சங்கட ஹர சதுர்த்தி 11-12-2022
ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒவ்வொரு விதமான துன்பங்கள் இருந்துகொண்டே இருக்கும். துன்பமில்லாத மனிதனே இல்லை என்று கூறலாம். இவர்கள் ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியிலும் விரதம் இருந்து விநாயகரை இந்த முறையில் வழிபட்டு வந்தால், அவர்களுக்கு வந்த துன்பங்கள் எல்லாம் வந்த வழியே திரும்பி சென்றுவிடும் என்பது பக்தர்கள் இடையே இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
சங்கடஹர சதுர்த்தியில் பிள்ளையாருக்கு படைக்க ரொம்பவே விசேஷமான ஒரு பிரசாதம் உண்டு. இந்த பிரசாதத்தைத் தயாரித்து நைவேத்தியம் படைத்து சதுர்த்தி விரதம் இருந்து விநாயகர் துதிகளைப் படித்து, அருகம்புல், மாலை சாற்றி, அர்ச்சித்து, வழிபட்டு வந்தால் தீராத துன்பமெல்லாம் தீரும் என்பது ஐதீகம்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு உங்களுக்குத் தேவையான அளவுக்குப் பொடித்த முந்திரி மற்றும் திராட்சைகளை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதே பாத்திரத்தில் முக்கால் கப் அளவுக்கு துருவி வைத்துள்ள வெல்லத்தைச் சேர்த்து, அதனுடன் கால் கப் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு போல கரைத்துக் கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் நன்கு பாகு கொதித்து கெட்டி ஆனதும் ஒரு கப் அவலுடன் இந்த காய்ச்சிய பாகை சுத்தமாக வடிகட்டி சேர்த்து கலந்துவிடுங்கள். இதனுடன் அரைகப் அளவுக்குத் துருவிய தேங்காய் சேர்த்து ஏலக்காய் தூள் அரை ஸ்பூன் தூவிகொள்ளுங்கள்.
பின்பு நன்கு கலந்து சமமாக பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் ஊற விட்டுவிடுங்கள். நன்கு பாகுடன் அவல் ஊறியதும், அதனுடன் நீங்கள் நெயில் வறுத்துவைத்துள்ள முந்திரி, திராட்சைகளையும் சேர்த்து நன்கு கலந்து வைக்க வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான், இந்த பிரசாதத்தை நீங்கள் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு நைவேத்தியம் படைத்து வழிபட்டு வாருங்கள். விநாயகருக்கு ரொம்பவே பிடித்த இந்த வெல்ல அவல் நெய் பிரசாதம் ரொம்பவே பிரசித்தி பெற்றது. எனவே, இந்த சங்கடஹர சதுர்த்திக்கு இப்படி நெய் பிரசாதம் படைத்து சங்கடஹர சதுர்த்தியை வழிபட்டு தீராத சங்கடங்களைத் துரத்தலாமே!