- தா.சரவணா
தமிழக அரசால் டாஸ்மாக் நிர்வாகம் இயக்கப்படுகிறது. இந்த வகையில் மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. அரசுக்கு வரும் வருவாய்களில் டாஸ்மாக் வருவாய் பிரதானம் என்றால், அது மிகையில்லை. இந்நிலையில் இந்தக் கடைகளில் மது வாங்கி குடிக்கும் நபர்கள், காலி பாட்டில்களை எங்கு அமர்ந்துள்ளனரோ அங்கேயே உடைத்துப் போட்டுச் செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் அமர்ந்து மது அருந்தும் இடம் என்றால் விவசாய நிலங்களுக்கு அருகாமைதான். இதனால், இந்தப் பகுதியில் விவசாயப் பணிகள் செய்யும் நபர்களின் கால்களில் உடைந்த கண்ணாடித் துண்டுகள் குத்தி, அவர்கள் பணி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
இது தவிர்த்து, மலைவாசஸ்தலங்களில் சுற்றுலா செல்லும் நபர்கள், அங்கு வனப்பகுதியில் அமர்ந்து மது அருந்தி விட்டு, போதையில் பாட்டில்களை உடைத்துச் செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் வந்து செல்லும் யானை போன்ற விலங்குகளின் கால்களில் உடைந்த கண்ணாடி துண்டுகள் குத்தி, உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.
இதைக் கருத்தில் கொண்ட அரசு, மலைவாசஸ்தலங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யும் போது, அதற்கு 10 ரூபாய் அதிக கட்டணம் வசூலிக்கிறது. அதன் பின்னர் அந்த மது பாட்டில் காலியானதும், அந்தக் கடைக்குச் சென்று காலி பாட்டிலை திரும்ப கொடுத்தால், நமக்கு கூடுதல் தொகையாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாய் திருப்பி தரப்படும் என அறிவித்து, அந்த திட்டத்தை இரு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இது குடிமகன்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கி வரும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலமாக மலைவாசஸ்தலத்தில் இருக்கும் கடைகளுக்கு மது பாட்டில்கள் அனுப்பி வைக்கப்படும் போது, அனுப்பி வைக்கப்படும் அனைத்து பாட்டில்களிலும் அதற்கான பிரத்யேக ஸ்டிக்கர்கள் ஒட்டி அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், வனப்பகுதிகளில் மது பாட்டில்களால் விலங்குகள் காயமடைவது வெகுவாக குறைந்துள்ளது.
இதிலும் சில பிரச்னைகள் காணப்படுகிறது. குறிப்பாக மலை வாசஸ்தலங்களுக்கு செல்லும் நபர்களில் பலர் தாங்கள் செல்லும் போதே மது பாட்டில்களை வெளியிடங்களில் வாங்கிச்சென்று விடுகின்றனர். அந்த பாட்டில்களை உடைக்காமல் அங்கேயே போட்டும் செல்கின்றனர். இதை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எடுத்து, டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று பாட்டில்களை கொடுத்து, பணம் கேட்டு நச்சரிக்கும் நிலையும் காணப்படுகிறது. இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் அவர்களிடம் புரிய வைக்க போராட வேண்டியுள்ளது. ஆனாலும், பலர் இதை புரிந்து கொள்ளாமல், டாஸ்மாக் ஊழியர்களுடன் தினம்தோறும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்னையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த நல்ல திட்டத்தை, மாநிலம் முழுவதும் அமல்படுத்தினால், மனிதர்களும் மது பாட்டில்களால் ஏற்படும் அபாயத்தில் இருந்து தப்பிப்பார்கள். அதனால் அரசு, இதற்கு நல்ல தீர்வு கண்டு, மலைவாசஸ்தங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட நடைமுறையை, மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும்.