எண்கர துர்கை 
தீபம்

அற்புதங்கள் நிகழ்த்தும் ஸ்ரீ அஷ்டபுஜ துர்கை!

பழங்காமூர் மோ.கணேஷ்

வெற்றிகளை அள்ளித் தரும் துர்கா தேவி கொற்றவையின் அம்சம். சிவனுக்கு மிகப் பிரியமான இந்த துர்கை அனைத்து சிவாலயங்களிலும் சிவனுக்கு இடப்புறம் தனக்கென்று ஓர் இடம் பிடித்து வடக்கே முகம் காட்டி அருள் மழை பொழிபவள். அந்த வகையில் புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்திலுள்ள மடுகரை என்ற கிராமத்தில் தனியே கோயில் கொண்டு அருள்புரிகின்றாள். வழக்கமாக வடக்கே திருமுகம் காட்சி அருளும் துர்கா தேவி, வித்தியாசமாக இத்தலத்தில் கிழக்கே அருள்முகம் காட்டி தரிசனம் தருகின்றாள். எட்டு திருக்கரங்களோடு சிம்மத்தின் மீது வீற்றிருந்து, பக்தர்களைக் காக்கும் காவல் தெய்வமாய் காட்சியளிக்கின்றாள்.

ஆலய மேல் தோற்றம்

இந்த துர்கை இத்தலத்தில் கோயில் கொண்ட நாள் முதல், பக்தர்களது கனவில் வந்து, அவர்களிடம் பேசி, அவர்களின் குறைகளைக் களைவதை வழக்கமாகக் கொண்டுள்ளாள். அப்படி ஒரு நாள் இரவு தனது கோயிலுக்கு அருகே இருந்த 'இருசப்பன்' என்ற பக்தனைத் தட்டி எழுப்பி, தனது சூலாயுதத்தை திருடன் ஒருவன் திருடிக்கொண்டு ஏரிக்கரை மீது செல்வதாகச் சொன்னாள். உடனே ஊரார் துணையோடு ஓடிச் சென்ற இருசப்பன், துர்கையின் சூலத்தை மீட்டு வந்தான். இப்போது அந்த சூலாயுதம் சுதை வடிவ துர்கையின் கரத்தில் தவழ்கிறது. இதுபோன்ற அற்புத சம்பவங்கள் இங்கு நித்தமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நவக்கிரகம்

வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த துர்கைக்கு விளக்கேற்றி, குங்குமத்தால் அர்ச்சனை செய்தால் பக்தர்களின் குறைகளைக் களைந்து, அவர்களின் வாழ்வில் குதூகலத்தை ஏற்படுத்துகின்றாள். அதோடு, இக்கோயிலில் தனியே சனீஸ்வர பகவான் எழுந்தருளி அனுக்கிரகம் செய்வதால் இவர், ‘அனுக்கிரக சனி’ என போற்றப்படுகின்றார். எங்குமே காணக் கிடைக்காத வட்ட வடிவ அமைப்பில் நவக்கிரகங்களை இங்கு தரிசிக்கலாம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இக்கோயிலில் சிறப்பு அபிஷேக அலங்காரமும், அன்னதானமும் நடைபெறுகின்றன.

சனி பகவான்

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் இக்கோயிலில் மிகவும் கோலாகலமாக இருக்கும். இவ்விழா காலத்தில் துர்கையை வழிபட வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நிவேதன பிரசாதத்தோடு, குங்குமமும் வழங்கப்படுகின்றன. ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான அலங்காரத்தில் அன்னை அஷ்டபுஜ துர்கை இங்கே அழகாய் காட்சி தருகின்றாள். பக்தர்களிடம் நேரில் பேசும் இந்த எண்கர துர்கையை வழிபட, திருமணத்தடை நீங்குகிறது, பிள்ளை வரம் கிடைக்கிறது, வழக்குகளில் வெற்றி கிடைக்கிறது. வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் இந்த அஷ்டபுஜ துர்கையை வணங்கி, வாழ்க்கையின் இன்னல்கள் யாவும் களைவோம். இன்புற்று வாழ்வோம். விழுப்புரம் - புதுச்சேரி வழிகாகச் செல்லும் பேருந்துகளில் மடுகரை வரலாம். நெடுஞ்சாலையை ஒட்டி இந்த ஆலயம் அமைந்துள்ளதால் இக்கோயிலுக்கு வருவது மிகவும் சுலபம்.

ஆதார் கார்டில் உள்ள பிழைகளை எத்தனை முறை திருத்த முடியும்?

'எழுத்தாளர் ஏகாம்பரம்' to 'பாவம் பட்டாபி'... நகைச்சுவை நாடக நாயகன் கோவை அனுராதாவுடன் கல கல பேட்டி!

ஸ்ரீராமரையே வியக்கவைத்த வாலி மகன் அங்கதனின் 8 லட்சணங்கள்!

இனியும் ஏமாறாதீர்கள் மக்களே! கடின உழைப்பினால் கிடைத்த பணம் பத்திரம்!

இந்த விஷயம் தெரிந்தால், நகைகளை வங்கிகளில் அடகு வைக்கவே மாட்டீங்க! 

SCROLL FOR NEXT