ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

man with distraction
man with distractionhttps://www.hcamag.com

சில வேலைகளை நாம் செய்தால் வாழ்வில் எளிதில் முன்னேறி விடலாம் என்று நமக்குத் தெரியும். ஆனால், நாம் அந்தச் செயலை செய்வதற்குள் ஏகப்பட்ட கவனச் சிதறல்கள் ஏற்படும். இதனால், ஒன்று அந்த வேலை காலம் கடந்து நிறைவேறும் அல்லது கடைசிவரையிலும் செய்யாமலேயே விட்டு விடுவோம். இதற்குக் காரணம் நம்மிடம் உள்ள தள்ளிப்போடும் பழக்கம். இந்தத் தள்ளிப்போடும் பழக்கம் உள்ளவர்கள் மொத்தம் 5 வகையான மக்கள். அவர்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. நேர்த்தியாகச் செய்பவர்கள்: ‘நான் செய்தால் அந்தச் செயலை சரியாகத்தான் செய்வேன். இல்லையென்றால் செய்யவே மாட்டேன்’ என்னும் குணம் உடையவர்கள். சரியாகச் செய்தால் அதற்கு அதிக நேரம் செலவாகும். அதனால், அதற்கான நேரம் இருக்கும்பொழுது மட்டும் செய்து கொள்வோம் என்று தள்ளிப் போடுவார்கள். எல்லா செயலையும் நேர்த்தியாகச் செய்வது சரிதான். ஆனால், அதற்காகக் காலத்தைத் தள்ளிப்போடும் பழக்கம் வாழ்க்கைக்கு உதவாமல் போய்விடும்.

2. கனவு காண்பவர்கள்: இவர்களுக்கு ஒரு வேலையைச் செய்வதைக் காட்டிலும் அந்த வேலையை எப்படிச் செய்ய வேண்டும், அதற்காக என்னென்ன தேவை, எந்தக் காலத்தில் செய்ய வேண்டும் என்ற திட்டங்களை மட்டும் சரியாகத் தீட்டிக் கொண்டே இருப்பார்கள். கடைசி வரையில் அந்த வேலையைச் செய்யவே மாட்டார்கள். இவர்கள் தங்கள் கனவோடு திட்டத்தை நிறுத்திக் கொள்வார்கள்.

3. கவலையாளிகள்: ‘என்னால் அவர்கள் கொடுத்த வேலையை எல்லாம் செய்ய முடியும். ஆனால், நான் செய்வதில் ஏதாவது தவறு நேர்ந்து விட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது?’ என்று தான் செய்யும் வேலையில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு விடுமோ! என்று அந்தச் செயலை செய்யாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே செல்வார்கள்.

இதையும் படியுங்கள்:
தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!
man with distraction

4. நெருக்கடியை உருவாக்குபவர்கள்: இவர்கள் ஒரு வேலையை நினைத்தால் செய்து விடலாம். ஆனால், ஒருபோதும் உடனே செய்ய வேண்டும் என்ற நினைக்க மாட்டார்கள். அதன் இறுதிக்கட்டம் வரை சென்று, கடைசி நேரத்தில் முழு உழைப்பையும் போட்டு மன அழுத்தத்துடன் அந்த வேலையை முடிப்பார்கள்.

5. ஓய்வற்ற தேனீ: இவர்களைப் பார்த்தால் வேலையைச் செய்யாதது போல் என்றுமே தோன்றாது. எப்பொழுதும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டு மிகவும் பரபரப்பாகவே இருப்பார்கள். ஆனால், இவர்களால் ஒரு வேலையும் ஒழுங்காகச் செய்து முடிக்க முடியாது. காரணம் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதால், எதிலும் முழுமையான ஈடுபாடு தர முடியாது. அது மட்டுமின்றி, இந்த வேலை செய்து கொண்டிருக்கும்போது அடுத்த வேலைக்கு உடனடியாகத் தாவி விடுவார்கள்.

மேலே குறிப்பிட்டவற்றுள் ஐந்தில் ஏதேனும் ஒரு வகையில் நீங்கள் இருந்தாலோ அல்லது ஐந்து வகையிலும் நீங்கள் இருந்தாலோ நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டுமே அது செயல். ‘உலகிலேயே தலைசிறந்த சொல் செயல்.’

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com