Thirumagal 
தீபம்

தங்க மழைப் பொழிந்தது; திருமகள் திருவருள் கிடைத்தது!

திருமகள் திருவருள் - 1

நளினி சம்பத்குமார்

நாம் செய்த பாவங்களுக்கேற்ப தகுந்த தண்டனை கொடுத்து நம்மைத் திருத்த வேண்டும் என்று நினைப்பாராம் திருமால். ஆனால், அவருக்கு அருகில் இருக்கும் தாயார் திருமகளோ, 'தண்டனை எதுவும் வேண்டாமே, அவர்கள் செய்த தவறுகளுக்கு அவர்களைக் கண்டித்து மட்டும் விட்டு விடுங்கள். பெரிய தண்டனையைக் கொடுத்து விடாதீர்கள்' என்று நமக்காக திருமாலிடம் கெஞ்சுவாராம். இப்படி, நம் தண்டனைகளைக் குறைத்து விடக்கூடிய மகாலக்ஷ்மி தாயாரின் கருணையை என்னவென்று சொல்வது?

நிலையான செல்வத்தை அளிக்கக்கூடியவள் மகாலக்ஷ்மி தாயார்தான். வறுமையின் பிடியில் நின்று தவிப்பவர்களுக்கு தங்க மழையைப் பொழிய வைத்து அவள் காட்டிய அதிசயத்தை, ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மகா தேசிகனின் 'ஸ்ரீ ஸ்துதியும்', ஆதிசங்கரரின் 'கனகதாரா ஸ்தோத்திரமும்'  நமக்கு என்றுமே எடுத்துக்காட்டி கொண்டேதான் இருக்கின்றன அல்லவா?

மகாலக்ஷ்மி தாயாரின் கல்யாண குணங்களைப் பற்றியும், அவரது திருவருள் யார் யாருக்கு எப்படியெல்லாம் கிடைத்திருக்கிறது என்பதைப் பற்றியும் இந்தத் தொடரின் வழியே அனுபவித்து அவளது திருவருளைப் பெறுவோமா?

அயோத்தியில் திருமகள் பொழிந்த தங்க மழையைப் பற்றிய அபூர்வமான கதை ஒன்றை 'ரகு வம்சம்' சொல்கிறது.

Thirumagal

யோத்தியை ரகு மஹாராஜா ஆண்டு கொண்டிருந்த காலத்தில், கெளத்சன் என்ற சீடன், ஒரு மிகச்சிறந்த குருவிடம் குருகுல வாச வழிப்படி சகல விதமான சாஸ்திரங்களையும், வேத வேதாந்த அர்த்தங்களையும் 14 விதமான வித்யா ஸ்தானங்களையும் பயின்று வந்தான். குருவிடம் அத்தனைப் பாடங்களையும் கற்று முடித்த பின், "தங்களுக்கு எவ்வளவு தட்சணை கொடுக்க வேண்டும்?" என்று குருவிடம் கேட்டான். அதற்கு குரு, “கெளத்சா, நான் உன்னிடம் சம்பாவனையை எதிர்பார்த்து பாடங்கள் நடத்தவில்லை. நீ ஒரு நல்ல சிறந்த சீடனாக இருந்து, மிக பவ்யமாக சீடனுக்கே உரிய லட்சணங்களோடு பாடங்களைக் கற்று கொண்டாய். நீ காட்டிய அந்த சிரத்தையும், பயபக்தியும், தர்மமும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. நீ கற்றுக்கொண்ட இந்தக் கல்வி அறிவை பிறருக்கு உபயோகப்படும் வகையில் நீ சொல்லிக் கொடு. அதுவே எனக்குப் போதும்” என்றார்.

உடனே கெளத்சன், “அப்படிச் சொல்லாதீர்கள் குருவே. நான் உங்களிடம் கற்றுக்கொண்ட பாடம் என்பது என் மனதில் என்றுமே அப்படியே இருக்க வேண்டும் என்றால் நிச்சயம் உங்களுக்கு நான் ஏதாவது தட்சணை கொடுத்தே தீர வேண்டும். என்ன தர வேண்டும், எவ்வளவு தர வேண்டும் என்று மட்டும் தாங்கள் மறுக்காமல் சொல்லுங்கள் குருவே” என கெளத்சன் மன்றாடி கேட்டான்.

உடனே அந்த குருவும், “சீடனே, இந்தக் கல்விக்கு இவ்வளவு விலை என்று மதீப்பீடு வைக்க முடியாது. விலை மதிக்க முடியாத கல்வியை நீ கற்றுக் கொண்டிருக்கிறாய். நீ கற்ற 14 வித்யா ஸ்தானங்களின் கணக்குப்படி, ஒவ்வொரு வித்யா ஸ்தானத்திற்கும் ஒரு கோடி தங்கக் காசுகளை கொடு. அதாவது 14 கோடி தங்கக் காசுகளைக் கொடு. இதை நான் உன்னிடம் ஏதோ தட்சணை கேட்க வேண்டுமே என்பதற்காகக் கேட்கவில்லை. அந்தக் கல்வி என்பது அவ்வளவு உயர்வானது. அந்த வித்யா லட்சுமிக்கு நீ சம்பாவனை செய்ய வேண்டும் என்று கேட்டதால் நான் சொல்கிறேன். உன்னால் அவ்வளவு தங்கக் காசுகளைக் கொடுக்க முடியாது. எனவே, கல்விக்கு விலை பேச வேண்டாம்” என்று கூறினார் குரு.

உடனே அந்த சீடன், “குருவே நீங்கள் சொல்லிக் கொடுத்த வித்தை மிகவும் உயர்வானது. உங்கள் வாயால் நீங்களே 14 கோடி தங்கக் காசுகள் என்று சொல்லிய பிறகு அதை மறுக்க அடியேனுக்கு மனம் வரவில்லை. அதனால், எப்படியாவது அந்த தங்கக் காசுகளை சம்பாதித்துக் கொண்டு வந்து உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்“ என்று சொல்லி விட்டு கிளம்பினான் அந்த சீடன் கெளத்சன்.

கு மஹாராஜா அயோத்தியில் அப்போதுதான் விச்வஜித் யாகம் ஒன்றை நடத்துவதாகவும், அந்த யாகத்தில் தன்னிடம் உள்ள அனைத்து செல்வங்களையும் அவர் தானமாக வழங்குவதாகும் கேள்விப்பட்ட கெளத்சன், தனது குருவிற்கு தான் கொடுப்பதாக சொன்ன அந்த தட்சணை தங்கக் காசுகளை ராஜாவிடம் பெற்று கொடுத்து விடலாம் என்ற  நம்பிக்கையில், ரகு ராஜாவிடம் சென்றான் கௌத்சன்.

சந்தோஷமாக கெளத்சனை வரவேற்ற ரகு ராஜா, “என்ன வேண்டும்? யாகத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறீர்களா?“ என்று கேட்டார்.

“மஹாராஜா! நீங்கள் மிகப் பெரிய விச்வஜித் யாகம் செய்வதாகக் கேள்விப்பட்டேன். எனது குருவுக்கு தட்சணையாக 14 கோடி தங்கக் காசுகளை கொடுப்பதாக நான் வாக்குறுதி அளித்துள்ளேன். அந்த தங்கக் காசுகளை உங்களிடம் கேட்டுப் பெறவே வந்துள்ளேன்" என்று சொன்ன அந்த சீடனிடம், “இப்போதுதான் யாகத்தின் ஒரு பகுதியாக தானம் செய்வதற்காக கேட்டவர்கள் அனைவருக்கும் என் கஜானாவில் உள்ள அத்தனை செல்வங்களையும் நான் கொடுத்து முடித்தேன். என்னிடம் உம் குருவுக்குக் கொடுப்பதற்காக ஒன்றுமே இல்லையே” என்று நா தழுதழுக்கச் சொன்னார், திருமகளின் மிகச் சிறந்த பக்தரான ரகு மகாராஜா.

”அப்படியா? பரவாயில்லை மகாராஜா, நான் வேறு எங்காவது சென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று சொல்லியபடியே கெளத்சன் அங்கிருந்து நகர, ரகு ராஜா அவனைத் தடுத்து, “என்னிடம் ஒருவர் ஏதோ ஒன்றைக் கேட்டு வரும்போது அதை அவருக்குத் தராமல் வெறுங்கையோடு திருப்பி அனுப்புவது எனது இயல்பு கிடையாது. அது நான் தினமும் வழிபடும் என் திருமகளுக்கும் பிடிக்காது” என்று கூறி, தனது வலிமை மிக்க மொத்த சிப்பாய்களையும் கூப்பிட்டு, ”வாருங்கள்! குபேரனோடு போர் புரிந்து அவனிடம் உள்ள செல்வத்தை ஜெயித்து வரலாம்” என்று சொல்லி கிளம்ப, எங்கே திருமகளின் பரிபூரண அருளுக்குப் பாத்திரமான ரகு மகாராஜாவோடு சண்டையிட்டு தாம் தோற்று விடுவோமோ என்று பயந்த குபேரன், அயோத்தியின் ஊர் எல்லையில் தங்கக் காசுகளைப் பொழிய வைத்தான்.

ரகு மகாராஜா, கௌத்சனை அழைத்து, “நீர் ஒரு நல்ல விஷயத்திற்காகத்தானே தங்கக் காசுகள் வேண்டும் என்று கேட்டு என்னிடம் வந்தீர். இந்த தங்கக் காசுகள் அனைத்தையும் உங்கள் குருவிற்கு சமர்ப்பித்து விடுங்கள்” என்று சொன்னாராம். மகாலக்ஷ்மி தாயார் அருள் இருக்கும் இடத்தில்தானே நல்ல மனமும் இருக்கும்?

தனது பக்தன் எவ்வளவு நல்ல குணம் படைத்தவனாக இருக்கிறான். இவனை விட்டு என்றுமே இவனது புகழும் செல்வமும் நீங்காமல் நிறைந்தே இருக்க வேண்டும் என்று திருமகள் அயோத்தி அரசனுக்கு அருள் செய்த வரலாற்றை ரகு வம்சம் மிக ரசனையோடு வர்ணிக்கிறது.

நம்மிடமும் அந்தத் திருமகளின் அருள் நீங்காத செல்வமாய் நிறைந்திருக்க நாமும் அவளிடம் வேண்டி நிற்போமே.

- கருணை பொழியும்...

(இந்த திருமகள் திருவருள் தொடர் வெள்ளிதோறும் இடம்பெறும்)

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

உங்க பெண் குழந்தைக்கு இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!  

SCROLL FOR NEXT