தீபம்

புண்ணிய பூமி பஞ்ச துவாரகை!

லதானந்த்

துவாரகை ஒரே திவ்ய தேசமாகக் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், ஐந்து வெவ்வேறு இடங்களில் இருக்கும் புண்ணிய பூமிகளையும்,  ‘துவாரகா’ என்றே குறிப்பிடுகிறார்கள். இந்த ஐந்து க்ஷேத்திரங்களையும், ‘பஞ்ச துவாரகா’ என்கிறார்கள். டாக்கோர் துவாரகா (குஜராத்), கண்ணன் ஆண்ட துவாரகா (குஜராத்), பேட் துவாரகா (குஜராத்), நாத்வார்கா ( ராஜஸ்தான்), கங்க்ரோலி (ராஜஸ்தான்) ஆகியனதான் பஞ்ச துவாரகைகள். இனி, இந்த பஞ்ச துவாரகாவை தரிசிப்போம்.

குஜராத் மாநிலத்தின் கைரா மாவட்டத்தில் உள்ள தஸ்ரா தாலுகாவில், ஷேதி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சிற்றூர்தான் டாக்கோர். ஆனந்த் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது. சைதன்ய மஹாபிரபுவும், மீராவும் டாக்கோர் வந்து தரிசித்திருக்கிறார்களாம். நவீன குஜராத்தின் தலைசிறந்த கவிஞரான நன்ஹாலால் தம்முடைய புகழ் பெற்ற படைப்பான ஹரிசம்ஹிதாவைப் பிரசுரிப்பதற்கு முன்னர் இங்கு வாசித்திருக்கிறார். காந்தியடிகளும் தரிசித்திருக்கிறார் என்கிறார்கள்.

அங்கிருந்து சிறிது நேரம் பயணம் செய்தால் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலைச் சென்றடையலாம். டாக்கோர் நகரின் முக்கியமான கடைத்தெருவில் கோட்டை மதில்கள் சூழ, கோமதி ஏரியின் அருகில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது ஆலயம். இங்கே அருளும் ஸ்ரீகிருஷ்ணரை, ‘ரஞ்சோட்ராய்ஜி’ என்று அழைக்கிறார்கள். ரஞ்சோட்ராய்ஜி என்றால் ‘போர்க்களத்தை விட்டு விலகியவர்’ என்று பொருள்.

இங்கே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீகிருஷ்ணர் முதலில் துவாரகையில்தான் இருந்தாராம். தீவிர கிருஷ்ண பக்தரான ‘விஜயானந்த போதனா’ என்னும் ரஜபுத்திரர், துளசிச் செடி ஒன்றை மண் பானையில் எடுத்துக்கொண்டு, ஆண்டுக்கு இரு முறை துவாரகை சென்று, ஸ்ரீகிருஷ்ணரை வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தாராம். 72 வயதான பிறகு, முதுமையின் காரணமாக அவரால் துவாரகை சென்று தரிசிக்க இயலவில்லை. அவரது நிலையை உணர்ந்த ஸ்ரீகிருஷ்ணர், துவாரகையில் இருந்து டாக்கோருக்கு எழுந்தருளி, அவருக்கு அருள்புரிந்ததாகச் சொல்கிறது இந்தக் கோயிலின் தல புராணம்.

எட்டு குவிந்த மேற்கூரைகளும், 24 சிறு கோபுரங்களும் கொண்டு அழகாகத் திகழ்கிறது ஆலயம். கோயிலின் மையத்தில் இருக்கும் கோபுரம், 27 மீட்டர் உயரம் கொண்டது. தங்கக் கலசத்துடனும், வெள்ளைப் பட்டுக்கொடியுடனும்  அற்புதமான தோற்றம் அளிக்கிறது ரஞ்சோட்ராய்ஜி ஆலயம். ஆலயத்தின் உட்புறத்தில் இருக்கும் பெரிய ஹாலில் ஸ்ரீகிருஷ்ணர் பால்ய பருவத்து லீலைகள் படங்களாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள பிரம்மாண்டமான சர விளக்குகள் மனதைக் கவர்கின்றன.

கோபால் ஜகன்னாத் அம்பெகர் என்பவர் பூனாவின் பேஷ்வா அரச சபையில் ஷெராஃப் என்ற பதவி வகித்தவர். இவரது கனவில் ஸ்ரீகிருஷ்ணர் தோன்றி, இங்கே ஆலயம் எழுப்புமாறு சொன்னாராம். அதன்படி 1772ல் இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இன்றைக்கும் இவரது சந்ததிகள் ஆலயத்துக்குக் கைங்கர்யம் செய்து வருகிறார்களாம்.

மூலவர் ஸ்ரீகிருஷ்ணரின் விக்ரஹம், கருப்பு உரைகல்லால் ஆனது. இது 1 மீட்டர் உயரமும் 45 செ.மீ. அகலமும் கொண்டது. விலையுயர்ந்த ஆபரணங்களையும் ஆடைகளையும் அணிந்து தரிசனம் தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர். ஸ்வாமியின் சிம்மாசனம் நுணுக்கமான மர வேலைப்பாடுகளால் ஆனது. தங்கத்தாலும் வெள்ளியாலும் இது இழைக்கப்பட்டிருக்கிறது. தரை முழுக்கப் பளிங்குக் கற்கள் பாவியிருக்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணரை தரிசிக்கும்போது பக்தர்கள் கைகளைத் தட்டி மகிழ்கிறார்கள். தங்களது உள்ளங்கைகளைக் கண்ணனுக்குக் காண்பிக்கிறார்கள். தரிசனம் செய்ய வரும் பெண்களுக்கு முழுக்க முழுக்கத் தனி வரிசைதான்.

ஆலயத்துக்குள்ளேயே ஆங்காங்கே சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, மூலவருக்கு நடைபெறும் பூஜை புனஸ்காரங்களை வெளியில் இருப்பவர்களும் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும், ஷெனாய் மற்றும் பேரிகைகள் மூலம் இசை எழுப்புகிறார்கள். ஆலயம் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கிறது. கிருஷ்ண ஜயந்தி போன்ற விழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருவார்களாம்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT