ஆலய தரிசனத்தில் இறை வழிபாட்டின் பலன் முழுமையாகக் கிடைக்கவும் பாபங்கள் நீங்கவும் பிராகார வலம் வரும்போது கூறுவதற்கென்றே சில ஸ்லோகங்கள் உள்ளன! அவற்றில் முக்கியமான ஒன்றுதான் கீழ்க்காணும் ஸ்லோகம்.
‘யானி கானிச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே’
இதன் பொருள் என்னவென்றால், ‘ஜன்ம ஜன்மாந்தரங்களில் நான் செய்த பாபங்கள் அனைத்தும் இந்த ப்ரதக்ஷிணத்தால் நீங்கட்டும்’ என்பதாகும்.
ஆலய தரிசனத்தில் தீபாராதனை, விபூதி, குங்குமம் அல்லது தீர்த்தம் இவற்றை பெறுவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் ஆலய பிராகாரத்தின் போது பிரதக்ஷிணம் செய்வதும். மனம் அறிந்து பிழை செய்வதால் நமக்கு ஏற்படுகின்ற துன்பங்கள் ஒருபுறம் இருந்தாலும், நம்மை அறியாமலேயே நம்முடைய செயல்களால் அது பிறருக்குத் துன்பத்தையோ அல்லது மன உளைச்சலையோ ஏற்படுத்தி இருந்தால் அதனால் மற்றவர்க்கு ஏற்படுகின்ற துன்பங்கள் கண்ணுக்குத் தெரியாத தடைகளாக, தாமதங்களாக, ஏமாற்றங்களாக, இழப்புகளாக நமது வாழ்வில் நம்மைத் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
இத்தகைய துன்பங்கள் மற்றும் ஏமாற்றங்களிலிருந்து விடுபட கோயில் பிராகாரத்தை குறைந்தது நான்கு முறையாவது வலம் வந்து வழிபடுவது நன்மை தருவதாகும். கோயில் பிராகாத்தின்போது வேறு எதைப் பற்றியும் நினைத்துக் கொண்டிராமல், மேற்கண்ட இந்த ஸ்லோகத்தை உளப்பூர்வமாகச் சொல்லி வலம் வருவதால் எத்தகைய தடைகள், தோஷங்களும் விலகி, நம் வாழ்வில் நன்மை ஏற்படும். மேலும், இப்படி பிராகார வலம் வருவதினால் நம் மனம் தேவையற்ற சிந்தனைகளில் ஈடுபடாது. மேலும் இறை சிந்தனையிலும் முழுமையாக ஒன்றியிருக்கும். இவை தவிர, ஆலய தரிசனத்தின் பலனும் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.