Television 
கோகுலம் / Gokulam

தொலைக்காட்சி எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது? தெரிந்து கொள்வோமா?

ஆர்.வி.பதி

உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளை நாம் நமது வீட்டில் அமர்ந்தபடியே அடுத்த நொடியே தொலைகாட்சியில் பார்க்கிறோம். உலகில் நடைபெறும் பல நிகழ்வுகளை நமது வீட்டு வரவேற்பறைக்குக் கொண்டு வரும் அறிவியல் கண்டுபிடிப்பே தொலைக்காட்சி. இந்த அதிசயத்தைக் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் லாகி பேர்டு. தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்ட கதையினை இந்த பதிவில் பார்ப்போம்.

கிளாஸ்கோவில் அமைந்த ராயல் தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் போதே ஒரு படத்தை கம்பியின்றி மற்றொரு இடத்திற்கு அனுப்பிப் பார்க்க வேண்டும் என்று யோசித்தார். தனது கல்லூரி நிர்வாகத்தை அணுகி தனக்கு ஆராய்ச்சிகளைச் செய்ய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொண்டார்.  ஆனால் கல்லூரி நிர்வாகம் இவருடைய கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே இவர் தன்னுடைய வீட்டிலேயே ஒரு ஆராய்ச்சிக்கூடத்தை அமைத்து ஆராய ஆரம்பித்தார். இந்த காலகட்டத்தில் மார்கோனி கம்பியில்லாத் தந்தி மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செய்திகளை அனுப்பும் முறையினைக் கண்டுபிடித்திருந்தார். கம்பியின்றி படங்களை அனுப்புவது குறித்த தனது புதிய கருத்தை தனது சகோதரியிடம் மற்றும் தெரிந்தவர்களிடம் எடுத்துக் கூறினார் பேர்டு. ஆனால் அவர்கள் யாருமே இதை நம்பவில்லை.

தனது ஆராய்ச்சிகளை நடத்த பேர்டிடம் பணவசதி இல்லை. எனவே பழைய பொருட்கள் விற்கும் கடையிலிருந்து சில உபகரணங்களை வாங்கி தனது வீட்டிலேயே ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். முதன்முதலில் கி.பி.1923 ஆம் ஆண்டில் ஒரு கருவியை வடிவமைத்து படத்தை கம்பியின்றி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்ப முயற்சித்தார். ஆனால் அவருடைய முயற்சி தோல்வியிலேயே அமைந்தது.

தொடர்ந்து பேர்டு மற்றொரு கருவியை வடிவமைத்தார். இக்கருவியின் மூலம் அனுப்பப்பட்ட படத்தின் நிழலானது சற்று தொலைவில் தெரிந்தது. கி.பி.1925 ஆம் ஆண்டு பொதுமக்கள் முன்னிலையில் ஒரு ஒளிபரப்பை நிகழ்த்தினார்.  இதுவே முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும். ஆனால் மக்கள் முழுமையாக இதை நம்பவில்லை. 02 அக்டோபர் 1925 அன்று தனது அறையில் ஒரு சோதனை ஒளிபரப்பை நிகழ்த்திப் பார்த்தார். வில்லியம் டயான்டன் என்பவரை ஒரு அறையில் ஒரு கருவியின் முன் நிற்கவைத்தார். அவருடைய முகமானது அடுத்த அறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு திரையில் தெரிந்தது.  

பேர்டு தனக்கு முன்னர் சிலர் கண்டுபிடித்த சில கருவிகளையும் தனது தொலைக்காட்சிக் கண்டுபிடிப்பிற்கு உபயோகித்துக் கொண்டார. ஜெர்மனி நாட்டைச்சேர்ந்த பால் நிப்கவ் (Paul Nipkow) என்பவர் 1884 ல் ஒரு சிறிய உபகரணத்தைக் கண்டுபிடித்திருந்தார். இதற்கு நிப்கவ் தட்டு (Nipkow Disk) என்று பெயர். ஒரு துளையிடப்பட்ட வட்டவடிவத் தட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த உபகரணத்தை அவர் வடிவமைத்திருந்தார். லாகி பேர்டு இந்த நிப்கவ் தட்டை அடிப்படையாகக் கொண்டே தொலைக்காட்சியை உருவாக்கினார் என்றால் அது மிகையாகாது.    

ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் பிரான் என்பவர் கேதாடு குழாய் என்ற ஒரு உபகரணத்தையும் கண்டுபிடித்திருந்தார். பேர்டு இந்த இரண்டு கருவிகளையும் தன்னுடைய தொலைக்காட்சிக் கண்டுபிடிப்பிற்கு உபயோகப்படுத்திக் கொண்டார். தன்னுடைய தொலைக்காட்சி அமைப்பை சற்று நவீனப்படுத்திய பியார்டு 26 ஜனவரி 1926 அன்று பத்திரிகையாளர்களை அழைத்து தன்னுடைய கருவியை அவர்களுக்கு விளக்கிக் காட்டினார். இதன் மூலம் லாகி பேர்டு பரவலாக பேசப்பட்டார்.

தொடர்ந்து தொலைக்காட்சி குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார்.  தன்னுடைய கண்டுபிடிப்பை நாளுக்குநாள் மேம்படுத்தினார். கி.பி.1929 ஆம் ஆண்டு லண்டனில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு ஒளிபரப்பைச் செய்து காட்டினார். கி.பி.1930 ஆம் ஆண்டில் படத்தோடு ஒலியையும் சேர்த்து அனுப்பும் முறையினைக் கண்டுபிடித்திருந்தார். இதே ஆண்டில் இவர் லண்டனில் ஒரு ஒளிபரப்பு நிலையத்தை உருவாக்கினார். கி.பி.1931 ஆம் ஆண்டில் குதிரைப்பந்தயம் ஒன்றை ஒளிபரப்பு செய்தார். மக்கள் இந்நிகழ்ச்சியை பெரிதும் ரசித்துப் பார்த்தனர்.   

ஆரம்ப காலத்தில் வெறும் நூறு தொலைக்காட்சிப் பெட்டிகளே இருந்தன. இன்று இந்த தொழில்நுட்பமானது வெகு வேகமாக வளர்ச்சி அடைந்து கோடிக்கணக்கான தொலைக்காட்சிப் பெட்டிகள் உலகம் முழுவதும் பரவிவிட்டன.

ஜான் லாகி பேர்டு இங்கிலாந்தில் அமைந்த சூஸ்செக்ஸ் எனும் இடத்தில் 14 ஜீன் 1946 அன்று காலமானார்.

வெஜ் ஸ்டஃப்டு யம்மி பப்ஸ்!

பிரிட்டிஷ் அரச மகுடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் உண்மையில் யாருக்கு சொந்தம் தெரியுமா?

ரஷ்யா- உக்ரைன் போரில் ஈடுபட்ட இந்தியர்கள் மீட்பு!

நோக்கியாவின் பரிணாமம்… மொபைல் உலகின் முன்னோடி! 

ஹிந்தி பிக்பாஸுக்கே தமிழ் சொல்லிக் கொடுத்த ஸ்ருதிகா… தமிழ் ரசிகர்கள பிடிச்சுட்டாருங்க!

SCROLL FOR NEXT