Iranian weaver 
கோகுலம் / Gokulam

ஈரான் நாட்டுக்கதை - நெசவாளியின் மதிநுட்பம்!

ஆர்.வி.பதி

முன்னோரு காலத்தில் அண்டை நாட்டு தூதன் ஒருவன் ஈரான் நாட்டின் அரசவைக்கு வந்தான். வந்தவன் ஏதும் பேசாமல் மன்னரை வணங்கிவிட்டு அவர் அமர்ந்திருந்த சிம்மாசனத்தைச் சுற்றி வட்டமாய் ஒரு கோடு போட்டான்.  பின்னர் அங்கே உட்கார்ந்து கொண்டான்.   

மன்னர் தனது அமைச்சர்களிடம் அண்டைநாட்டு தூதனின் செய்கை எதைக் குறிக்கிறது என்று கேட்டார். அவர்களுக்கோ பதில் தெரியவில்லை. அவர்கள் அந்த தூதுனிடம் பேச்சு கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால் அவன் வாய் திறக்க மறுத்து மௌனமாக இருந்தான்.

அமைச்சர்களுக்கும் ஒரே குழப்பமாக இருந்தது. மன்னர் இதைப் புரிந்து கொண்டு தனது பணியாட்களை அழைத்து இந்த தூதனின் செய்கையின் பொருளைத் தெரிவிக்கும் ஆற்றல் படைத்த ஒருவனைத் தேடி அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார்.

பணியாட்கள் நகரெங்கும் புத்திசாலியான ஆள் யாராவது கிடைக்கமாட்டானா என்று தேடிப்பார்த்தார்கள். ஒரு வீட்டிற்குள் ஒரு தொட்டில் யாருமின்றி தானாகவே ஆடிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, பணியாட்கள் அவ்வீட்டிற்குள் நுழைந்தார்கள். அந்த வீடு ஒரு மாடி வீடு. மாடியில் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க நினைத்த பணியாட்கள் மாடிக்குச் சென்றார்கள். அங்கேயும் அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. மாடியில் தானியம் உலர்த்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த தானியத்தின் அருகே குச்சி ஒன்று தானாகவே சுழன்று கொண்டிருந்தது. காக்கை குருவி போன்ற பறவைகள் தானியங்களை கொத்திக் கொண்டு போவதை தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

பணியாளர்கள் அந்த குச்சியில் நூல் ஒன்று கட்டப்பட்டிருப்பதைக் கண்டு அந்த நூல் எங்கிருந்து வருகிறது என்பதை அறிய அதைத் தொடர்ந்து சென்றார்கள். அப்போது தொட்டிலிலும் அதுபோன்ற ஒரு நூல் கட்டப்பட்டிருப்பதை அறிந்தார்கள். அந்த இரண்டு நூல்களும் வீட்டின் கீழ்தளத்திற்குச் செல்வதை அறிந்து, அங்கே செல்ல, ஒரு நெசவாளி நெசவு இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அந்த இரண்டு நூல்களும் தறியில் கட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். நெசவாளி தறியை இயக்கியதும் அந்த இரண்டு நூல்களும் இயக்கப்பட்டு தொட்டிலையும் குச்சியையும் ஆட்டுவிக்கின்றன என்பதை அறிந்து அந்த நெசவாளியின் அறிவைக் கண்டு வியந்தார்கள். இவனே தூதனின் செய்கைக்கு விடைகாணச் சிறந்தவன் என்று முடிவு செய்து அவனிடம் வந்த விஷயத்தைத் தெரிவித்தார்கள்.

நெசவாளி சம்மதித்து  பணியாட்களுடன் புறப்பட ஆயத்தமானான். புறப்படும் போது உடன் இரண்டு கோலிக்குண்டுகளையும் கோழி ஒன்றையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

அரசவைக்குச் சென்ற நெசவாளி  மன்னருக்கு வணக்கம் தெரிவித்து தூதனின் முன்னால் இரண்டு கோலிகளையும் உருட்டினான். உடனே தூதன் தன்னிடமிருந்த தானியங்களை எடுத்து கீழே இறைத்தான். நெசவாளி தன்னுடன் கொண்டு வந்திருந்த கோழியை விட, அது தானிங்களை கொத்தித் தின்றது. உடனே தூதன் மன்னரை வணங்கி அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டான்.

மன்னருக்கும் அமைச்சர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. மன்னர் நெசவாளியிடம் இதுகுறித்து விசாரித்தார்.

“மன்னரே.  நமது நாட்டை அவர்களது நாட்டுப்படை முற்றுகையிட முடிவு செய்திருக்கிறது என்பதை தெரிவிக்கவே அந்த தூதன் தங்களது சிம்மாசனத்தைச் சுற்றி கோடு போட்டான்.   நம்மைப் பொறுத்தவரை அண்டை நாட்டவர்கள் நம்முடன் சண்டையிட தகுதியில்லாத சிறுவர்களைப் போன்றவர்கள் என்பதை அந்த தூதுவனுக்கு கோலிகளை உருட்டி தெரிவித்தேன். அதற்கு அந்த தூதன் அவர்களது மன்னரது படை பலத்தை நமக்குத் தெரிவிக்க தானியத்தை இறைத்துக் காட்டினான். நான் உடனே கோழியை விட்டு அந்த தானியங்களை ஒன்று விடாமல் கொத்தி தின்னச் செய்து அவர்களுடைய படைவீரர்களை நமது படைவீரர்கள் கோழி தானியங்களை கொத்தித் தின்பதைப் போலத் தின்று அழித்து விடுவார்கள் என்று தெரிவித்தேன். நம்மிடம் போரிட பயந்து அந்த தூதன் தங்களை வணங்கி விஷயத்தை அவனுடைய மன்னரிடம் தெரிவிக்க தனது நாட்டிற்குச் சென்றுவிட்டான்.”

நெசவாளியின் மதிநுட்பம் மன்னருக்கு மகிழ்ச்சியைத் தர ஏராளமான பரிசுகளை அளித்து கௌரவித்தார் மன்னர்.

ஸ்வீடனின் பாரம்பரிய முட்டை காபி… நன்மைகள் மற்றும் செய்முறை பார்ப்போமா?

இருமல், சளியின்போது அவசியம் தவிர்க்க வேண்டிய பழங்கள் மற்றும் உணவுகள்!

உங்கள் மகிழ்ச்சியை மனதில் ஏற்றுங்கள்!

கலியுக வரதன் ஐயப்பனின் 10 அருள் அவதாரங்கள்!

தூங்கும்போது முடியை விரித்துப்போடுவது நல்லதா? அல்லது பின்னிப் போடுவது நல்லதா?

SCROLL FOR NEXT