர் என்றும் அறிய முடிகிறது.  இங்குள்ள சிறிய மலையில் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. இது மருதீசர் என்ற சிவபெருமானும் வாடாமல்லி என்னும் அம்பிகையும் எழுந்தருளியுள்ள கோவிலாக இருப்பினும், இக்கோவிலின் பிரதான தெய்வம் ஸ்ரீ கற்பக விநாயகர். அதனால் அவர் பெயராலேயே 'பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில்' என்றே அழைக்கப்படுகிறது.  மாதா மாதம் சதுர்த்தியன்று ஸ்ரீ கற்பக விநாயகர் மூஷிக வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வருவார். பிள்ளையார் சதுர்த்தி விழா இங்கு 10 நாட்களுக்கு கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது.

பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறியதும் இத்தலத்தில் உள்ள பிள்ளையாருக்கு மோதகம் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். மேலும் அருகம்புல் மாலை அணிவித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.  தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் கணபதி ஹோமம் செய்கிறார்கள்.  கேட்டவருக்கு கேட்ட வரங்களை அருளும் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக பாரதம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் சுற்றுலா வரும் புனிதத்தலமாகவும் விளங்குகிறது.

ஆந்திரா

காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர்: 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் உள்ளது.  இந்த தலத்தில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.

ஸ்ரீ வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது.  இக்கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இங்கே பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அந்த உத்தரணி நீர் பிரசாதத்தைப் பெற்றுகொள்ள அங்கே பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதனைப் பருகினால் நோய்கள் தீரும் என்பது இங்கே வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதேபோல ஊனமுற்றவர்களின் குறைகளையெல்லாம் தீர்த்து வைப்பதும் இந்த தலத்தில் நடக்கிறதாம். இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊரில் மூன்று சகோதரர்கள் இருந்தனர்.  அவர்களிடம் 'காணி' நிலமே இருந்தது.  மூவருமே ஊனமுற்றவர்கள். ஒருவனால் பேச முடியாது, அடுத்தவனுக்கு காது கேட்காது, மூன்றாமவனுக்கு கண் தெரியாது.  தங்கள் ஊனத்தைப் பொருட்படுத்தாமல் மூவரும் ஒற்றுமையுடன் விவசாயம் செய்து வந்தார்கள். கோடைகாலத்தில் அவர்கள் நிலத்தில் இருந்த கிணற்றில் நீர் வற்றியதால் அதை ஆழப்படுத்த முனைந்தார்கள் மூவரும். பூமியைத் தோண்டும்போது ஒரு பாறையின் மீது வாய் பேச முடியாதவனின் மண்வெட்டி பட்டு குபுகுபுவென ரத்தம் பீறிட்டது. அதைப் பார்த்ததும் வாய் பேச முடியாதவன் ‘ரத்தம்’ என அலறினான். அது மேலே நின்றிருந்த காது கேட்காதவனுக்கு அவன் கத்தியது கேட்டது.  எட்டிப் பார்த்த கண் தெரியாதவன் ‘என்ன ஒரே சிவப்பாக இருக்கிறதே?’ என்று வியந்து பார்த்தான். அப்புறம் என்ன? மூவரின் குறைகளும் திடீரென தீர்ந்ததைக் கண்ட கிராம மக்கள் கிணற்றுக்குள் இறங்கிப் பார்த்தனர். பாறை உருவில் அங்கே வரசித்தி விநாயகர் காட்சியளிப்பது கண்டு பரவசப்பட்டனர். காணி நிலத்தில் தோன்றியதால் விநாயகருக்கு காணிப்பாக்கம் விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டதாம்.

இந்த பிள்ளையாரை நல்லவருக்கு நல்லவர், கெட்டவருக்கு கெட்டவர் என்று குறிப்பிடுகிறார்கள். இது எப்படியென்றால் யாராவது எந்த விஷயத்திலாவது பொய் சொன்னால் அவரை தரதரவென்று இங்கே இழுத்து கொண்டு வந்து விடுகிறார்கள்.

‘காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் சாட்சியாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை’ என்று சத்தியப் பிரமாணம் செய்யச் சொல்லி அதை இன்றும் ஆந்திர கிராம பஞ்சாயத்துகளில் ஏற்றுக் கொள்கிறார்களாம். காரணம் பொய் சொன்னால், சொல்பவர் 90 நாட்களுக்குள் கடுமையாக தண்டிக்கப்படுவார் என்பது இவர்களது அனுபவமாக இருக்கிறது. இந்த காணிப் பிள்ளையாரைச்சுற்றி கிணற்று நீர் ஊறிக் கொண்டேயிருக்கிறது.  இந்த அதிசய பிள்ளையாரை கண்டு அவர் அருள் பெற பக்தர்கள் பல இடங்களிலிருந்தும் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

கர்நாடகா

தொட்ட கணபதி: தொட்ட கணபதி கோவில் கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரில் பசவனாகுடி என்னும் பகுதியில் புல் டெம்பிள் என்னும் புகழ்பெற்ற காளைக் கோவிலுக்கு வெகு அருகில் புகல் ராக் என்னும் பூங்காவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 1971ல் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோவிலின் விநாயகர் சிலை ஒற்றைப் பாறாங்கல்லை குடைந்து உருவாக்கப்பட்டது.  இது 18அடி உயரத்துடனும் 16 அடி அகலத்துடனும் வெகு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.  இதன் காரணமாகவே தொட்ட (மிகப் பெரிய) என்று கன்னடத்தில் பொருள்படும்படி தொட்ட கணபதி கோவில் என்று அழைக்கப்படுகிறது.  இந்த சிலை வளர்ந்து கொண்டே இருப்பதாகக் கருதப்படுகிறது. பிள்ளையார் சதுர்த்தியன்று இந்த தொட்ட கணபதி சிலைக்கு 100 கிலோ வெண்ணையால் வெண்ணெய் காப்பு சார்த்தப்படுகிறது.

இங்கே மிகப் பெரிய நந்தியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.  தொட்டா பசவனாகுடி உலகிலேயே மிகப் பெரிய நந்தி கோவில் என்று கூறப்படுகிறது. நந்தியின் சிலையும் ஒற்றைக் கல்லாலானது.  உலகின் மிகப்பெரிய நந்தி சிலைகளில் இதுவும் ஒன்று.

இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் கோவில் வளாகத்தில் நிலக்கடலை கண்காட்சி நடத்தப்பட்டு, கடவுளுக்கு நிலக்கடலை நைவேத்தியமாக வழங்கப்படுகிறது.  இந்த கண்காட்சி கன்னட மொழியில் 'கடலேகாயிபரிஷே' என்று அழைக்கப்படுகிறது.  இந்த அதிசய பசவனாகுடி 'தொட்ட கணபதி' கோவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் சுற்றுலா தலமாகும்.

கேரளா

4.  கொட்டாரக்காரா ஸ்ரீ மஹாகணபதி:  கேரள மாநிலம் கொல்லம் என்னும் ஊரிலிருந்து வடகிழக்கே 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது கொட்டாரக்காரா.  இங்கேதான் கொட்டாரக்காரா ஸ்ரீ மஹா கணபதி கோவில் அமைந்துள்ளது.  இந்தக் கோவில் அதன் முதன்மை தெய்வமான சிவனின் பெயரால் கிழக்கேகரா சிவன் கோவில் என்னும் பெயரில்தான் முதலில் அழைக்கப்பட்டு வந்தது.  ஆனால் நாளடைவில் இந்தக் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதியின் புகழ் காரணமாக
ஸ்ரீ மஹாகணபதி கோவில் என்னும் பெயரிலே பிரபலமானது. இங்கு சிவன், விநாயகரைத் தவிர பார்வதி தேவி, முருகன் மற்றும் ஐயப்பனின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் கருவறைக்கு பின்புறம் மேற்கே பார்த்து உள்ளது. இந்த சன்னதியை படிஞ்ஞாயிறு பகவதி கோவில் என்று அழைக்கிறார்கள். படிஞ்ஞாயிறு என்றால் மேற்கு என்று பொருள். கேரளாவின் பிரசித்தி பெற்ற சிற்பி பெருந்தச்சன் கொட்டாரக்காரா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு பலா மரத்தைப் பார்த்தார். பார்த்த மாத்திரத்திலேயே அந்த மரம் அவருக்கு பிடித்துப்போனது.  அந்த மரத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து கணபதி விக்கிரகத்தை செய்தார். அந்த விக்கிரகம் அங்குள்ள சிவன் கோவிலில் அக்னி மூலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  நாளடைவில் ஸ்ரீ மஹாகணபதியால் புகழ் பெறத் தொடங்கிய அந்தக் கோவில், சிவன் கோவில் என்ற பெயர் மாறி கொட்டாரக்காரா கணபதி கோவில் என்றே பிரசித்தமாகிவிட்டது.

கருவறையை ஒட்டியபடி தெற்கு நோக்கி பலாமரத்திலான திருமேனி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் கணபதியின் கையில் ஒரு அப்பம் இருக்கிறது. கொழுக்கட்டைப் பிரியர் என்றே பரவலாக அறியப்பட்ட ஸ்ரீ மஹாகணபதி இங்கே நெய்யப்பப் பிரியராக இருக்கிறார். இந்தக் கோவிலில் வழங்கப்படும் 'உண்ணியப்பம்' பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது.

 ‘ஓம் விநாயகாய வித்மஹே

விக்னராஜாய தீமஹி

தந்நோ கணநாயக ப்ரசோதயாத்’

என்று துதித்து அனைத்து தலங்களிலும் இருக்கும் முழு முதற்கடவுள் ஸ்ரீ மஹாகணபதியை மானசீகமாக பிள்ளையார் சதுர்த்தியன்று வழிபட்டு எல்லா நலங்களையும் பெறுவோம்.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT