திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நேற்று தொடங்கியது. வசந்தோற்சவத்தின் 2-ம் நாளான இன்று காலையில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமி தங்க ரதத்தில் எழுந்தருளினார்.
தங்க ரதத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, நான்கு மாட வீதிகளில் வலம் வந்தபின், கோவிலுக்கு பின்புறம் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார் மலையப்ப ஸ்வாமி.
அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட செயற்கை வனத்தில் ஸ்வாமிக்கு ஜீயர்கள் முன்னிலையில் கொள்ளு வைக்கப்பட்டது. மேலும் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீமலையப்பருக்கு பால், தயிர், இளநீர் வெட்டி வேர் உள்ளிட்ட மூலிகை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து ஸ்வாமியை குளிர்விப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் வசந்தோற்சவம் 3 நாட்களுக்கு நடத்தப்படுகிற்து. இந்த உற்சவத்தின் கடைசி நாளான நாளை ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர், சீதா லக்ஷ்மண கோதண்டராமர், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி பின்னர் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்றூ காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற அபிஷேக சேவையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஸ்வாமி தரிசனம் செய்தார்.
அவரை அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ-வும், அறங்காவலர் குழு உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார் உடனிருந்து சுவாமி தரிசனம் செய்து வைத்தார்.
பின்னர் ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவத்திற்காக ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளியதில் துர்கா ஸ்டாலின் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.