Thirumagal Thiruvarul 
தீபம்

திருமகள் திருவருள் 2 - கருணையின் விலாசம்!

நளினி சம்பத்குமார்

கருணையின் பிறப்பிடம், இருப்பிடம் எங்கே இருக்கிறது என்று பார்த்தால், சந்தேகமே இல்லாமல் திருமகளின் திருவடியிலும், அவளின் அன்பு பொங்கும் அந்தத் திருவிழியிலும்தான் என்று சொல்லிடலாம்.

‘கராக்ரே வஸதே லக்ஷ்மி

கரமத்யே சரஸ்வதி

கரமூலேது கோவிந்த:

ப்ரபாதே கரதர்ஸனம்’

என்கிறது ஒரு ஸ்லோகம். நம் கைகளின் நுனியில் வாசம் செய்கிறாள் மஹாலக்ஷ்மி. வாழ்க்கையில் நமக்குத் துன்பம் வரும்போதெல்லாம் கோயில்களுக்குச் செல்ல வேண்டிய சிரமத்தைக்கூட கொடுப்பதில்லை திருமகள். ‘இதோ பார் உன் உள்ளங்கையை, அதில் நான் வாசம் செய்கிறேன்… உனக்கு நம்பிக்கையைக் கொடுப்பதற்காகவே, உன்னைத் துவளவிடாமல் தடுப்பதற்காகவே உன்னுடனேயே வாசம் செய்கிறேன். அந்த நம்பிக்கையை நீ மனதில் வைத்துக்கொள். உன் முயற்சிகள் எல்லாம் வெற்றியில் முடியும்’ என்று நம் கையின் நுனியில் இருந்துகொண்டே தினமும் நமக்கு தன்னம்பிக்கை டானிக் புகட்டுகிறாள் தைரியலக்ஷ்மி. இந்தத் தாயாரின் கருணையை என்னவென்று சொல்வது?

வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைக்கும் திடீர் பதவி உயர்வு, ராஜ யோகம் இதற்கெல்லாம் காரணமாக இருப்பது திருமகளின் அந்தக் கருணை கடாக்ஷம் மட்டுமேதான். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, தேவர்களுக்கும் முற்றிலும் பொருந்தும். இந்திர பதவி முதல் இந்த லோகத்தில் கிடைக்கும் பதவி வரை எல்லாமே அவளது கிருபையால், கருணை கடாக்ஷத்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு பரிசு. அவளது அந்தக் கிருபா கடாக்ஷம்தான் பதவிக்கான சிபாரிசே. திருமாலிடம் தன் கடைக்கண்களால் நமக்காக சிபாரிசு செய்பவளே அவள்தானே?

ஸ்ரீரங்க நாயகியின் பரம பக்தரான பராசர பட்டர் ஒரு முறை அந்தத் தாயாரைப் பார்த்து, “தாயே, திருமகளே, அனைத்து வேதங்களும், இதிகாச புராணங்களும், நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களும் உன் பெருமையைத்தான் பேசுகின்றன” என்றாராம். உடனே தாயார் சிலிர்ப்புடனும், சிரிப்புடனும், “என்ன பட்டரே… வேதங்களும் புராணங்களும் என் பெருமையையா சொல்கின்றன? எல்லாமே பரம்பொருளான திருமாலின் பெருமையைத்தானே சொல்கின்றன?” என்று கேட்க, அதற்கு பராசரர் “தாயே சந்தேகமே இல்லாமல் அவை அனைத்துமே உமது பெருமையைப் பற்றிதான் புகழ்ந்து பேசுகின்றன” என்று சொல்லி, ‘அபாங்கா பூயாம்ஸோ யதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத்’ என்று தொடங்கும் குணரத்ன கோஸ ச்லோகத்தில் ஒரு கதை சொல்லி தாயாரின் பெருமையைத்தான் வேதங்கள், வேதாந்தங்கள் என எல்லாமே புகழ்ந்து பேசுகின்றன என்றாராம். அப்படி தாயாரிடமே பராசர பட்டர் சொன்ன கதை என்ன தெரியுமா?

கலைஞர்களுக்கும் புலவர்களுக்கும் பெரிதும் மதிப்பும் மரியாதையும் தரக்கூடிய ஒரு அரசரிடம் புலவர் ஒருவர் சென்று, “மன்னா, உங்களைப் பற்றி 100 பாடல்களை எழுதி இருக்கிறேன். அந்தப் பாடல்களை உங்கள் அனுமதியோடு இந்த அரசவையில் சொல்கிறேன்” என்று சொல்லி அந்தப் பாடல்களைச் சொல்ல ஆரம்பித்தாராம். முதல் பத்து பாடல்களில் அந்த அரசனின் நிர்வாகத் திறமையைப் பற்றி எழுதி இருந்தார் புலவர். அடுத்த பத்து பாடல்களில், அந்த அரசனின் அரசாட்சியில் அந்த நாடு எப்படி இயற்கை வளங்களோடு அழகாய் திகழ்கிறது என்று வர்ணிக்கப்பட்டிருந்தது. அடுத்த பத்து பாடல்களில் அந்த அரசனின் மந்திரிகளைப் புகழ்ந்து அரசனின் ராஜ குருவை, சேனை படையின் சிறப்பிற்காக பத்து பாடல்கள், அடுத்து அரண்மனையின் சிறப்பம்சங்களை மட்டுமே புகழ்ந்து பத்து பாடல்கள், என இப்படி அடுத்தடுத்து புகழுரைகள் என்பது பத்து பாடல்களில் வரிசையில் வந்து கொண்டே இருந்தே தவிர, அந்த அரசனை புகழ்ந்து ஒரு பாடல் கூட வரவில்லை . பொறுமை இழந்து அரசன் அந்தப் புலவரையே பார்த்து கொண்டு இருக்க, 90 பாடல்களில் எல்லாவற்றையும் புகழ்ந்துவிட்டு கடைசி பத்து பாடல்களில் அமர்க்களமான வார்த்தைகளை எல்லாம் சேர்த்து அந்த அரசனை புகழ்ந்து இருந்தாராம் புலவர்.

புலவரைப் பார்த்து அரசர், “என்ன புலவரே, அரசரின் பெருமை என்று தலைப்பிட்டு விட்டு, என் சேனைகளையும், இந்த ஊரின் அழகையும், மந்திரிகளையும் என எல்லாவற்றையும் புகழ்ந்த நீர் என்னைப் பற்றி வெறும் பத்தே பத்து பாடல்களைத்தானே எழுதி உள்ளீர்?” என்று கோபமாகக் கேட்க, “அரசே, நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள். இந்த நாடு இவ்வளவு செழுமையாக இருக்கிறது, நல்ல அறிவாளியான மந்திரிகள் உங்களிடம் இருக்கிறார்கள் என ஒவ்வொரு பத்து பாடல்களையும் இது இத்தனையும் சாத்தியமானது இப்படிப்பட்ட ஒரு அறிவாற்றல் நிரம்பிய அரசரால்தான் என்பதை அல்லவா மறைமுகமாகச் சொல்லி இருக்கிறேன்?” என்று சொன்னாராம் அந்தப் புலவர்.

இந்தக் கதையை சொல்லிவிட்டு பராசர பட்டர் ரங்க நாயகி தாயாரிடம் “தாயே, உமது பெருமையைப் பாட வேண்டுமென்று தாம் முதலில் வேதம் பாட ஆரம்பித்தது. உன் அருளால், உன் கருணை கடாக்ஷத்திற்கு பாத்திரமானவர்கள் எல்லாம் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்ல எத்தனித்தது வேதம். அதனால்தான், வேதம் என்ன சொல்லி புகழ்கிறது தெரியுமா? “திருமகளே உன் கடாகக்ஷத்தில் கோடியில் ஒரு பங்கு பெற்றவர்கள் வட்டச்செயலாளர் போன்ற பதவியைப் பெற்று விடுவார்கள், லட்சத்தில் ஒரு பங்கு கிடைத்தால் அவர் மேலும் பெரிய பதவியைப் பெற்று விடுவார்கள். ஆயிரத்தில் ஒரு பங்கு தாயாரின் கடாக்ஷத்தை பெற்றவர் அரசனாகி நாட்டை ஆளுவார். இருநூறில் ஒரு பங்கு கிடைத்தவர் அக்னி, நூறில் ஒரு பங்கு தாயார் கடாக்ஷம் பெற்றவரே தேவர்களின் தலைவனாகி இந்திரனாகி விடுவார், பத்தில் ஒரு பங்கு பெற்றவர் ப்ருஹ்மா, திருமகளே உன் மொத்த கடாக்ஷத்திற்கும், கருணை பார்வைக்கும் பாத்திரமானவர்தான் பரம்பொருள், நாராயணன் ஆகி விடுகிறார். அதனாலன்றோ பரம்பொருளின் பெருமையைச் சொல்லியது வேதம்? எப்படி பார்த்தாலும் தாயாரின் கருணை எனும் விலாசத்திற்கு பாத்திரமானவர்கள் தானே இந்த உலகையும் ஆண்டு கொண்டு மேலுலகத்தையும் ஆள்பவர்களாக இருக்கிறார்கள்? இதுவல்லவோ அந்த திருமகளின் பெருமை?

அப்படிப்பட்ட அந்தத் திருமகளின் பார்வை நம் மீதும் ஒரு துளியாவது விழ அவளிடமே பிரார்த்திப்போம்.

சுவையான வெற்றிலை சாதமும், முருங்கைக்கீரை முட்டை பொரியலும் செய்யலாமா?

குழந்தைகளுக்கு Diaper பயன்படுத்தலாமா? கூடாதா?

ஈவினிங் ஸ்நாக்ஸ்: ருசியைக் கூட்டும் வித்தியாசமான கொழுக்கட்டைகள்!

சத்தான லஞ்ச் பாக்ஸ் ரெசிபிஸ் - சாண்ட்விச் வகைகள்!

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரா? கம்பீர் நிலை என்ன?

SCROLL FOR NEXT