Man and Donkey 
கோகுலம் / Gokulam

உலக சிறுவர் கதைகள்: 2 - புத்திசாலிக் கழுதை (துருக்கி நாட்டுப்புறக் கதை)!

ஷாராஜ்

அகமது ஒரு மலையடிவார கிராமத்தில் வசித்து வந்த ஏழை விவசாயி. அவரது கிராமம் பாலைவன விளிம்பை ஒட்டி அமைந்திருந்தது. டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையில் அங்கு பனிப்பொழிவு இருக்கும். பிறகு இரண்டு மாதங்களுக்கு அந்தப் பனி உருகி, கீழே உள்ள பள்ளத்தாக்கில் நதியாக ஓடும். மீதமுள்ள மாதங்கள் முழுவதும் அங்கே கடுமையான வறட்சி நிலவிக்கொண்டிருக்கும்.

கிராமத்து விவசாயிகள் தங்களது நிலங்களில் கிணறுகள் தோண்டியிருப்பார்கள். அந்தக் கிணற்றின் அடிப்பாகத்திலிருந்து பள்ளத்தாக்கிற்கு ஒரு சுரங்க வழி இணைக்கப்பட்டிருக்கும். நதி நீர் அவ் வழியே இந்தக் கிணற்றுக்கு வந்து சேரும். அதிலிருந்துதான் தங்களது பயிர்களுக்கு விவசாயிகள் நீர் பாய்ச்சுவார்கள்.

அகமது காலையில் எழுந்ததும் கடவுளைப் பிரார்த்தனை செய்வார். பிறகு தனது விளைநிலத்திற்குச் சென்று, அங்கே சுட்டெரிக்கும் வெயிலில் வேர்வை வழிய, கடுமையாகப் உழைப்பார். அவரது நிலத்தில் தர்பூசணி பயிரிடப்பட்டிருந்தது. விளைச்சல் சமயத்தில் அவற்றைப் பறித்து மூட்டை கட்டி, கழுதையின் மீது வைத்துக்கொண்டு, சந்தைக்குச் சென்று விற்பனை செய்வார்.

ஒரு முறை அப்படிச் செல்லும்போது, கைவிடப்பட்ட ஒரு கிணற்றுக்குள் அவரது கழுதை தவறி விழுந்துவிட்டது. அகமது மேலிருந்து பார்க்கும்போது, உள்ளே இருந்த வெளிச்சக் குறைவினால் கழுதைக்கு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. ஆனால், அது குரலெடுத்து பயங்கரமாகக் கத்திக்கொண்டிருந்தது.

ஒருவேளை அதன் கால் உடைந்திருக்கலாம்; அதனால்தான் பாவம் இப்படிக் கத்துகிறது என்று அகமது எண்ணிக்கொண்டார். அது வயோதிகமான கழுதைதான். ஆனாலும், அதன் இளம் வயதிலிருந்தே அவருக்காகப் பாடுபட்டது. அது அவருக்கு விசுவாசமாக இருந்ததோடு, அவரிடம் மிகுந்த வாஞ்சையோடு பழகும்.

தனது வேலைக்கு அதை அவர் பயன்படுத்திக்கொண்டு இருந்தார் என்றாலும், அதை அக்கறையோடு பராமரித்து, செல்லப் பிராணியைப் போல அதனிடம் அன்பு செலுத்தி வந்தார். அதனால், அந்தக் கழுதையை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று தீர்மானித்து, கிராமத்துக்குச் சென்று சக விவசாயிகளை உதவிக்கு அழைத்து வந்தார்.

அவர்களிடம் அங்கிருந்த குப்பை கூளங்களை அள்ளி, கொஞ்சம் கொஞ்சமாக கிணற்றின் உள்ளே கொட்டுங்கள் என்று சொல்லி, அவரும் உடன் இருந்து பணிபுரிந்தார். அவர்கள் அவ்வாறு குப்பை கூளங்களை உள்ளே கொட்டியதும் கழுதை மிரண்டுபோய் மேலும் கத்தியது. சற்று நேரம் இடைவெளி விட்டு மேலும் அதே போல குப்பை கூளங்களைக் கொட்டினர். அப்போது கழுதை கத்துவதை நிறுத்தி அமைதியாக இருந்தது.

அது என்ன செய்கிறது என்று விவசாயிகள் மேலேயிருந்து கவனித்தனர். கழுதை அந்த குப்பை கூளங்களைத் தனது காலடியில் போட்டு மிதித்து அதற்கு மேலே நின்றது.

கொஞ்சம் கொஞ்சமாகக் குப்பைகளைக் கொட்டக் கொட்ட, இவ்வாறு மிதித்து, ஒவ்வொரு படலங்களாக, படலத்தின் மேல் படலமாக ஆக்கிக்கொண்டே வந்தது. கிணற்றின் ஆழ்ந்த பள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பி உயர்ந்தது. கிணறு முழுக்க இவ்வாறு குப்பை கூளங்கள் நிரப்பப்பட்டதும், கழுதை மேலே வந்துவிட்டது.

கழுதையின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டிய விவசாயிகள், "காலில் அடிபட்டிருக்கும் என்று சொன்னாயே! ஆனால், அதற்கு கால்கள் நன்றாகத்தானே இருக்கின்றன! பிறகு ஏன் அது அப்படிக் கத்தியது?" என்று ஆச்சரியத்தோடு கேட்டனர்.

"அவ்வாறு கத்தினால்தான் உதவி கிடைக்கும் என்று அவ்வாறு செய்திருக்கும்" என்றார் அகமது.

"அது சரி, குப்பை கூளங்களை மிதித்துக் கிணற்றை நிரப்ப அதற்கு எப்படித் தெரிந்தது?"

"விலங்குகள், பறவைகள், பிராணிகள், தாவரங்கள், நுண்ணிய புழு - பூச்சிகள் ஆகியவற்றுக்குக் கூட, நம்மைப்போன்ற ஆறாவது அறிவு இல்லாவிட்டாலும், ஐந்தறிவு அல்லது அதற்குக் குறைவான அறிவு இருக்கத்தான் செய்கிறது. சூழலுக்குத் தகுந்தபடி தம்மைத் தகவமைத்துக் கொள்ளவும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடி செயலாற்றவும் அவற்றால் இயலும். அதை முயற்சித்துப் பார்க்கலாம் என்பதற்காகத்தான் நான் குப்பை கூளங்களைக் கொட்டச் செய்தேன். எனது கழுதையும் அவ்வாறே செயல்பட்டு மேலே வந்துவிட்டது!" என்றார் அகமது.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT