தீபம்

சித்தர்கள் வழிபடும் சிவாலயம்!

ஆர்.வி.பதி

சிவபெருமான் கயிலாயத்திலிருந்து பூலோகத்துக்கு அவ்வப்போது எழுந்தருளி திருவிளையாடல்கள் செய்து பல தலங்களில் அமைந்து அருள்புரிந்து வருகிறார். அவ்வகையில் திருவள்ளுர் மாவட்டம், திருத்தணிக்கு அருகில் நெமிலி என்ற கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகை உடனுறை ஸ்ரீ கமலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளி பல நூற்றாண்டுகளாக இப்பகுதி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இக்கோயில் கி.பி.பத்தாம் நூற்றாண்டில் கடைசி பல்லவ மன்னன் அபராஜித வர்ம பல்லவனால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. சுமார் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்தலம், முற்காலத்தில் மிகப்பெரியதாகக் இருந்திருக்கக் கூடும். கற்றளி வகையைச் சேர்ந்த இத்தலத்தில் 14 கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் (கி.பி.1032) கமலேஸ்வரர் ஆலயத்துக்கு விளக்கேற்ற செப்பு விளக்குகளும் நிலங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகளின் மூலம் நெமிலி திருத்தலம் இல்லத்தூர் நாடு, குன்றவனத்தன கோட்டம், ஜெயங்கொண்ட சோழ மண்டலமான நென்மேலி என பல பெயர்களால் அழைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. குலோத்துங்க சோழ மன்னனின் காலத்தில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து நல்லாத்தூர் கோட்டத்து நென்மேலி என்றும் நென்மேலி ஆன குலோத்துங்க சோழ சதுர்வேத மங்கலம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் தெலுங்கு மொழியில் காணப்படும் ஒரு கல்வெட்டில் (கி.பி.1252) திருப்பள்ளி எழுச்சிக்காக விளக்கேற்ற 1010 குழி நிலம் கொடையாக வழங்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.   கோவலன் என்ற நென்மேலி உடையான் அம்மையாழ்வான் கமலேஸ்வரர் சிவாலய மண்டபத் தூண்களை தானமாக அளித்தது குறித்து கல்வெட்டு தெரிவிக்கிறது.

தி காலத்திலிருந்தே இத்தலத்தை சித்தர்கள் வலம் வந்து வழிபடுவதாகக் கூறப்படுகிறது. பழம்பெருமை வாய்ந்த தலம் என்ற உணர்வு இத்தலத்தைக் காணும்போது நம் மனதுள் இயற்கையாகவே எழுகிறது. வெளியே பலிபீடமும் நந்தியெம்பெருமானும் அமைந்துள்ளனர். பதினாறு கால் மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் அம்பாள் பாலாம்பிகை தெற்கு திசை நோக்கிய சன்னிதியில் சதுர் புஜ நாயகியாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.

கருவறையில் ஈசன் கமலேஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி கிழக்கு திசை நோக்கி லிங்க ரூபத்தில் அமைந்து அருள்புரிகிறார். கமலேஸ்வரருக்கு எதிரே ஒரு நந்தி காட்சி தருவது சிறப்பு. கோட்டங்களில் வழக்கமான தெய்வங்கள் காணப்படவில்லை. துர்கை கோட்டத்திற்கு எதிரே சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் கமலேஸ்வரத் தீர்த்தமாகும்.

சனி ப்ரீதி பரிகாரத் தலமாக விளங்கும் இக்கோயிலுக்கு, சனி பகவானின் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து சனி ஹோரை நேரத்தில் இத்தலத்தின் கமலேஸ்வரத் தீர்த்த நீரை தலையில் தெளித்து இறைவனின் சன்னிதிக்கு வந்து கமலேஸ்வரைரையும் அம்பாள் பாலாம்பிகையையும் வழிபட, அனைத்து சனி தோஷங்களும் விலகும். பிரதோஷம், மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் முதலான விழாக்கள் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

காலப்போக்கில் பராமரிப்பு குறைந்து, ஒரு கட்டத்தில் இத்தலம் மெல்ல மெல்ல சிதிலமடையத் தொடங்கியது. தற்போது ஊர் மக்களும் பக்தர்களும் இந்த சிவாலயத்தை அதன் தொன்மை மாறாது மீண்டும் நிர்மாணிக்க முடிவு செய்து சமீபத்தில் பாலாலய திருப்பணியோடு மற்ற வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெகு விரைவில் இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

அமைவிடம்: திருத்தணியிலிருந்து நாகலாபுரம்-பிச்சாட்டூர் பாதையில் 11 கி.மீ., நாகலாபுரத்திலிருந்து சுமார் 30 கி.மீ., தொலைவில் நெமிலி கிராமத்தில் அமைந்துள்ளது கோயில். திருத்தணி-நாகலாபுரம் No.127, T7 மற்றும் தனியார் பேருந்துகள் நெமிலி கிராமத்தின் வழியாக இயக்கப்படுகின்றன.

தரிசன நேரம்: காலை 8 முதல் 9 மணி வரை ஒருகால பூஜை மட்டுமே நடைபெறுகிறது.

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

டைப் A மற்றும் டைப் B இரண்டும் கலந்த ஆளுமைத்தன்மை உள்ளவர்களின் சிறப்பியல்புகள்!

பல்லிகள் இங்கு சத்தமிடுவதில்லை; கருடன் வானில் பறப்பதில்லை! எங்கு தெரியுமா?

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

SCROLL FOR NEXT