முன்பெல்லாம் பள்ளிகளில் தினசரி கட்டாயமாக மாலை வேலையில் குழந்தைகளை விளையாட விடுவார்கள். ஆறாம் வகுப்பிற்கு மேல் வாரம் ஒரு நாளாவது கட்டாயமாக விளையாட்டு பிரிவேளை இருக்கும். அதில் கொக்கோ, பால் விளையாடுவது போன்ற பல்வேறு விளையாட்டுகளை பள்ளிகளில் விளையாட அனுமதிப்பார்கள். இதனால் சிறந்த மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து பள்ளிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள செய்து வெற்றிபெற வைப்பார்கள்.
பிறகு கல்லூரி நாட்களில் ஹாக்கி, டென்னிஸ், ஜாவலின் த்ரோ, தடை தாண்டுதல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். இதில் பல்வேறு கல்லூரிகளுக்குள் நடக்கும் போட்டிகளில் பங்கு எடுத்து வெற்றி பெறுவார்கள். இவர்களை மாநில அளவில் விளையாட வைப்பார்கள். இப்படித்தான் சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து ஆசிய, பல்வேறு நாடுகளுக்கு இடையில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலும் விளையாட அனுமதி பெறுவது என்பது நடைமுறைக்கு வந்தது. இதில் மிகவும் சாமர்த்தியம் பெற்றவர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு கொடுத்து உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
விளையாட்டு விழாக்கள் நாடுகளின் நன்மதிப்பை உயர்த்துவது மட்டுமல்லாமல் நல்லெண்ண, நட்புறவை உருவாக்குகிறது. ஆசிய அளவில் உலக அளவில் நடக்கும் விளையாட்டு விழாக்களில் அந்தந்த நாடுகளின் பன்முகத்தன்மையும், ஒற்றுமை ஒருங்கிணைப்பும் வெளிப்பட்டு தெரியும். ஒன்று கூடி நின்று தம்மை நிலைப்படுத்திக் கொண்டு பெருமையும் பாராட்டும் பெற விளையாட்டு விழாக்கள் மிக்க அவசியமாகின்றன.
இப்படி பள்ளிகளில் நடக்கும் விளையாட்டு விழா தொடங்கி நாடுகள் வரை நடக்கும் விழா வரை வீரர்களிடம் விளையாட்டு மூலம் விதிகளுக்கு கீழ்ப்படியும் பண்பும், கூட்டமாக இணைந்து செயல்படும் ஆற்றலும், விட்டுக் கொடுத்து வெற்றித் தோல்விகளை சமமாக கருதும் குணமும் வலுப்படுத்துகின்றன. தேசிய ஒற்றுமைக்கு இப்பண்புகள் மிகுந்த அடித்தளமாக விளங்குகின்றன. சிறப்புமிக்க விளையாட்டு விழாக்கள் இப்பண்புகள் வளர களம் ஏற்படுத்தி தருகின்றன.
மேலும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு இடையே நல்லுறவும் நல்லெண்ண சங்கமும் ஏற்பட விளையாட்டு விழாக்கள் உதவுகின்றன .மாநில அளவில் நடைபெறும் விழாக்கள் மூலம் மாநில உறவுகள் வலிமை அடையவும், நட்புரிமை வளரும் வாய்ப்பையும் தந்து உதவுகின்றன.
வங்கிகள், ரயில்வே, காவல்துறை பெரும் தொழில் நிறுவனங்கள் மூலம் நடைபெறும் விழாக்களால் அனைவரது பங்களிப்பும் ஒற்றுமையை நோக்கி எண்ணங்கள் வளர்வதற்கு காரணமாகின்றன. விளையாட்டு என்பதே கூடி விளையாடுவது தான். தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு வளர்ந்திட இந்த விளையாட்டுகள் நல்லுணர்வு ஒருங்கிணைப்பு மூலம் பெரிதும் இணைப்பு பாலமாக உள்ளன.
உள்வெளி அரங்க விளையாட்டுகள் மூலம் எல்லோரும் ஒன்றே என்ற உணர்வு வெளிப்படுகின்றது. மொழி, இனம் கடந்து அனைவரும் ஒன்றே என்ற ஒற்றுமை உணர்வுக்கு இந்த விளையாட்டு விழாக்கள் மிக மிக அவசியமாகும்.
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...
காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா
என்ற பாரதியின் வரிகளை மனதில் கொண்டு, எலக்ட்ரானிக் பொருட்களில் விளையாடுவதை தவிர்த்து, வெளியில் சென்று உங்களைப் போன்ற குழந்தைகளோடு விளையாடி மகிழுங்கள் குட்டீஸ். அதுதான் உடற்பயிற்சியோடு, தேக ஆரோக்கியம் மற்றும் மனப்பயிற்சி அனைத்திற்கும் நன்மை தரும்.