-மணிமேகலை
ஹாய் குட்டீஸ்! நமது ஆரோக்கியம் நம் கையில்தான். அது எப்படி? என்று கேட்டால்... அதற்கான விளக்கம் இப்பதிவில்.
இன்றைய அவசரமான, பரபரப்பான காலகட்டத்தில் நாம் நம்முடைய ஆரோக்கியத்தைப் பற்றி சிறிதும் கவலைகொள்வதில்லை. ஒரு சில நிமிட சந்தோசத்திற்காகவும், நமது ஆசைக்காகவும் நம் உடல் ஆரோக்கியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக புதைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. எவ்வாறு ஆரோக்கியம் நம் கைகளில் உள்ளதோ, அதே மாதிரி நம் ஆரோக்கியம் அழிவதும் (கெடுவதும்) நம் கைகளில்தான் உள்ளது. இன்றைய காலகட்டத்தில் நாம் கடைபிடிக்கும் வாழ்க்கைமுறையும், உணவு பழக்கமும் நம் ஆரோக்கியத்தை அழிவிற்கே கொண்டு சேர்க்கிறது.
முன்பெல்லாம் நல்ல ஆரோக்கியமான உணவு முறையும், அதற்கேற்ப உடலுக்கு பயிற்சி தரும் வேலையும் அதாவது உடலுழைப்பும் இருந்தது. ஆனால், தற்போதைய டிஜிட்டல் உலகில், நாம் உட்கார்ந்த இடத்திலேயே பல மணிநேரம் வேலை செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அதோடு இல்லாமல், ஆரோக்கியமான உணவுகளைவிட நம் உடலுக்கு தீங்கு தரக்கூடிய, ஆரோக்கியத்திற்கு ஆபத்து தரக்கூடிய உணவுகளையே அதிகம் நுகர்ந்து கொண்டிருக்கிறோம். நாம் இந்த வாழ்க்கை முறையிலிருந்தும், உணவு பழக்கத்திலிருந்தும் முழுமையாக விடுபட்டு பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு திரும்பச் செல்வது என்பது கேள்விக்குறிதான். அவ்வாறு இருக்க, எப்படி நம் ஆரோக்கியத்தைக் காப்பது...?
நம்மால் முழுமையாக பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு செல்ல இயலாவிட்டாலும், ஒரு சில பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலம் நம் ஆரோக்கியத்தைப் பேண முடியும்.
அவை,
இரவில் சீக்கரம் தூங்க சென்று காலையில் சீக்கரம் எழுவது,
உடற்பயிற்சி செய்வது (தொடக்கத்தில் கடினமான உடற்பயிற்சியை விட சுலபமான உடற்பயிற்சிகளை செய்யலாம்) ,
குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து பழச்சாறு, பழங்கள், இளநீர் மற்றும் ஆரோக்கியமான சத்துகள் நிறைந்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுதல்,
முக்கியமாக நடைபயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்வது...
இவை நம் உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
நீண்ட நேரம் கணினி மற்றும் கைப்பேசிகளில் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து வெளியில் சென்று விளையாடலாம்.
ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், கட்டுரை எழுதுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபடலாம். மேலும், வீட்டிற்கு வெளியில் சென்று விளையாடலாம்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, துரித உணவுகள் உண்ணும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, ஆரோக்கிய உணவு பழக்கத்திற்குத் திரும்பலாம். அதோடு இல்லாமல், முடிந்த வரையில் கடைகளில் ஆர்டர் போட்டு சாப்பிடாமல் வீட்டில் சமைத்த நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.
நாம் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு நாமும் நம்மை சார்ந்து உள்ளவர்களும் ஆரோக்கியத்துடன் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே, நம் ஆரோக்கியம் நமது கைகளில்தான் என்பதை கருத்தில்கொண்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழிமுறைகளையும், பழக்கவழக்கத்தையும் பின்பற்றுவதை வாழ்வின் ஒரு அங்கமாக (லட்சியமாக) எடுத்துக்கொண்டு நோயின்றி, நலமான வாழ்வை வாழ்வோம் செல்லங்களா!