தீபம்

தொட்டது துலங்கும் நேரம்!

ஆர்.மகாதேவன்

லங்கை மன்னன் ராவணனின் மனைவி மண்டோதரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் ராவணன் அசுர குருவான சுக்ராச்சார்யாரைச் சந்தித்தான். “யாராலும் வெல்ல முடியாதபடி வீரமும், அழகும் கொண்டவனாக என் மகன் இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என யோசனை கேட்டான்.

“கிரகங்கள் அனைத்தும் ஒரே ராசியில் இருக்கும் நேரத்தில் பிறந்தால் எல்லாச் சிறப்பும் கொண்டதாக குழந்தை இருப்பான்" என்றார் சுக்ராச்சாரியார். உடனே வானில் சுழலும் கிரகங்களைப் பிடித்து சிறையில் அடைத்தான் ராவணன். ஒரே அறையில் இருந்த கிரகங்கள் செய்வதறியாமல் சிரமத்துக்கு ஆளாயின. இதனால் கிரகங்கள் அனைவரும் ராவணனுக்கு யோசனை கூறிய சுக்ராச்சாரியாரைக் கடிந்து கொண்டனர். ‘தாங்கள் அனைவரும் ஓரிடத்திலேயே இருப்பதால் உலக இயக்கம் தடைபடுமே’ என்று வருந்தினர். அதேநேரத்தில் மண்டோதரிக்கு பிரசவ வலி ஏற்பட்டும் அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை. இந்தச் செய்தி கிரகங்களின் காதுக்கு எட்டியதும், ‘அதற்கும் தாங்களே காரணம் என்று ராவணன் தண்டிப்பானோ’ என பயத்தில் ஆழ்ந்தனர். சுக்ராச்சாரியாரிடம் ஆலோசித்தனர்.

மோகனூர் அசலதீபேசுவரர் கோயிலில் உள்ள குளிகன் சிற்பம்

"இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால், கிரகங்களுக்கு இணையான ஒரு புதியவனை சிருஷ்டிக்க வேண்டும். அவன் உருவாகும் அதே நேரத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் நடந்தால் எல்லாம் நன்மையாக நடக்கும்" என்றார் சுக்ராச்சாரியார். உடனே சிறையில் இருந்தபடியே சனீஸ்வரர் தனது விசேஷ ஆற்றலை வெளிப்படுத்தி, தன் மனைவி ஜேஷ்டா தேவிக்கு ஒரு மகன் பிறக்கும்படி செய்தார். அந்தப் புதல்வனுக்கு 'குளிகன்' எனப் பெயரிட்டனர். குளிகன் பிறந்த நேரத்தில் மண்டோதரிக்கும் அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவன் மாவீரனாகத் திகழ்வான் என்பதை உணர்த்தும் வகையில் இடி, மின்னலுடன் பெருமழை பெய்தது. அதனால் தனது மகனுக்கு, 'மேகநாதன்' எனப் பெயரிட்டான் ராவணன். இளமைப் பருவத்தில் மேகநாதன் தனது தவ பலத்தால் பிரம்மாவிடமிருந்து பல அபூர்வ அஸ்திரங்களைப் பெற்று, இந்திரனையே வென்றதால், 'இந்திரஜித்' என அவன் பட்டப்பெயர் பெற்றான்.

இந்திரஜித், குளிகன் இருவரும் பிறந்த சுப நேரமே, ‘குளிகை’ எனப்படுகிறது. ராவணனிடம் இருந்து விடுவிக்கச் செய்ததால் நவக்கிரகங்கள் குளிகனை பாராட்டினர். தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக ஒதுக்கிக் கொடுத்தனர். அந்த நேரத்தை, 'காரிய விருத்தி நேரம்" என்றும், இதில் தொடங்கும் நல்ல செயல்களால் குடும்பமே செழிக்கும் என்றும் ஆசியளித்தார் சுக்ராச்சாரியார். குளிர்ந்த தன்மையைக் கொண்ட இவன், ஒவ்வொரு நாளிலும் நல்ல செயல்களை நடத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவன். சனிக்கிழமையில் மாலை நேரத்தில் குளிகனை வழிபடுவது சிறப்பு. சனீஸ்வரனை வழிபடும்போது குளிகனை மனதில் நினைக்க வேண்டும். குளிகை நேரத்தில் செய்யும் செயல், திரும்பத் தொடரும் என்பதால் இறப்புச் சடங்குகள் உள்ளிட்ட அசுப நிகழ்ச்சிகளை இந்த நேரத்தில் நடத்தக் கூடாது. குளிகை நேரத்தில் நல்லதைச் செய்தால் தொட்டது துலங்கும்.

"பயிற்சி செய் அல்லது செத்து மடி": ப்ரூஸ் லீயின் அறிவுரை!

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

SCROLL FOR NEXT